முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி /விடுமுறை

மே மாதத்தின் முதல் வாரம். சவிதாவுக்கு அலுவலகத்தில் சலுகை விடுப்பு. ஐம்பது வயதைக் கடந்த அவள், பள்ளி ஒன்றில் எழுத்தராகப் பணியாற்றுகிறாள். ஆண்டு முழுவதும் ஓய்வின்றி உழைத்த களைப்பு அவள் முகத்தில் தெளிவாகத் தெரிந்தது. வீட்டுப் பணிக்கு உதவியாளர் இல்லாத காரணத்தால், வீடு முழுவதும் பொருள்கள் கலைந்தும், தூசு படிந்தும் காணப்பட்டன.

அதிகாலை ஏழு மணி. தொலைபேசி ஒலித்தது. மகள் சுமி அழைத்தாள்.

“அம்மா, நாளைக்கு நிலாவுக்கு ஸ்கூல் லீவு விட்டுட்டாங்க. உனக்கும் லீவுதான? அவளைக் கொண்டு வந்து விடவா?”

சவிதாவின் மனம் மகிழ்ந்தது. பேத்தி நிலாவின் வருகை வீட்டிற்குப் புத்துணர்வு அளிக்கும். ஆயினும், வீட்டின் தற்போதைய நிலையை எண்ணித் தயங்கினாள். நிலாவுக்குத் தூசு ஒவ்வாமை உண்டு.

“இரு சுமி. நான் வீட்டை முழுமையாகத் தூய்மை செய்ய ஒரு நிறுவனத்தை அழைத்திருக்கிறேன். நாளை முழுவதும் அவர்கள் சுத்தம் செய்வார்கள். நாளை மறுநாள் காலையில் நிலாவை அழைத்து வா. குழந்தைக்கு ஒத்துக்கொள்ளாது.”

அருகில் செய்தித்தாள் வாசித்துக்கொண்டிருந்த கணவர் கணேசன், கடுமையான குரலில் குறுக்கிட்டார்.
“என்னம்மா நீ? பேத்தி வரேன்னு ஆசையாச் சொல்றா. ரெண்டு நாள் கழிச்சு வான்னு சொல்றியே? அந்தக் குழந்தை ஏங்கிப் போயிடும். நான் இப்பவே சுமிக்குச் சொல்றேன்.”

சவிதா மறுப்பு தெரிவிப்பதற்குள், கணேசன் அலைபேசியை எடுத்தார்.
“சுமி, அம்மா சொல்றதைக் கேட்காத. நிலாவை இப்பவே கூட்டிட்டு வந்துடு. தாத்தா அவளுக்குச் சாக்லேட் வாங்கி வச்சிருக்கேன்னு சொல்லு.”

சவிதா எதுவும் பேசவில்லை. ஒரு வருட காலமாகத் தனித்து உழைத்த அவளது நிலையைக் கணவர் புரிந்துகொள்ளவில்லை. மறுத்துப் பேசினால் வீண் வாக்குவாதமே மிஞ்சும் என்று அமைதியானாள்.

நண்பகல் வேளையில் நிலா வந்து சேர்ந்தாள். வீடு முழுவதும் மகிழ்ச்சி ஆரவாரம் நிறைந்தது.
“தாத்தா, எனக்குக் கதை சொல்லு.”
“பாட்டி, விளையாட வா.”

அன்றைய இரவு மூவரும் மகிழ்ச்சியுடன் உறங்கச் சென்றனர்.

மறுநாள் காலை. நிலா தொடர்ந்து தும்மத் தொடங்கினாள். கண்கள் சிவந்து நீர் வழிந்தது. இடது கண் இமை சிறிது வீங்கியிருந்தது. ஏதோ பூச்சி கடித்திருக்க வேண்டும்.
“பாட்டி, கண்ணு எரியுது” என்று நிலா அழுதாள்.

சவிதா பதற்றத்துடன் மருத்துவரிடம் அழைத்துச் சென்றாள். மருத்துவர் பரிசோதித்துவிட்டு, “தூசு ஒவ்வாமை. பூச்சிக் கடியும் உள்ளது. வீட்டைத் தூய்மையாக வைத்துக்கொள்ளுங்கள்” என்று அறிவுறுத்தினார்.

வீடு திரும்பியதும் கணேசனின் மனநிலை முற்றிலும் மாறியிருந்தது. கோபத்துடன் சவிதாவைக் கடிந்துகொண்டார்.
“பார்த்தியா? நீ குழந்தையைச் சரியாப் பார்த்துக்கல. வீட்டையும் சுத்தமா வச்சுக்கத் தெரியல. இப்ப பாப்பா கஷ்டப்படுறா.”

சவிதாவின் மனம் உடைந்தது. ஓராண்டு கால உழைப்பும், களைப்பும், ஆதங்கமும் ஒருசேரத் தொண்டையை அடைத்தன. தணிந்த குரலில் கூறினாள், “இதற்காகத்தான் நான் இரண்டு நாள் அவகாசம் கேட்டேன். வீட்டைச் சுத்தம் செய்த பிறகு குழந்தையை அழைக்கலாம் என்று. நீங்கள்தான் நான் சொல்றதைக் கேட்காமல் உடனே வரச் சொன்னீர்கள்.”

கணேசன் முகத்தைத் திருப்பிக்கொண்டார். “எப்பப் பார்த்தாலும் ஒரு சாக்கு. தப்பு பண்ணிட்டு இப்ப என் மேல பழி போடறியா?”

அவளது விளக்கம் காற்றில் கரைந்தது. ஒரு வருடமாக ஓய்வின்றி அலுவலகம், வீடு, சமையல் என அனைத்துப் பொறுப்புகளையும் தனித்துச் சுமந்தது அவளுக்கு மட்டுமே தெரியும். அந்த உழைப்பை, அந்தக் களைப்பைப் புரிந்துகொள்ள யாரும் இல்லை.

சவிதா மெல்ல எழுந்து கழிவறைக்குச் சென்றாள். கதவைத் தாழிட்டுக்கொண்டு கண்ணாடியில் தன் பிம்பத்தைப் பார்த்தாள். தலையில் வெள்ளிய கேசம். கண்களுக்குக் கீழே கருவளையம். இந்த ஒரு வார விடுமுறையிலாவது சற்று ஓய்வெடுக்கலாம் என்று எண்ணியிருந்தாள். பேத்தியுடன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று விரும்பினாள். அதற்கு முன் வீட்டைத் தூய்மை செய்ய நினைத்தது குற்றமா?

வெளியில் நிலாவின் அழுகுரல் கேட்டது. கண்களைத் துடைத்துக்கொண்டு வெளியே வந்தாள். குழந்தையை மடியில் இருத்தி, “அழக்கூடாது கண்ணு. அம்மம்மா மருந்து போட்டுவிடுறேன்” என்று தேற்றினாள்.

அன்று இரவு, நிலா உறங்கிய பின், சவிதா தானாகவே சமையலறையைச் சுத்தம் செய்யத் தொடங்கினாள். மறுநாள் தூய்மைப் பணியாளர்கள் வருவதற்குள் முடிந்தவரை பொருள்களை ஒழுங்குபடுத்த வேண்டும். கணேசன் கூடத்தில் உறங்கிக்கொண்டிருந்தார்.

பாத்திரங்களைக் கழுவும்போது சவிதாவின் மனம் எண்ணங்களால் அலைக்கழிந்தது. ஒரு குடும்பத்தை நிர்வகிப்பதற்கு எவ்வளவு உழைப்பு தேவை என்பதை ஏன் யாரும் புரிந்துகொள்வதில்லை? அலுவலகப் பணியையும், வீட்டுப் பணியையும் ஒருசேரச் செய்கிறோம். சிறிது உதவியோ, அவகாசமோ கேட்டால், சோம்பேறி என்ற பட்டம் கிடைக்கிறது.

மறுநாள் தூய்மைப் பணியாளர்கள் வந்தனர். நவீன கருவிகளின் உதவியுடன் வீடு முழுவதும் தூய்மை செய்தனர். மெத்தையின் அடியிலும், பீரோவின் பின்னாலும் பதுங்கியிருந்த தூசும், பூச்சிகளும் அகற்றப்பட்டன. வீடு புதுப்பொலிவு பெற்றது.

நிலா கண்விழித்து, “அம்மம்மா, வீடு நல்லா வாசனையா இருக்கு” என்றாள்.

சவிதா புன்னகைத்தாள். “ஆமாம் கண்ணு. இனிமேல் உனக்குத் தும்மல் வராது.”

மாலையில் சுமி அழைத்துச் செல்ல வந்தாள். “அம்மா, என்னை மன்னிச்சுடு. நான்தான் அவசரப்பட்டு நிலாவை அனுப்பிட்டேன். அவளுக்கு உடம்புக்கு முடியாமப் போச்சு.”

சவிதா மகளின் தலையை வருடினாள். “இல்லையடா. உன் தவறு இல்லை. நான்தான் முன்கூட்டியே எல்லாவற்றையும் சரி செய்திருக்க வேண்டும். நேரம் கிடைக்கவில்லை.”

கணேசன் வாயிலில் நின்று, “சரி சரி, சீக்கிரம் கிளம்புங்க. பேருந்து கிடைக்காது” என்றார். அவர் முகத்தில் குற்ற உணர்வின் சாயல் இருந்ததா என்பதைச் சவிதாவால் கணிக்க முடியவில்லை.

புறப்படும் வேளையில் நிலா, “அம்மம்மா, நான் அடுத்த விடுமுறைக்கும் வருவேன். அப்போது சுத்தமான வீட்டில் விளையாடலாம்” என்றாள்.

சவிதா தலையசைத்தாள். ஒரு சிறு குழந்தைக்குக்கூடப் புரிந்த உண்மை, பெரியவர்களுக்குப் புரியவில்லையே என்ற வருத்தம் அவள் மனத்தில் எழுந்தது.

அனைவரும் சென்ற பின், வீடு நிசப்தமானது. தூய்மையான வீடு. ஆனால் சவிதாவின் மனம் மட்டும் கலக்கத்துடன் இருந்தது. ஒரு வார விடுமுறையில், இரண்டு நாட்கள் பேத்தியுடன் மகிழ்ச்சி, மீதமுள்ள நாட்கள் வீட்டைத் தூய்மை செய்வதும், குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதுமாகக் கழிந்தன.

அவள் சாய்வு நாற்காலியில் அமர்ந்தாள். கண்களை மூடினாள். அடுத்த ஆண்டு விடுமுறை வரும்போது, முதல் பணியாக வீட்டைத் தூய்மை செய்ய வேண்டும். யார் என்ன கூறினாலும், தன் நிலையில் உறுதியாக இருக்க வேண்டும். தன் உடல்நலம், தன் மன அமைதி, தன் பேத்தியின் ஆரோக்கியம் ஆகியவற்றின் முக்கியத்துவம் தனக்குத்தான் தெரியும்.

கணேசன் குரல் கொடுத்தார். “சவிதா, ஒரு காபி போடு.”

சவிதா மெல்ல எழுந்து சமையலறைக்குச் சென்றாள். புதிதாக மின்னிய பாத்திரத்தை எடுத்தாள். நீர் ஊற்றினாள். அடுப்பைப் பற்ற வைக்கும்போது தனக்குள் உறுதி கூறிக்கொண்டாள்: ‘இனிமேல் என் குரல் காற்றில் கரைய அனுமதிக்க மாட்டேன்.’

சாளரத்தின் வழியே மே மாதத்து வெயில் உள்ளே பரவியது. தூய்மையான இல்லம் ஒளியில் மின்னியது. ஆனால் அந்த ஒளி சவிதாவின் அகத்தில் பரவ இன்னும் காலம் தேவைப்படும். புரிதல் இல்லாத இடத்தில் விளக்கம் அளிப்பது எத்தனை வலி நிறைந்தது என்பதை அவள் மட்டுமே அறிவாள்.

“புரியாத புண் மனிதரிடம்/
மொழிகளே வீண்/
பரியாய்ப் பணி செய்ய/
பாங்காய் மௌனம் பூண்”,
உள்ளே தன்முனை ஓடியது.

One Comment on “முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி /விடுமுறை”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன