
கல்யாணம் முடிந்து காலியான சத்திரம் போல் வெறிச்சோடிக் கிடந்தது பள்ளிக்கூடம். ஒரு மணி நேரத்திற்கு முன்னர் ஊரிலேயே மிகவும் மகிழ்ச்சியும் கூச்சலும் களேபரமுமாக இருந்த இடம் அது என்று சொன்னால் நம்புவதற்குக் கடினம்தான். கடும் குளிர் பிரதேசங்களில் குளிர் காலத்தை கழிப்பதற்கு சில விலங்குகள் ஹைபர்னேஷன் எனப்படும் நீள் தூக்கத்திற்கு சென்று விடுவதைப் போல கோடைக்கால ஒன்றரை மாத உறக்கத்திற்கு பள்ளிக்கூடம் தயாராகிக் கொண்டிருந்தது. கந்தசாமி ஓவ்வொரு வகுப்பறையாக பார்த்து பூட்டிக் கொண்டு இருந்தார்.
கந்தசாமிக்கு நெடிய, கம்பீரமான உருவம். காக்கி உடையில் கையில் விசில் மற்றும் சில சமயங்களில் சிறிய கம்புடன் அவரைப் பார்க்கும்போது பிள்ளைகளுக்கு சற்று பயம்தான். பள்ளியின் காவலாளர் என்கிற பதவியில் அவர் பெயர் பதிவேட்டில் இருந்தாலும் முப்பதாண்டுகளுக்கும் மேலாக அங்கு ஊழியர் என்பதினால் அவர் பள்ளியின் இன்றியமையாத ஒரு அங்கமாக மாறிப் போயிருந்தார். மூன்று வகுப்பறைகள் உள்ள ஓட்டுக் கட்டிடமாக இருந்த பள்ளி இன்று நாற்பதுவகுப்பறைகள் கொண்ட பெரும் கட்டிடமாக வளர்ந்து நிற்பதின் ஒரே தொடர் சாட்சியாகவும் அவரே இருந்தார். பள்ளியில் அவ்வப்போது ஏற்படும் மராமத்து வேலைகள், பெயிண்ட் அடிப்பது, ஆண்டுவிழா தொடர்பான பணிகளுக்கு ஆட்கள் அமர்த்தி வேலை வாங்குவது, புதிதாக வரும் ஆசிரியர்களுக்கு வீடு பார்த்துக் கொடுப்பது, வேண்டிய உதவிகளைச் செய்வது என்று எல்லா வேலைகளுக்கும் அவரே பொறுப்பு. ஊரிலும் அவரைத் தெரியாதவர் கிடையாது. ஒரு சமயத்தில் ஒரு இளம் ஆசிரியர் அவர் வயதையும் அவர் செய்யும் வேலைகளையும் வைத்து அவரை வாட்ச்மேன் சார் என்று அழைக்க, நாளடைவில் அந்த பெயரே அவருக்கு நிலைத்து, சொந்தப்பெயர் மறந்து போய், இப்போது இருக்கிற தலைமை ஆசிரியர் உட்பட பள்ளியிலும் ஊரிலும் அனைவரும் அவரை ஹிஸ்டரி சார், தமிழ் சார் என்பது போல வாட்ச்மேன் சார் என்றே அழைத்தார்கள். அது மாணவர்களிடையே அவரின் மரியாதையை மேலும் கூட்டி வைத்து இருந்தது.
கந்தசாமி இரண்டாம் தளத்தில் இருந்த வகுப்பறைகளை பூட்டிக்கொண்டு வராந்தாவில் நடந்து வரும் போது எதேச்சையாக கீழே மைதானத்தின் பக்கம் பார்வையைச் செலுத்தினார். தூரத்தில் பள்ளியின் மெயின்கேட் மூடி இருந்தது. உள்ளே ஒரு புறம் அவர் நட்டு வைத்து இன்று கிளை பரப்பி செழித்து நிற்கிற வேப்பமரமும் மற்றொரு புறம் அவர் வருவதற்கு முன்னரே இருக்கிற பெரிய ஆலமரமும் அசைந்தபடி ஒன்றோடொன்று பேசிக்கொண்டிருந்தன. வேப்பமரத்தின் கீழே கண்ணன் பந்தை தூக்கிப்போட்டு பிடித்து விளையாடிக் கொண்டிருந்தான். இங்கிருந்து பார்க்கையில் பந்தை மேலே தூக்கிப் போடும்போது மரம் அதை பிடித்துக் கொள்வது போலவும் கீழே விழுகிற பந்தை அவன் பிடிக்கையில் மரமே அவனுக்கு பந்தை போடுவது போலவும் அவருக்குத் தோன்றியது. அவர் சிரித்துக் கொண்டார். கண்ணனின் மேல் அவரது பார்வை நிலைத்தது. அவனைப் பார்க்கும் போது எல்லாம் மனதில் தோன்றும் சந்தோஷம் அப்போதும் துளிர்த்தது. ஏழெட்டு மாதங்களில் இந்த பயல்தான் என்னை எப்படி மாற்றி விட்டான் என்று நினைத்துக் கொண்டே படிகளில் இறங்கி முதல் தளத்திற்கு வந்தார். மனம் கண்ணனை முதல் முதலில் சந்தித்த தினத்திற்குச் சென்று அசை போடத் தொடங்கியது .
*
பொதுவாக நான்கு மணிக்கு பள்ளி முடிந்தவுடன் அரை மணி நேரத்தில் மாணவர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். ஐந்து மணிக்கு ஆசிரியர்களும் கிளம்பிச் சென்றுவிட, பள்ளி ஏறக்குறைய முழுதும் காலியாக இருக்கும். கந்தசாமி எல்லாவற்றையும் ஒருமுறை சரி பார்த்துவிட்டு மெயின்கேட்டை பூட்டிக்கொண்டு வெளியே வருகையில் நேரம் ஐந்தரையைத் தாண்டிவிடும். அன்றும் அதே போல் அவர் கீழே வந்து கொண்டிருக்கையில் வேப்பமரத்தின் அடியில் ஒரு சிறுவன் நின்று கொண்டிருந்தான். அந்த வருடம்தான் ஆறாம் வகுப்பில் அவன் சேர்ந்து இருப்பது அவருக்குத் தெரியும். பள்ளி காலியாகி விட்ட நேரத்தில் எதற்கு இவன் இங்கே இருக்கிறான் என்று யோசித்தபடி அவன் அருகே சென்றார். பத்து வயதுக்கு எட்டு வயதுதான் சொல்லலாம் போல மெலிந்த சிறிய உருவம். பார்த்தவுடன் பிடித்து போகிற மிகக் களையான முகம். ஆனால் அந்த முகத்திற்கும் வயதுக்கும் பொருந்தாமல் சிறிய கண்கள் இரண்டும் ஏக்கமா, பரிதாபமா என்று புரியாமல் சற்று கலங்கி இருந்தன.
” உன் பேரென்ன? ஏம்பா இன்னும் வீட்டுக்கு போகாம இங்கேயே நிக்கிற?”
சிறுவன் சற்று மிரண்ட விழிகளுடன் அவரையே பார்த்துக் கொண்டு இருந்தான்.
” டேய்… உன்னைத்தான்…என்ன ஆச்சு? எதாவது புத்தகம் தொலைச்சுட்டியா? இல்லேன்னா டீச்சர்கிட்ட அடி வாங்கிட்டு வீட்டுக்கு போக பயந்துட்டு நிக்கிறியா?” சற்று கண்டிப்புடன், அதே சமயம் கனிவுடனும் கேட்டார்.
” தாத்தா…”
சட்டென்று கந்தசாமி தன்னையும் அறியாமல் பின்னே திரும்பி பார்த்தார். யாரை கூப்பிடுகிறான்?
” தாத்தா…உங்களைத்தான்” என்றான் சிறுவன் மெல்லிய குரலில்.
அவருக்கு ஒரு நிமிடம் விதிர்விதிர்த்து விட்டது. சிலீர் என உடல் முழுதும் ஒரு குளிர் பரவ, அதே சமயம் நெஞ்சு படபடக்க வியர்த்துக் கொட்டுவது போன்றும் இருந்தது. அப்பா முருகா, வாழற வயசில் அப்பான்னு கூப்பிட ஒரு பிள்ளையைக் கொடுக்காம இப்போ சாகற வயசில் ஒரு பிள்ளையை அனுப்பி தாத்தான்னு கூப்பிட வக்கிறியே, உன் விளையாட்டை என்னன்னு சொல்றது என்று நினைத்துக் கொண்டார். குரல் அவரையும் அறியாமல் குழைந்தது.
” என்ன விசயம்… வாயைத் திறந்து சொல்லு”.
” வந்து…வந்து…என் வீடு உங்க வீட்டைத் தாண்டித்தான் இருக்கு. நீங்க வீட்டுக்கு போகும் போது உங்க கூடவே வரட்டுமா?”
அவருக்கு சிறுவனின் அந்த கோரிக்கை புதிராக இருந்தது. ஒன்றும் புரியவில்லை.
” ஏம்பா, உன் கூட வர்ற பசங்க விட்டுட்டு போயிட்டாங்களா?”
இல்லை என்று தலை ஆட்டினான்.
நேரமாகிக் கொண்டிருந்ததால் போகிற வழியில் பேசிக் கொள்ளலாம் என்று முடிவு செய்தவராய் வா, போகலாம் என்று அவர் சைக்கிளை எடுத்தார்.
” ஏறி உக்காரு”
“வேணாம்…நீங்க ஓட்டுங்க. நான் அப்படியே பக்கத்துல ஓடி வந்துடுவேன்”.
கந்தசாமிக்கு அவனை எப்படி நினைப்பது என்று புரியவில்லை. எவனாவது சைக்கிள் கூடவே சும்மா ஓடி வருகிறேன் என்று சொல்வானா? கிறுக்குப் பயலாக இருக்கிறானே என்று யோசித்தபடியே அவனிடம் சொன்னார்.
“டேய், உனக்காக ரெண்டு கிலோமீட்டர் என்னால சைக்கிளை உருட்டிக்கிட்டு நடக்க முடியாது. மரியாதையா ஏறி உக்காரு”.
சிறுவன் சிறிது தயக்கத்துடன் ஏறி உட்கார்ந்தான். அவன் ஏறிய விதமே அவனுக்கு சைக்கிளில் பின்னால் அமர்ந்து செல்வது பழக்கம் இல்லை என்று உணர்த்தியது. கந்தசாமி அவன் கால்கள் இரண்டையும் சைக்கிளின் குறுக்கு கம்பியின் மேல் வைத்து விட்டார். பெடலை மிதித்தபடியே மெல்ல பேச்சு கொடுத்தார்.
” உன் பேரு சொல்லவே இல்லையே”
” எம் பேரு கண்ணன்”.
” நல்ல பேருதான். ஆமா, இவ்வளவு லேட்டா போனா வீட்ல கவலை படுவாங்கள்ல?”
” ஆறு மணிக்கு வருவேன்னு காலையிலேயே சொல்லிட்டேன் “.
அவனது தயார் பதிலால் ஒரு வினாடி துணுக்குற்றார். இவன் என்ன காலையிலேயே முடிவு பண்ணிக் கொண்டு வந்து விட்டான் போல இருக்கிறதே, இவன் மனதில் என்னதான் ஓடுகிறது என்று புரியவில்லையே என்று குழம்பினார்.
” சரி, சைக்கிள்ல உக்கார பயப்படறியே, உங்கப்பா கூட போனது இல்லியா?”
” இல்ல”.
” என்ன இல்ல, உங்கப்பா கிட்ட சைக்கிள் இல்லையா?”
” எங்கப்பா இல்ல”.
சட்டென்று பிரேக் போட்டு சைக்கிளில் இருந்து இறங்கி விட்டார். சிறு சிறு பதில்களால் அவரை திகைக்க வைத்துக் கொண்டு இருந்தான் கண்ணன்.
” என்னப்பா சொல்ற, உங்கப்பா இங்க இல்லையா?”
” எங்கப்பா செத்து போயிட்டாங்க தாத்தா”.
இன்று மழை பெய்தது என்கிற தொனியில் அவன் சொன்ன அந்த விஷயம் அவரை உலுக்கி விட்டது. உள்ளுக்குள் எதோ உடைந்து பெருகிற்று. அது அவரது அத்தனை புலன்கள் வழியேயும் உடைத்துக் கொண்டு கண்ணனை நோக்கி பாய்ந்தது. தினந்தோறும் பிள்ளைகளை பார்க்கிறவர்தான், பழகுகிறவர்தான், பல்வேறு செய்திகளை எதிர்கொண்டவர்தான். ஆனால் பார்த்து பேச ஆரம்பித்த பத்து நிமிடத்தில் அவரை இப்படி யாரும் புரட்டிப் போட்டது இல்லை. அவருக்கு அவனை அணைத்துக் கொண்டு ஒரு முத்தம் கொடுக்க வேண்டும் போல இருந்தது. தயக்கமாகவும் இருந்தது. கண்ணீர் மல்க அவனையே பார்த்துக் கொண்டு நின்றார்.
” என்னாச்சு தாத்தா?”
திரும்பவும் தாத்தா. இந்த முறை அந்த வார்த்தை அவரது ஊனுக்குள் ஊடுருவி அவரை அப்படியே பறக்க வைத்தது. கண்ணீரை உலர வைத்தது. சட்டென மனம் மனைவியிடம் தாவியது.
கந்தசாமி அவரது பெற்றோருக்கு ஒரே பிள்ளை. அத்தை மகள் கற்பகத்தை மணந்தார். அவளும் ஒத்தைதான். கல்யாணம் ஆகி நான்கைந்து வருடங்கள் ஆகியும் குழந்தை பிறக்காமல் இருக்கவே, போகிற வருகிற இடம் எல்லாம் அது பற்றிய பேச்சுக்களை எதிர்கொண்டு கற்பகம் களைத்துப் போனாள். விசேஷங்கள், உறவுகள் கூடும் இடங்கள் எல்லாம் தவிர்க்க ஆரம்பித்தாள். கந்தசாமி அவள் அளவுக்கு கவலைப்படவில்லை என்றாலும் மனைவி இல்லாமல் அவரும் எங்கேயும் போவதை நிறுத்திக் கொண்டார். நாளடைவில் உனக்கு நான் குழந்தை, எனக்கு நீ குழந்தை என்ற முடிவுக்கு அவர்கள் வந்து இருந்த போது உறவுகளுடன் தொடர்பு முற்றிலுமாக அற்றுப் போய் இருந்தது.
எனவே கண்ணன் தாத்தா என்று ஒரு அற்புதமான உறவை வைத்து அழைத்தது அவரை நெகிழ்த்தி விட்டது. அவருக்கு தனக்கு ஏற்பட்ட இந்த பூரிப்பு கற்பகத்துக்கும் கிடைக்க வேண்டும் என்று இருந்தது. இந்த பயல் அவளை ஒரு முறை பாட்டி என்று கூப்பிட வேண்டுமே என்று ஏங்கினார். ஆனால் உடனேயே சுதாரித்துக் கொண்டார். ஊர், பேர் தெரியாத பிள்ளை, எதற்கு என்னிடம் பழகுகிறான் என்றே புரியவில்லை, அதற்குள் ஏன் என்னவெல்லாமோ யோசிக்கிறேன் என்று நினைத்தார். இவனுடன் பேசியது போதும், ஒவ்வொரு பதிலிலும் நம்மை ஆட்டம் காண வைக்கிறான் என்று எண்ணியபடியே சைக்கிளை ஓட்டிக்கொண்டு அவர் வீடு இருக்கிற தெருமுனைக்கு வந்து சேர்ந்தார்.
” நிறுத்துங்க தாத்தா” என்று சொல்லி கண்ணன் இறங்கிக் கொண்டான்.
” ரொம்ப நன்றிங்க தாத்தா” என்று சொல்லியபடியே அவருக்கு இடது புறம் இருந்த தெருவில் புகுந்து ஓடி விட்டான்.
வீட்டுக்கு வந்தவர் குளித்து உடை மாற்றிய பின் மனைவியிடம் கண்ணனைப் பற்றி சொன்னார். அவன் தாத்தா என்று கூப்பிட்டதை மட்டும் தவிர்த்து விட்டார். அவளுக்கும் ஒன்றும் புரியவில்லை. யாரு வீட்டுப் பிள்ளை, வீடு எங்க எதுவும் கேட்காம வந்து இருக்கீங்க. நாளைக்கும் வரானா பாருங்க என்று மட்டும் சொன்னாள்.
மறுநாள் மாலை நான்கு மணிக்கெல்லாமே அவர் கண்ணனை எதிர்பார்க்கத் தொடங்கி விட்டார். நான்கே முக்கால் வரையிலும் அவனை காணோம். போய் இருப்பான் என்று எண்ணிக்கொண்டு தன் வேலைகளை பார்க்கச் சென்றார். ஐந்தேகால் மணிக்கு அவர் திரும்பி வந்தபோது கண்ணன் வேப்ப மரத்தினடியில் அமர்ந்து வீட்டுப்பாடம் எழுதிக் கொண்டு இருந்தான். மனதுக்குள் சந்தோஷமாக இருந்தாலும் வெளியில் அவனை பார்த்துத் திகைப்பது போல காட்டிக் கொண்டார் .
” என்ன…இன்னிக்கும் நீ வீட்டுக்கு கிளம்பலியா?”
கண்ணன் சிறிய புன்னகையுடன் மெல்லிய குரலில் “உங்களோடவே தினமும் வரட்டுமா” என்றான்.
அவர் அதைத்தான் விரும்பி எதிர்பார்த்து இருந்தாலும் சற்று யோசிப்பது போல பாவனை செய்தார்.
“ம்ம்…சரி, வா. ஆனா எனக்கு நீ யாரு, எங்க இருக்குற, உங்க அம்மா என்ன செய்றாங்க, வீட்ல யார் எல்லாம் இருக்காங்க, எல்லாம் சொல்லணும்”.
கண்ணன் தலையை ஆட்டினான். ஆனால் கண்களில் அது வரை இருந்த மலர்ச்சி போய் சற்றே மிரட்சி தெரிந்தது.
” கண்ணா, கொஞ்ச தூரம் நடந்து போவோம். சொல்லு “
சைக்கிளை உருட்டியபடியே கேட்டார்.
” என்ன சொல்ல தாத்தா?”
கடவுளே, கேட்ட கேள்விக்கு எல்லாம் கோர்வையாக பதில் சொல்ல மாட்டானா என்று நினைத்தவர் பத்து வயது பிள்ளைதானே என்று பதிலும் சொல்லிக் கொண்டார்.
“வீடு எங்க இருக்கு?”
” கொக்கிலிக் குப்பம்”
அடுத்த சிறிய அதிர்ச்சி. ஊரின் எல்லையில் இருக்கும் குப்பம் அது. அங்கு சுகாதார முகாம்கள் நடத்தவும் , பிள்ளைகளை படிக்க அனுப்பச் சொல்லியும் எத்தனையோ முறை அவர் பள்ளியில் இருந்து முயன்று இருக்கிறார்கள். ஆனால் ஒரு குழந்தை கூட படிக்க வந்தது இல்லை. இப்போது அங்கிருந்து கண்ணன் வருவதாக சொன்னது அவரால் நம்ப முடியவில்லை. கண்ணனை அந்த இடத்தில் பொருத்தி பார்க்க அவரால் முடியவில்லை.
” கண்ணா, நிஜமா சொல்லு. அங்கேயா உன் வீடு இருக்கு? நான் உன்னை அங்கே பார்த்ததே இல்லையே?”.
” நாங்க ரெண்டு மாசம் முந்திதான் அங்க வந்தோம் தாத்தா!”
அதற்குப் பிறகு அவர் கேட்ட கேள்விகளும் கண்ணன் சொன்ன பதில்களும் அவரை உலுக்கிப் போட்டு விட்டன. பேசாமல் சைக்கிளை ஓட்டிக் கொண்டு வந்து அவனை இறக்கி விட்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தார். அவர் நுழைந்ததுமே கற்பகம் ஆவலாக இன்னிக்கு கண்ணன் வந்தானா என்று கேட்டாள். தலையை ஆட்டியவர் பேசாமல் உள்ளே சென்று குளித்து உடை மாற்றிக் கொண்டு வந்து உட்கார்ந்தார். கற்பகமும் அவருக்கு சுக்கு காபியை கொடுத்து விட்டு அவர் முகத்தை பார்த்தபடி உட்கார்ந்தாள்.
” இன்னிக்கு அந்த பையன் சொன்னது எல்லாம் கேட்டு மனசு கனத்துப் போச்சு கற்பகம்”.
” சொல்லுங்க”.
கந்தசாமி அவர் கேட்டு ஜீரணிக்க முடியாமல் திணறிக் கொண்டு இருந்ததை அவளிடம் கொட்டத் தொடங்கினார் .
” அவனுக்கு பூங்குருத்து கிராமம். அவன் அப்பாவும் அம்மாவும் ஒருத்தரை ஒருத்தர் விரும்பி ஜாதி விட்டு ஜாதி கல்யாணம் கட்டி இருக்காங்க. ஊர்க் கட்டுப்பாடு போச்சுன்னு ஊரிலருந்து தள்ளி வச்சுட்டாங்க. ரெண்டும் ஊருக்கு வெளியே ஒரு குடிசையை போட்டுக்கிட்டு காலம் தள்ளி இருக்கு. அப்பன் பெயிண்டர் வேலை. வெளியூருக்கு வேலைக்கு போவானாம். அம்மா வயல் வேலை பார்க்குமாம். இவனை மட்டும் கொஞ்சம் வருஷம் ஆனதுனாலயோ என்னவோ ஊர் பள்ளிக்கூடத்துல சேர்த்துக்கிட்டாங்களாம். இது எல்லாமும் கொஞ்சம் கொஞ்சமா அவன் சொன்னதை வச்சு நானா புரிஞ்சுக்கிட்டது “.
” வேற ஊருக்கு போய் தொலைய வேண்டியதுதானே?”
” கேட்டேன். அவங்க குடிசையும் அது பக்கத்துல கொஞ்சம் பூமியும் அவன் அப்பனுக்கு சொந்தமாம். அதுலதான் அவன் அம்மா எதோ காய்கறி பயிர் பண்ணும் போல இருக்கு”.
” சரி, பிறவு என்ன ஆச்சு?”
“ரெண்டு மாசம் முன்னாடி வேல செய்யற எடத்துல சாரம் சரிஞ்சு விழுந்து கண்ணன் அப்பா மண்டையில அடிபட்டு ரெண்டு நாள் ஆஸ்பத்திரியில இருந்து செத்து போய் இருக்கான். அதுக்கு பிறகு ஊர்ல பசை உள்ளவன் எவனோ இவங்க இடம் அவனுக்கு சொந்தம்னு மிரட்டி இருக்கான். இந்த பொண்ணு தனியா என்ன செய்யும்? விட்டுட்டு வந்துடுச்சு போல இருக்கு”.
” என்னங்க இது அநியாயம், யாரை நம்பி வந்துச்சு? ஒருத்தன் கூடவா ஊர்ல இவங்க பக்கம் பேசல? இங்க பொழப்புக்கு என்ன பண்ணுது?”
” ஏண்டி, சின்ன பையன் இவ்வளவு சொல்றது கேக்கவே கஷ்டமா இருக்கு. அவன்கிட்ட என்னத்த துருவி துருவி கேக்க சொல்ற?”
” அதுவும் சரிதான்”.
” எனக்கு அவன் சொன்ன விஷயத்த விட, அவன் சொன்ன விதம் இருக்கு பாரு, அதுதான் தாங்க முடியல. என்னவோ தினமும் இதை பத்து பேர் கிட்ட சொல்லி பழகுனவன் மாதிரி, ஒரு உணர்ச்சியே இல்லாம பதில் சொல்லிட்டு வர்றான். கேக்கற எனக்கு வயித்தை பிசையுது. இந்த பிஞ்சு வயசுல இத்தனை கண்றாவியை பார்த்து இருக்கானே”.
” நாளைக்கு போகும் போது ஒரு டப்பால பிஸ்கட் போட்டு தாரன். ஸ்கூல் முடிஞ்சதும் அவனுக்கு திங்கக் கொடுத்து ஒரு டீ வாங்கிக் கொடுங்க”.
கந்தசாமிக்கு வெட்கமாக போய்விட்டது. பிள்ளையை கண்ணால் பார்க்காதவள் எவ்வளவு கரிசனமாக சொல்கிறாள், தனக்கு தோன்றவில்லையே, தாய்மை என்று சரியாகத்தான் சொல்லி இருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டார்.
மறுநாள் காலை எப்போதும் போல ஏழு மணிக்கு வீட்டை விட்டுக் கிளம்பினார். அப்போதுதான் நடுவில் டீக்கடையில் சற்று நின்று விட்டு எழரைக்கு ஸ்கூல் போய் சேரமுடியும். ஒன்பது மணி பள்ளிக்கு பிள்ளைகள் எட்டே கால் முதலே வரத் தொடங்கி விடுவார்கள். அவர் மெயின் ரோட்டை அடைந்த போது கண்ணன் அவருக்காக காத்துக் கொண்டு இருந்தான். நிஜமாகவே ஆச்சரியப்பட்டுபோனார்.
” என்னடா இவ்வளவு காலையில கிளம்பி நிக்கிற? “
” உங்க கூடவே வர்றேன் தாத்தா. நான் பள்ளிக்கூடத்துல உக்கார்ந்து படிச்சுக்குவேன்”. ஆர்வமும் நம்பிக்கையும் தொனிக்க பேசும் அவனை அவரால் தட்ட முடியவில்லை.
அப்படியே மெல்ல மெல்ல சேர்ந்து போவதும் வருவதும் வழக்கம் ஆயிற்று. முதலில் பிஸ்கட் வாங்க மறுத்தவன் பின் தட்ட முடியாமல் வாங்கிக் கொண்டான். கற்பகம் அவனுக்காக பலகாரங்கள் சுட்டுக் கொடுத்து அனுப்புவது வாடிக்கை ஆயிற்று. ஒரே ஒரு முறை வீட்டுக்கு கூப்பிட்டபோது அவன் சற்றுத் தயங்கவே, விட்டுவிட்டார். கற்பகமும் வற்புறுத்தி கேட்காதது அவருக்கு நிம்மதியாக இருந்தது. ஒரு நாள் அவன் வீட்டுக்கு பெரியப்பா என்று சொல்லிக் கொண்டு ஒருவன் வருவதாகவும் அவன்தான் இந்த டவுனுக்கு அவர்களை கூட்டி வந்து குடி வைத்ததாகவும், அவன் அப்பா அந்த ஆளிடம்தான் வேலை பார்த்ததாகவும் சொன்னதாகச் சொன்னார். அவர்கள் இருவருக்குமே கண்ணன் விஷயத்தில் எதோ விளங்காமல் இருக்கிறது என்பது தெரிந்தாலும் மேலும் கேட்க முடியாமல், அவனை விடவும் முடியாமல், ஆனால் அவன் வாழ்க்கைச் சுழலில் தாங்கள் இருவரும் இழுக்கப்படுவதை உணர்ந்தே உணராதவர்கள் போல் விழுந்து கொண்டு இருந்தார்கள்.
வகுப்பறைகளை பூட்டி, மற்ற எல்லா வேலைகளையும் முடித்துக் கொண்டு அவர் கீழே வந்த போது கண்ணன் இங்க பாருங்க தாத்தா என்றபடி அவனது தேர்ச்சி அட்டையை காட்டினான். முழு ஆண்டுத் தேர்வில் ஆறாம் வகுப்பில் முதல் மாணவனாக தேறி இருந்தான்.
முதல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி அட்டையை அவரிடம் காண்பித்த போது அவரால் சந்தோஷத்தை அடக்க முடியவில்லை. அந்த சாக்கில் அவர் ரொம்ப நாட்களாக நினைத்துக் கொண்டு இருந்ததை நிறைவேற்றிக் கொண்டார். அவனைக் கட்டிப் பிடித்து நான்கு முத்தங்கள் வைத்துவிட்டார். வாடா வாடா என்று கூப்பிட்டு கொண்டு போய் கடையில் சாக்லேட் வாங்கிக் கொடுத்தார். கண்ணன் அதை பாதியாக உடைத்து அவர் எதிர்பாராத நொடியில் அவருக்கு ஊட்டி விட்டான். அப்படியே கடை பெஞ்சில் உட்கார்ந்து விட்டார்.
” டேய், மதுர வீரன் மாதிரி சுத்திட்டு இருந்தன்டா. என்னைய இப்படி ஆக்கிப்புட்டியே” என்று பிஞ்சுக் கையால் ஊட்டப் படுவதன் சுகம் உணர்ந்தவராக அவனை அணைத்துக் கொண்டார். ஒரு நிமிடம் கண்ணை மூடி சாக்லேட்டை மென்றார்.
” கண்ணா, இன்னும் ரெண்டு சாக்லேட் வாங்கி தாரேன். ஒண்ணு உன் அம்மாக்கு குடு. இன்னொரு சாக்லெட்டை என் வீட்டுக்கு வந்து பாட்டி கிட்ட கொடு. ரொம்ப சந்தோஷப்படுவா. நீ அவளை பார்த்ததே இல்லையே”.
எப்போதும் அவர் வீட்டுக்கு வரத் தயங்குபவன் உடனேயே சரி என்றான்.
இருவரும் சைக்கிளில் போய்க் கொண்டு இருக்கும் போது கந்தசாமி கேட்டார்.
” கண்ணா, நான் கேக்கற கேள்விக்கு உண்மையா பதில் சொல்லணும்”.
” சரிங்க தாத்தா” என்றான் உற்சாகமாக.
” ஏன் தினமும் நீ வீட்டுக்கு லேட்டா போற? சீக்கிரம் கிளம்பி வர்ற? சொல்லு”.
பின்னாலிருந்து பதிலே வரவில்லை.
” டேய்”
” தாத்தா, அந்த வீட்டை சுத்தியும் ஒரே அசிங்கமா நாத்தமா இருக்கு. அங்க யாரையும் எனக்கு பிடிக்கல. எதுவுமே சுத்தமா இல்ல. அந்த இடமே பிடிக்கல. வீட்டுக்கு போனதும் அம்மா எதாவது கொடுத்தா சாப்பிட்டுட்டு மேற்கால ஒடைக்கரையில ஒரு மண்டபம் இருக்குல்ல, அங்க போயி தூங்கிடுவேன். விடிகாலை எந்திரிச்சு அங்கேயே குளிச்சுட்டு வீட்டுக்கு வந்து, அம்மா பழைய சோறு வச்சு இருக்கும், அதை எடுத்திட்டு கிளம்பி பள்ளிக்கூடம் வந்துடுவேன்”.
அய்யோ, இவனிடம் என்ன கேள்வி கேட்டாலும் மிரண்டு போகிற மாதிரியே பதில் சொல்கிறான் என்று தவித்துப் போனார். இன்று போய் நாள் பார்த்து கேட்டதற்கு தன்னையே நொந்து கொண்டார். அவன் கவனம் திருப்பும் முயற்சியாக, சிரிப்பு மூட்டும் விதமாக எதையோ பேசிக் கொண்டு வந்தார்.
” கண்ணா. ஸ்கூல்ல, ஊர்ல இவ்வளவு பேர் இருக்கப்போ, ஏன் என் கூட மட்டும் தினமும் வர்றேன்னு சொன்ன?”
கண்ணன் அவரை பார்த்து வெட்கத்துடன் புன்னகைத்து விட்டு தலையை குனிந்து கொண்டான்.
” தாத்தாவை அம்புட்டு பிடிச்சுருச்சோ?”
” உம்”.
உற்சாகமாக சைக்கிளை மிதித்துக் கொண்டு வந்தவர் வீட்டில் வந்து இறங்கியதும் உரக்க குரல் கொடுத்தபடியே நுழைந்தார்.
” கற்பகம், இன்னிக்கு வீட்டுக்கு யாரு வந்து இருக்காங்க பாரு”.
அவன் கையைப் பிடித்துக் கொண்டு பெருமையாக உள்ளே நுழைந்த போது அங்கு ஒரு இளம் பெண் உட்கார்ந்து இருந்ததை பார்த்தார்.
” அம்மா” என்றான் கண்ணன்.
கண்ணன் சற்று வளர்ந்து பெண் பிள்ளையாக இருந்தால் எப்படி இருப்பானோ அப்படி இருந்தாள் அந்தப் பெண். அம்மா என்பதைவிட, அக்கா என்றுதான் சொல்லமுடியும். கண்களில்தான் உயிரை வைத்துக் கொண்டு இருந்தாள். இவரை பார்த்ததும் எழுந்து நின்று கை கூப்பினாள். கண்ணன் அவள் அருகில் சென்று அவள் முகத்தையே பார்த்துக் கொண்டு நின்றான். ஒன்றும் பேசாமல் அவன் தலைமுடியை கோதி விட்டாள்.
கந்தசாமி சற்று திகைத்து நிற்க, “தம்பி, அம்மாவோட இரு. இப்ப வந்துடறோம் ” என்று சொன்ன கற்பகம் கணவரை கண் காட்டி உள்ளே அழைத்தாள். குரலைத் தழைத்து கொண்டு பேசினாள்.
” அந்த பொண்ணு சொல்றதை கேட்டு அடிவயிறு கலங்கிப் போச்சு. அந்த ஆளு பில்டிங் காண்ட்ராக்ட்டர். அடிக்கடி எதோ சாக்கு வச்சு வீட்டுக்கு வருவானாம். அவ புருஷன் இறந்தது, அவங்க வீட்டை ஒருத்தன் மிரட்டி புடுங்கினது, அப்ப இவன் சரியா வந்து உதவி செஞ்சது எல்லாமே திட்டம் போட்டு பண்ணி இருக்கான்னு நினைக்கிறா. கையில இருந்த ரெண்டு பவுன் நகையை வித்து இதுநாள் சமாளிச்சு இருக்கா. இப்ப பொழப்புக்காக வீட்டு வேலைக்கு போறாளாம். இம்புட்டு நாள் சும்மா இருந்தவன் இப்போ அடிக்கடி வந்து அவளை ரெண்டாந்தாரமா கட்டிக்க சொல்லி தொந்தரவு பண்றானாம். சாமியா பார்த்து கண்ணனுக்கு உங்களை காமிச்சு இருக்காரு. நான் அந்த ஆள் கூட நாளைக்கு கிளம்பி போறேன். இல்லேன்னா பிள்ளையை எதாவது செஞ்சுடுவேன்னு மிரட்டறான். அங்க போனதும் தற்கொலை செஞ்சுக்க போறேன். கண்ணனுக்கு தெரிய வேணாம். அம்மா எங்கேயோ ஊருல வேலை செய்யறதா நினைச்சுக்கட்டும். அவன எதாவது அரசு விடுதியில் சேர்த்து விட்டுட முடியுமான்னு கேட்டு அழுவுறா…”
கந்தசாமி அதிர்ந்து போய் நின்றார். சில நிமிடங்கள் மௌனத்தில் கரைந்தன.
” எனக்கு ஒரு விசயம் செய்யலாம்னு தோணுது”. இருவரும் ஒரே நேரத்தில் மற்றவரிடம் சொன்னார்கள். அப்போது வாசலில் பைக் ஒன்று வந்து நிற்கும் சத்தம் கேட்டு வெளியறைக்கு வர, கண்ணனின் அம்மா சுவரோடு ஒண்டிக்கொண்டு நிற்பதை பார்த்ததும் அவர்களுக்குப் புரிந்துவிட்டது.
கந்தசாமி சட்டைக்கையை மேலே சுருட்டி விட்டபடி வெளியே சென்றார்.
” கண்ணா, உன் பள்ளிகூடப் பையை அந்த ஆணியில மாட்டிக்க. அம்மாடி, நீ உள்ள போயி அவங்களுக்கு ஒரு சுக்கு காபி போடமுடியுமா?” என்றாள் கற்பகம்.
பத்து நிமிடங்கள் சென்று கந்தசாமி உள்ளே திரும்பி வந்தபோது கண்ணனின் அம்மா அவர் கையில் காபியை கொடுத்துவிட்டு வாட்ச்மேன் சார் என்று தழுதழுத்தபடி அவர் காலில் விழுந்தாள்.
” இனிமே உனக்கு யாராலயும் எந்த தொந்தரவும் இருக்காதும்மா. அப்புறம் நான் உனக்கு வாட்ச்மேன் சார் இல்ல. ஒரு அம்மாதான் பிள்ளைக்கு தன் அம்மா அப்பாவை காட்டி தாத்தா பாட்டின்னு சொல்லுவா. ஆனா உன் பிள்ளை தாத்தா பாட்டியை கண்டுபிடிச்சு உனக்கு அம்மா அப்பான்னு காட்டி இருக்கான். எழுந்திரும்மா”.
அவள் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் திரும்பவும் கூப்பிய கைகளுடன் வார்த்தைகள் வராமல் தவித்துக் கொண்டு நின்றாள்.
கண்ணன் திடீரென நினைவு வந்தவனாய் ஓடிச் சென்று பையில் இருந்து சாக்லேட்டை எடுத்து வந்து கற்பகத்திடம் ” பாட்டி, வாயை திறவுங்க” என்றான். கற்பகம் அவன் சொன்ன முதல் வார்த்தைக்கு பின் எதுவும் காதில் விழாமல் அப்படியே பூரித்து நின்றாள்.
(இராம.செ.சுப்பையா நினைவு சிறுகதை போட்டி- 2022)
