
பொதுவா சித்திரை வைகாசி மாதங்களை வசந்த காலம்னு கொண்டாடுவாங்க அது ஏன்னு எனக்குத் தெரியலை.எனக்கு
விடியற்காலைல பனி பெய்யும் மார்கழி மாசம்தான் ரொம்பப் பிடிக்கும்.
இதைத்தான் முன்பனிக்காலம்னு சொல்வாங்க இல்லை?
முதல் நாளே அம்மா கிட்ட சிலேட் பலகைலயோ, கூடத்துலயோ, புள்ளி வச்சு கோலம் போடக் கத்துப்பேன், மறுநாள் காலைல 6 மணிக்குள்ளே வாசல் தெளிச்சு கோலப்பொடில அதே கோலத்தை வாசல்ல போட்டுட்டு, ஒரு கத்து வாசல்ல இருந்தே “அம்மா வந்து பாரேன்”. அம்மா ஒரு புன்முறுவலோட அப்ரூவ் பண்ணினாதான் அப்படியொரு சந்தோஷம்.அம்மா மட்டுமா?
கடைக்கண்ணால் எதிர் வீட்டையும் பாப்பேன்,கட்டை விரலையும், சுட்டுவிரலையும் மடக்கி அப்ரூவல் அங்கே இருந்தும் வரும் அதுல அந்த விடியற்காலை குளிர்லயும் , இன்னும் கொஞ்சம் குளிர்ந்து போகும்.ஒரு குதியோட உள்ளே போவேன்.
இப்ப உங்களுக்கு ஆர்வம்தானே? நான்யாரு, என் அம்மா யாருனு தெரிஞ்சிக்க?ஏய் வேற என்ன தெரியணுமாம்.
நான்தான்பா சுசீலா, என் அம்மா பாக்யலக்ஷ்மி, அப்பா வெங்கடேஷ், ஒரு வாலுத் தம்பி வாசு.அரும்பாக்கம் பாஞ்சாலிஅம்மன் கோவில் பக்கத்துல வீடு. வைஷ்ணவா காலேஜ்ல ஆர்ட்ஸ் படிக்கறேன்.போறுமா?
என்னத்தையோ மறைக்கறேனா? அதெல்லாம் ஒண்ணும் இல்லை.
யாரோ ஒரு பையன் எக்சைஸ் பண்ண ஜிம்முக்கு போறதுக்கு முன்னால
கொஞ்சம் நின்னு நான் போட்ட கோலத்தை ரசிச்சா அதுல, என் குத்தம் என்ன இருக்கு, அது என்ன ரொம்ப பெரிய விஷயமா உங்க கிட்ட சொல்ல!
அம்மா,”ஏண்டி ஒரு நாப் போல வாசல்ல இருந்து கத்தறே, நானா வந்து பாக்க மாட்டேனா உன் கோலத்தை?சரி இந்தச் செம்மண் பூச்சை மட்டும் அகலமா தீத்தாம மெலிசா போடு இன்னும் சூப்பரா இருக்கும்”
இந்த வயசு, இந்த நாட்கள், இப்படியே போயிட்டு இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்.சந்தோஷமா இருந்தா கடவுளுக்கே பொறுக்காதோனு கோவமா வருது இப்ப.
அதுக்காகக் கிழிஞ்ச புடவையோட இட்லிக் கடை வச்சு குடும்பத்தைக் காப்பத்தறேனோனு நீங்களா கற்பனை பண்ணிக்காதீங்க.
நான் இப்ப செளக்யமாதான் இருக்கேன் என் வீட்டுக்காரர் பெரிய ஹார்ட் சர்ஜன்.நுங்கம்பாக்கத்துல பெரிய பங்களா, கார், வேலைக்கு ஆட்கள். குழந்தையா? ம்ஹூம் அந்தப் பாக்யம்லாம் இல்லை, பாவம் ஹார்ட் சர்ஜனுக்கு நிக்க நேரமில்லை நீங்க வேற. ஒவ்வொரு நிமிஷமும் அவருக்குப் பல ஆயிரம் ரூபா ஆச்சே.
அப்பப்ப அந்த அரும்பாக்க தினங்கள் ஞாபகம் வரும். இனிமே சொன்னா என்ன, எனக்கும் இப்ப 35 வயசு ஆகப் போறது. அந்தப் பாஸ்கரன் என் கோலத்தை ரசிச்சான், என் வயது, அழகு அத்தனையையும்தான்.அவனை மட்டும் சொல்லி என்ன பிரயோஜனம்,
நான் என்ன ஒழுங்கு.நானும்தான் அவனைத் தினமும் எதிர்பாத்தேன், நான் காத்தாலை கோலம் போடறப்ப, காலேஜ் போறதுக்கு முன்னாடி ,வீட்டு வாசல்ல பைக்கை நிறுத்தி மஞ்சள் துணியால துடைச்சிட்டே கையை யாருக்கும் தெரியாம அசைப்பானே
நானும் முகத்தைத் துடைச்சிக்கறாப்பல லேசா கைக்காட்டிட்டுப் போவேன். இந்த அசட்டு செய்கைகள்லயே அவ்வளவு சந்தோஷம் பூரிச்சு பொங்கும்.
ஒரு வருஷத்துக்கும் மேல ஆச்சு ஒரு வார்த்தை பேசினதில்லை, நான்தான் பொண்ணு அவனாவது தைரியமா பேசலாம், இல்லை சுஶ்ரீனு ஒத்தர் காதல் கதைகள்லாம் எழுதறாரே அதுல வராப்பல ஒரு நாலு வரி கிறுக்கி லெட்டர் கொடுக்கலாம், ம்ஹூம் அதுவும் ஒரு மக்குப் பண்டாரம்.
ஒரு நாள் வாசு வந்து,”அக்கா, எதிர் வரிசைல இருக்காரே ஒரு அண்ணன் நீ காலேஜ் போறப்ப பைக் துடைச்சிட்டு நிப்பாரே”
“டேய் அவர் அண்ணன் இல்லை, மாமானு சொல்லணும்”
“போக்கா, மாமான்னா நம்ம சோமு மாமா மாதிரி சொட்டைத் தலையோட இருக்கணுமே”
“போடா, லூசு இது வேற மாதிரி, சரி சொல்லு அவர் ஏதாவது உன் கிட்ட பேசினாரா? அக்கா கிட்ட கொடுனு எதாவது கொடுத்தாரா”
“அதெல்லாம் இல்லைக்கா, பைக் ரேஸ் விடப் போறோம் மெரினால பாக்க வரியானு கேட்டார்”
“சீச்சீ அதெல்லாம் சட்டப்படி தப்பு நீங்க ரேஸ்க்கு போக் கூடாது அக்காவுக்குப் பிடிக்காதுனு சொல்லிடு சரியா”
“சரிக்கா, இப்பவே போய்ச் சொல்றேன்”
அவன் சொன்னானா இல்லையானு தெரியறதுக்குள்ளே இடி மாதிரி அந்தச் செய்தி வந்தது.நள்ளிரவில் கடற்கரைச் சாலையில் மோட்டார்சைக்கிள் ரேஸ் நடத்திய 4 பேர்களில் சாலை டிவைடரில் படு வேகத்தில் நிலை தடுமாறி மோதிய இளைஞர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பலி.
அரும்பும் முன்னே கருகிய காதல் என்னுது.
அப்பா, அம்மா சொன்ன டாக்டரை எதிர்ப்போ விருப்போயின்றி கல்யாணம் பண்ணிண்டேன்.தம்பிக்கும் தன் ஆஸ்பத்திரி நிர்வாகத்துலயே வேலை போட்டுக் கொடுத்திருக்கார்.பங்களா முன்னால சின்னத் தோட்டம் இருக்கு, என் கூட விளையாடப் போமரேனியன் நாய்க்குட்டி இருக்கு புசுபுசுனு. வீட்லயே ஹோம் தியேட்டர் இருக்கு, வேற என்ன வேணும் வாழ்க்கைல ஒரு பொண்ணுக்கு. அழறேனா இல்லையே சந்தோஷமாதான் இருக்கேன்.
டாக்டர் பிரபல ஹார்ட்சர்ஜன் பாஸ்கரன் எம்.பி.பி.எஸ், எம். எஸ்., எஃப்.ஆர்.சி.எஸ் இன்னும் என்னன்னவோ பின் ஒட்டுக்கள் அவரோட மனைவியாச்சே அழ முடியுமா.
இந்த முன் பனிக் காலம், கோலம், குதூகலம் எல்லாம் வெட்டிப் பேச்சு.
