"ரஞ்சி "என அவள் தோழிகளால் செல்லமாக அழைக்கப் படும் ரஞ்சனா கண்ணாடி முன் நின்று , அதன் முன்னும் பின்னும் நடந்து தன் அழகான, பார்த்துப் பார்த்து பத்தாயிரம் ரூபாய் கொடுத்து வாங்கிய சில்வர் ஜரிகை அங்கங்கே எம்ப்ராய்டரி செய்யப்பட்ட லெஹங்கா உடையை, அதற்கேற்ப அணிந்திருந்த சில்வர் நிற ஜிமிக்கியை, தன் விரிந்த தலைமுடியின் ஸ்டைலை என ஒவ்வொன்றாக தனித்தனியே மீண்டும் ஒரு முறை சரிபார்த்து திருப்தி அடைந்தவளாக ஹாஸ்டல் அறையை விட்டு நிதானமாக வெளிப்பட்டாள்.
இன்று அவளின் கல்லூரி வாழ்க்கையின் இறுதி நாள். இதற்குப் பிறகு தேர்வு எழுத மட்டும் வந்து போவார்கள். எந்த ஒரு மனிதனுக்கும் வாழ்க்கையில் மிகவும் பிடித்த காலம் எது என்று கேட்டால் நிச்சயம் அது துள்ளித் திரியும் கவலைகள் , பொறுப்புகள் அற்ற கல்லூரிக் காலம் மட்டும் தான் என்றே பதில் வரும்.
அதிலும் ரஞ்சிதா கல்லூரியின் டாப்பர் மட்டுமின்றி சிறந்த நடனமணியும் கூட என்பதால் பொறியியல் படித்த இந்த நான்கு வருடங்கள் வசந்த காலம் தான் அவளுக்கு. அவளின் தோழி மஞ்சுளா இவளை மாதிரியே வேறு கலர் உடையோடு வந்து சேர்ந்தாள்.
ஏய் ரஞ்சி" கடைசியா ஒரு முறை கல்லூரியில் நாம் அமர்ந்த வகுப்பறை, நாம் ஒன்றாகக் கூடி அரட்டைக் கச்சேரி நடத்தும் அரசமரத்தடி, கலாய்த்துக் கொண்டே சாப்பிடும் கான்டீன், நாம் சேர்ந்து சுற்றிய கல்லூரி வளாகம் முழுவதும் ஜாலியா ஒரு ரவுண்ட் அடிப்போமா" என்றாள் மஞ்சு .
"சரிடி , வா போலாம் " என்று பாதி தூரம் நடந்தாள் ரஞ்சி. அந்த நாளுக்காக அலங்கரித்து வந்த மகிழ்ச்சி காணாமல் போக, நெஞ்சம் இதையெல்லாம் விட்டுப் பிரியப் போகிறோம் என நினைத்து ஏங்க , கண்ணில் தன்னை அறியாமல் நீர் வழிய "என்னால் இந்த பிரிவை தாங்க முடியலைடீ மஞ்சு, இனி இதெல்லாம் நமக்கு வெறும் நினைவுகள் மட்டும் தான் என்பதை ஏற்க பாழும் மனசு மறுக்கிறதே " என்று அரற்றியபடி அங்கேயே அமர்ந்து விட்டாள் .