அனுராதா ஜெய்ஷங்கர்/ரயில் பயணங்களில்


“தம்பி, கொஞ்சம் சீக்கிரம் போப்பா. ரயில் கிளம்ப இன்னும் 20 நிமிஷம் தான் இருக்கு” பாஸ்கரின் குரலில் அப்பட்டமாகப் பதட்டம் தெரிந்தது.
“இதுக்கும் மேலே எப்படிண்ணா வேகமா போக… மதிய நேரத்துல டிராபிக் நெரியுது…ரயிலுக்குப் போகக் கொஞ்சம் சீக்கிரம் கிளம்பி இருக்கலாமில்லே”
ஆட்டோக்கார பையன் அக்கறையாகச் சொன்னது பாஸ்கரின் எரிச்சலை முற்றிலுமாக விசிறி விட்டு விட்டது. மனதுக்குள் பொரும ஆரம்பித்தான். இவன் ஒருத்தன் கிட்ட இருந்து அறிவுரை கேட்கிறது தான் பாக்கி எனக்கு. ஆபீஸ்ல பெண்டு நிமிர்த்தற வேலை…ஒரு ரெண்டு நாள் லீவு வாங்குறதுக்குள்ள அந்த மேனேஜர் கொடுத்த லெக்சர்…ஊருலேருந்து வாவான்னு டார்ச்சர்…இப்போ ரயிலைப் புடிப்பேனா தெரியல. அப்பா சாமி என்ன பொழப்புடா இது என்று நொந்து கொண்டான்.
“எந்த ஊருக்குண்ணா போறீங்க?”
” திருச்சி”
” ஒரு வாரமா கடைசி பிளாட்பார்ம்லதான் திருச்சி வண்டி கிளம்புது. நான் பின்பக்கமா போய் அங்கவே இறக்கி விடுறேன் “என்றபடி சடக்கென்று இடது பக்கம் திரும்பிச் சில பல சந்துகளினூடே புகுந்து குறுக்கே வந்தவர்களை அர்ச்சனை செய்து கொண்டே ரயில் நிலையத்தின் பின் வாசலில் போய் ஆட்டோவை நிறுத்தினான்.
“வேகமா போங்கண்ணா. பிடிச்சுடலாம்”.
அவன் சொல்லும் முன்னரே கிட்டத்தட்ட ஆட்டோவிலிருந்து குதித்து கையில் தயாராக வைத்திருந்த பணத்தை அவனிடம் கொடுத்துவிட்டு பாஸ்கர் முதுகில் மாட்டிய பையுடன் மூச்சு வாங்க ஓடி அவனது இருக்கை முன்பதிவு செய்யப்பட்டிருந்த கோச்சை கண்டுபிடித்து உள்ளே ஏறியபோது ரயில் கிளம்ப இன்னும் ஐந்து நிமிடங்கள் இருந்தன.
ஒரு பெருமூச்சு விட்டபடி தனது இருக்கை எண்ணைத் தேடிக் கொண்டே சென்றான். அனேகமாக எல்லோருமே அவரவர் இருக்கைகளில் சௌகரியமாக அமர்ந்து விட்டிருந்தனர். அவனது இருக்கை ஜன்னலோரமாக இருந்தது. ஆனால் அங்கு ஒரு இளம் பெண் மடியில் ஒரு ஒன்றரை வயது பெண் குழந்தையுடன் உட்கார்ந்து இருந்தாள்.
அவளுக்கு எதிர்ப்புறத்தில் அவளது பெற்றோர் என்று சொல்லக்கூடிய வயதில் ஒரு பெரியவரும் அவர் மனைவியும் இருந்தார்கள். ஜன்னலுக்கு வெளியே கிட்டத்தட்ட பாஸ்கர் வயதுடைய இளைஞன் ஒருவன் அந்தக் குழந்தையைக் கொஞ்சியபடி நின்றுகொண்டிருந்தான். சரி, வண்டி கிளம்பிய பிறகு இருக்கை மாற்றிக் கொள்ளலாம் என்று எண்ணியபடி பாஸ்கர் அந்தப் பெண்ணிடமிருந்து சற்றுத் தள்ளிக் காலியாக இருந்த இடத்தில் உட்கார்ந்தான்.

பாஸ்கர் பையைப் பக்கத்தில் வைத்துவிட்டு சௌரியமாக உட்கார்ந்து மூச்சை இழுத்து விட்டான். தண்ணீர் பாட்டிலை திறந்து ஒரு வாய் நீரைக் குடித்தான். பக்கத்தில் இருந்த குடும்பத்தை நோக்கித் திரும்பிய கண்களை வலுக்கட்டாயமாகத் திருப்பி மூடிக்கொண்டான். ஆனாலும் காதில் அவர்களது பேச்சுக்கள் விழுந்தவண்ணம் இருந்தன. அந்த இளைஞன் குழந்தையிடம் சொல்லிக்கொண்டிருந்தான்.
” பாப்பா அழக் கூடாது. அம்மாவைப் படுத்தக் கூடாது. சமர்த்தா இருக்கணும். அப்பா இன்னும் ஒரு வாரத்தில் கிளம்பி வந்துருவேன்”.
“மாப்பிள்ளை, நீங்கதான் வந்து உங்க மச்சினி கல்யாணத்தை முன்னெடுத்து செய்யணும். ஒரு வாரம் எல்லாம் இல்ல. இன்னும் ரெண்டு நாள்ல கிளம்பி ஶ்ரீரங்கம் வந்துருங்க” என்றார் அந்தப் பெரியவர்.
” எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வரேன் மாமா” என்றவன் குழந்தையிடம் திரும்பி “அப்பா வரும்போது உனக்குப் பொம்மை எல்லாம் வாங்கிட்டு வரேன். அழக் கூடாது “என்று திருப்பிச் சொல்லிக்கொண்டிருந்தான்.
” அதெல்லாம் நாங்க பாப்பாவை பார்த்துக்கிறோம். நீங்கக் கவலைப்படாதீங்க மாப்பிள்ளை “.
அந்த அம்மாள் தன் கணவரை முழங்கையால் லேசாக இடித்தார். தாழ்ந்த குரலில் சொன்னார்.
“ஏங்க, மாப்பிள்ளை அவரு பொண்ணுக்கு சேதி சொல்ற மாதிரி உங்க பொண்ணைத்தான் தேத்திட்டு இருக்காரு. குழந்தைக்கு ஒரு வாரம் புரியுமா ஒரு நாள்னா புரியுமா? கொஞ்சம் பேசாம இருங்க”.
பாஸ்கருக்கு அந்த அம்மாள் சொன்னது அவனையும் அறியாமல் ஒரு புன்னகையை உண்டு பண்ணியது. அது நேரம் இருந்த எரிச்சல் எல்லாம் வடிந்து போக அதற்கு மேலும் ஆர்வத்தை அடக்கமாட்டாதவனாகத் திரும்பிப் பார்த்தான். அந்தப் பெண் இடது கையால் ஜன்னல் கம்பிகளைப் பிடித்தபடி வலது கையால் குழந்தையைத் தன் மடியில் அணைத்துக் கொண்டு இருந்தாள். குழந்தை கையை ஜன்னலில் கம்பிகளின் வழியே நீட்டி அப்பாவின் மீசையைப் பிடித்து இழுத்தும் கன்னத்தில் குத்தியும் காற்றில் முத்தங்களைப் பறக்க விட்டும் விளையாடிக்கொண்டிருந்தாள். அவனும் ஒரு கையால் குழந்தையின் கன்னத்தைத் தொட்டு கொஞ்சிக் கொண்டிருந்தான். பாஸ்கரால் அவளது முகத்தைப் பார்க்க முடியவில்லை. ஆனால் அப்போதுதான் கவனித்தான். அந்த இளைஞனது கைவிரல்கள் கம்பியைப் பிடித்து இருந்த அவளது கை விரல்களின் மேல் படிந்திருந்தன.
பாஸ்கருக்கு அந்தக் காட்சி ஏனோ மிகவும் பிடித்திருந்தது. இந்த மாதிரியான ஒரு பொது இடத்தில் பிரிந்து செல்கிற மனைவிக்குப் பற்றிய கை விரல்களின் வழியே அந்தக் கணவன் எவ்வளவு சொல்ல முடியும்? உண்மையில் வார்த்தைகளால் சொல்வதை விடக் கண்களாலும் சொல்லாமலும் கடத்தப்படுகிற உணர்வுகள் தானே அதிகம். ஒருவரிடம் நேராகச் சொல்வதை விடவும் மௌனத்தால் பேசும்போது கேட்பவருக்குத் தான் விரும்பிய வகையில் வார்த்தைகளைப் பொருத்திக் கொள்ளும் வசதியை அந்த மௌனம் அளிக்கிறது என்றே அவனுக்குத் தோன்றியது. ஒவ்வொரு ரயில் கிளம்புகிற தருணங்களிலும் பெரும்பாலும் பலரது ஆழ்மனக் கதவுகள் சற்றேனும் திறக்கப் படுகின்றன என்று நினைத்தான். பற்றி இருந்த ஐந்து ஜோடி கை விரல்களுக்குமாக அவனே உரையாடலை நினைத்துக் கொண்டான்.
‘ எனக்கு உங்களை விட்டுட்டு போக மனசே இல்லை ‘.
‘ நானும் தான் உன்னை ரொம்ப மிஸ் பண்ணுவேன்’.
‘ நேரத்துக்குச் சாப்பிடுங்க. உடம்ப பாத்துக்கங்க’.
‘ கவலைப்படாத, நான் உன்னையே தான் நினைச்சுட்டு இருப்பேன். சந்தோஷமா இரு ‘.
‘ சீக்கிரம் வந்துடுங்க ‘.
‘ஐ லவ் யூ டியர் ‘.
ரயில் கிளம்பியது. பாஸ்கருக்கு ஒரு அழகான ஓவியத்தைப் பார்த்தது போன்று மனம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இந்தக் குடும்பம் இது போன்றே இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். அப்போது எதிர்பாராத விதமாகத் திடீரென்று குழந்தை வீறிட்டு அழ ஆரம்பித்தாள்.
“நான் சொன்னேன்ல, அவர் கூட வரலை என்கிறதே புரியாமல் இது இத்தனை நேரம் விளையாடிட்டு இருந்தது. நிச்சயம் வண்டி கிளம்பும்போது அழுது குமிச்சிடுவான்னு சொன்ன மாதிரியே ஆச்சு பாருங்க” என்றபடி அவள் குழந்தையைச் சமாதானம் செய்யத் தொடங்கினாள்.
ஆனால் குழந்தை நிறுத்துகிற மாதிரி இல்லை. ஜன்னல் பக்கமே எட்டிப் பார்த்து வீறிட்டு அப்பா அப்பா என்று கத்திக் கொண்டிருந்தாள். தாத்தா, பாட்டி, அம்மா என்று மூவருமாகச் சாக்லேட், பொம்மை என்று எதையெல்லாமோ கொடுத்து அவளை மாற்ற முயற்சித்தும் ஒன்றும் எடுபடவில்லை.
பாஸ்கருக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அந்தக் குழந்தையைத் தூக்கிக்கொண்டு சற்று இப்படியும் அப்படியுமாக நடந்தால் ஒருவேளை அழுகையை நிறுத்துவாளோ என்று தோன்றியது. ஆனாலும் முன்பின் தெரியாமல் எப்படி போய்க் கேட்பது என்று தயக்கமாகவும் இருந்தது. குழந்தை இவன் பக்கமாகத் திரும்பிய ஒரு நேரத்தில் இரு கைகளையும் நீட்டி வாங்க என்றான். அது இன்னும் கத்திக்கொண்டு அம்மாவிடம் ஒட்டிக்கொண்டது.
அந்தப் பெரியவர் “அவங்க அப்பா ஆபீஸ் கிளம்பும்போதே தினமும் அஞ்சு நிமிஷம் அழுதுட்டுதான் ஓய்வா. ஆனாலும் இவ்வளவு நேரம் அழுவான்னு எதிர்பார்க்கலை “என்றார்.
குழந்தை தலையைத் திருப்பிப் பாஸ்கரை பார்த்தாள். கிட்டத்தட்ட அவனும் அவளது அப்பாவின் வயதும் உயரமும் ஒத்தபடியாக இருந்ததினாலோ என்னவோ சற்று நேரம் அழுகையை குறைத்து அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள். பாஸ்கர் ஒரு புன்னகையுடன் அவனது வலது கையில் நடு விரல், மோதிர விரல் இரண்டையும் சேர்த்து கட்டை விரலோடு ஒட்டிக் கொண்டான். விரிந்திருந்த ஆட்காட்டி விரலையும் சுண்டு விரலையும் ஆட்டி ஒரு விலங்கின் இரு காதுகள் அசைவது போன்று அசைத்துக் காட்டினான். பொம்மைக்கும் சாக்லேட்டுக்கும் மசியாத குழந்தைக்கு இந்தக் கைவிரல் அசைந்தது புதிதாக இருந்தது. அழுகையை முற்றிலுமாக நிறுத்திவிட்டு அவன் கைவிரல்களையே உற்றுப் பார்க்க ஆரம்பித்தாள். பின் மெல்ல ஒட்டி இருந்த மூன்று விரல்களையும் விலங்கு வாயைத் திறப்பது போன்று செய்து காண்பித்தான்.
“பாப்பா பேர் என்ன?”
” யாழிசை ” அவள் அம்மா முகம் பெருமையில் பொலிந்தது.
“ரொம்ப அழகான பேரு”.
குழந்தை அம்மாவிடமிருந்து இறங்கி இருவருக்கும் நடுவில் உட்கார்ந்து கொண்டு அவனிடம் விளையாட ஆரம்பித்தது.
மூவருக்கும் ஒரு பெரிய நிம்மதிப் பெருமூச்சு வந்தது. அப்போது அவனது அலைபேசி ஒலித்தது.
” ரயில் ஏறிட்டன்ம்மா. சாயந்திரம் வந்துடுவேன்.”
….
“ஏழு மணிக்குள்ள வந்துடுவேன். கவலைப்படாம இருங்க “.
அலைபேசியை அணைத்து வைத்துவிட்டு தன் விரல் விளையாட்டைத் தொடர்ந்தான்.
“யாழிசை இங்கே பாருங்க”.
குழந்தையின் பாட்டி சொன்னார்.
“உங்களுக்கு எத்தனை குழந்தைங்க? குடும்பம் எங்கே இருக்காங்க?”
நிமிர்ந்தவன் ” மூ…மூணு குழந்தைங்க” என்றான்.
” ஏன் தயங்குறீங்க? சந்தோஷம் தானே, இந்தக் காலத்தில் எல்லாரும் ஒரு பிள்ளையோடு நிறுத்திக்கும்போது மூணு பிள்ளையைப் பெற்று நல்ல கப்பும் கிளையுமா சந்தோஷமா வாழுங்க தம்பி ” என்றார் அந்த அம்மாள்.
பாஸ்கர் புன்னகைத்துக் கொண்டான்.
” எத்தனை ஆண்? பொண்ணு?”
“முதலில் பொண்ணு. ஆதிரா. அடுத்தது ரெட்டை குழந்தைங்க. இரண்டும் பையன். அகிலன், அருணன்”.
” சந்தோஷம். அதான் குழந்தைகிட்ட அழகா விளையாடிச் சமாதானம் பண்றீங்க”.
இதற்குள் குழந்தையின் அம்மா ஒரு வாழைப்பழத்தை உரித்துச் சிறிய கிண்ணத்தில் துண்டுகளாக நறுக்கி போட்டு அவளுக்கு ஊட்ட முயற்சித்தாள். யாழிசை தலையைத் திருப்பிக்கொண்டு பாஸ்கரின் மேலே ஏறிக் கொண்டாள். குழந்தையை ஆசையாகத் தூக்கி அணைத்து மடியில் உட்கார்த்தி வைத்துக் கொண்டான்.
“கொடுங்க நான் ஊட்டி விடுறேன்”.

” ஐயோ வேணாங்க, உங்களுக்கு எதுக்கு சிரமம்?”
” ஒரு வாழைப்பழம் கொடுப்பதில என்ன சிரமம்? கொடுங்க”.
விளையாடிக்கொண்டே அவளுக்கு ஊட்டி விட்டான்.
“உங்க மனைவி என்ன பண்றாங்க?”
“அம்மா கொஞ்ச நேரம் சும்மா இரும்மா. ஒருத்தவங்க கிடைச்சா ஒரு முழு பேட்டியே எடுத்துருவ”.
” இதுல என்ன தப்பு? என் மகன் மாதிரி தானே இருக்காரு. ஒருத்தருக்கு ஒருத்தர் விசாரிச்சுக்கிறது தானே?”
” என் மனைவி ஸ்கூல் டீச்சர் மா. திருச்சியில்தான் என் அம்மா அப்பாவோட இருக்காங்க. குழந்தைங்க சின்னது. கொஞ்சம் வளர்ந்த பிறகு தான் சென்னைக்கு குடும்பத்தைக் கூட்டிட்டு போகணும்” என்றான்.
” நல்லது நல்லது. சீக்கிரம் குடும்பத்தோடு சேர்ந்து இருக்க ஆசீர்வாதம் உங்களுக்கு”.
குழந்தை அவனிடம் நன்றாக ஒட்டிக்கொண்டு விட்டாள். தண்ணீர் கொடுத்தது, பிறகு சிறிது நேரம் கழித்து சாதம் ஊட்டியது எல்லாமே அவன் மூலமாகத்தான் நடந்தது. பாஸ்கருக்கு சில மணி நேரத்தில் யாழிசையை பிரிய வேண்டுமே என்று தோன்ற ஆரம்பித்து விட்டது. இந்த ரயில் நிற்காமல் போய்க் கொண்டே இருக்க வேண்டும் போல இருந்தது. குழந்தை அவன் மடியிலேயே உறங்கியும் விட்டாள்.
வண்டி ஸ்ரீரங்கத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. யாழிசையின் பாட்டி அவன் மடியில் இருந்து குழந்தையை எடுத்துத் தன் தோளில் போட்டுக் கொண்டார்.
“தூங்குனதும் நல்லதா போச்சு. இல்லைனா இறங்கும்போது உங்களை விட்டுட்டு இறங்குறதுக்கும் அழுது இருப்பா. ரொம்ப நன்றி தம்பி”.
” ஏறும்போது அவ்வளவு டென்ஷனோட வந்தேன்மா. ஆனா யாழிசையோடு செலவு பண்ண இந்த நேரம் என்ன அப்படியே மாத்திடுச்சு” என்றான். அப்போது அவனது அலைபேசி ஒலித்தது.
” சொல்லும்மா. வண்டி ஸ்ரீரங்கம் வந்துடுச்சு”.
” சரிப்பா பாஸ்கர். நீ நேரா வீட்டுக்குப் போக வேணாம். நம்ம முப்பாத்தம்மன் கோவிலுக்கு வந்துரு “.
“ஏன் மா?”
” என்னப்பா சொல்றது? உனக்கு 34 வயசு ஆகுது. ஏழு வருஷமா பொண்ணு தேடுறோம். எழுபது இடமாவது பார்த்திருப்போம். இன்னும் ஒன்னும் அமைய மாட்டேங்குது. நாளைக்கு பார்க்கப் போகிற பொண்ணாவது நல்லபடியாகத் தகைஞ்சு கல்யாணம் நடக்கணும்னு அம்மனுக்கு அபிஷேகத்துக்கு கொடுத்து இருக்கேன். கோவில்லதான் இருப்பேன். நீ நேரா கோவிலுக்கு வந்துரு “என்றார் அவனது அம்மா.
யாழிசையின் குடும்பம் கீழே இறங்கி ஜன்னலின் வழியே அவனுக்குக் கை அசைத்தது.
அந்த ரயில் பயணத்தில் தான் ஸ்ருஷ்டித்த குடும்பம் என்கிற இனிய கனவு தந்த சுகமும், தானாக அமைந்த யாழிசை என்கிற நனவு தந்த உணர்வும் இன்னும் சற்று நீடிக்க விரும்பி அவன் கண்களை மூடிக்கொண்டான். ரயில் சீராகச் சென்று கொண்டிருந்தது.

https://daily.navinavirutcham.in/?p=33321

2 Comments on “அனுராதா ஜெய்ஷங்கர்/ரயில் பயணங்களில்”

  1. அருமை! சில சமயம் கனவுகளே நம்மை உயிர்ப்போடு வைத்திருக்கின்றன. பாராட்டுக்கள்!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன