
” அப்படி என்ன கேட்டுட்டேன்னு நீ இப்படி குலுங்கி குலுங்கி அழுகிறாய்டி?” என்று கிச்சனில் குக்கர் விசிலுக்கு மேல் அம்மா கல்யாணி இருமிக் கொண்டே மகளிடம் சத்தமிட்டாள். மகள் ராணி படைத்தவனே மயங்கும் அழகு உடையவள், கோபம் மூக்கின் மேல் ஏறி ஆட, சிவந்த முகம் மேலும் கீழ் வானமாய் சிவக்க மேக்கப்பிட்ட முகத்திலிருந்து குற்றால அருவியாய் கண்ணீர் வழிந்து ஓடியது.
இன்று சித்ரா பௌர்ணமி, நாள் நட்சத்திரம் பார்க்காமல் ,அருமையான வரன் ராணிக்கு வந்தது. மாப்பிள்ளை ராஜா கம்ப்யூட்டர் இன்ஜினியர் கைக்கடங்காத சம்பளம் தொற்று இல்லாத குடும்பம், உடன்பிறந்த தங்கையும் மணம் முடிக்கக் கல்யாணத்துக்கு லைன் கிளியர் .
ராணியின் அப்பாவோ அவள் சிறு வயதிலேயே தவறிவிட, தாய் கல்யாணி தான் அவளுக்குத் தாய்க்கு தாயாய், தகப்பனாய், உலகமாய் அவளை வளர்த்துப் படிக்க வைத்தாள். அம்மாவே உலகம் என்று வளர்ந்து பிஈ படித்து முடித்தாள் .வேலையும் அவளைத் தேடி வர அம்மாவை உட்கார வைத்து” அம்மா போதும்மா நீ சமைத்தது , இனி நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று மார்தட்டினாள். அம்மா கல்யாணிக்கு மகள் அழகு ஒரு புறம், நல்ல வேலையென எல்லாம் ஒன்று சேர்ந்ததால் ,காலகாலத்தில் தன் கடமையை முடிக்க நினைத்து வரம்
தேடினாள்.
அந்த நல்ல நாளும் வர மாப்பிள்ளை வீட்டார் வந்து பேச ,பேச்சில் தொடங்கி பெண் மாப்பிள்ளை நேருக்கு நேர் ,காபி டிபன் எனச் சம்பிரதாயங்கள் முடி ய மாப்பிள்ளை வீட்டார் கல்யாண முறை மற்றும் சீர்வரிசை பேச, எல்லாம் நல்லபடியாக முடிந்தது .ஆனால் பேச்சுவார்த்தை முடியும் தருவாயில் அம்மா கல்யாணி மாப்பிள்ளை வீட்டாரிடம் “தகப்பனார் இல்லாமல் வளர்த்த மகள், எனவே மாப்பிள்ளை கல்யாணமானாலும் கொஞ்சம் நல்லா பாத்துக்கணும், என்னால் ஓடி வர முடியாது” என்றாள். அப்போது ராணி மாப்பிள்ளை வீட்டாரிடம்” எனக்குக் கல்யாணத்திற்கு சம்மதம் ஆனால், ஒரு கண்டிஷன், கல்யாணமான பின் என் அம்மா என்னோடுதான் இருப்பாள்” என்று கூற உடனே மாப்பிள்ளை வீட்டார் யோசிக்க, கல்யாணி ராணியிடம்” ஏடி இதெல்லாம் நீ ஒன்றும் பார்க்கத் தேவையில்லை, நீ நல்லா இருந்தா போதும்” என்றாள். மாப்பிள்ளை வீட்டாரோ, திரும்பி யோசித்து நாங்கள் வீட்டுக்குப் போய் முடிவு செய்கிறோம் என்று சொல்லிச் சென்றனர். ஆனால் பதில் வரவில்லை. அம்மா கல்யாணி பதர ராணியோ” பரவாயில்லை இந்த மாப்பிளை இல்லை என்றால், வேறு மாப்பிள்ளை” என்று கூறினாலும் ,அம்மாவை நினைத்துக் கலங்கி கண்ணீர் வடித்தாள்.

One Comment on “மரு. ச. கந்தசாமி/கேளடி கண்மணி”