
அழைப்பு மணியில் விரலை வைத்து அழுத்தப் போன நிவேதிதா கதவு லேசாகத் திறந்து இருப்பதைக் கண்டு செருப்புகளை அதன் இடத்தில் விட்டுவிட்டு ஆச்சரியத்துடன் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தாள். ஹாலில் யாரும் இல்லை. அமைதியாகப் பரந்து விரிந்து இருந்த வீடு அவளை ஹோ என்று வரவேற்றது.
” அம்மா.., அப்பா..”
அந்த இரண்டு மந்திரச் சொற்களின் மூலம் அவளது சந்தோஷம் வீடு முழுவதும் புகுந்து நிறைந்தது.
பேன்ட்டும் சட்டையும் கையில் ஒரு பையுமாக வெளிப்பட்ட அப்பா ஒரு மைக்ரோ வினாடி திகைத்துப் பின் அவளைப் பார்த்துப் பரவசமானார்.
“அம்மாடி நிவிகுட்டி, வாடா வாடா. லட்சுமி, இங்கே பாரு குழந்தை வந்து இருக்கா” என்றபடி அவளை நோக்கி விரைந்து வந்தார்.
நிவேதிதா நாலே எட்டில் பாய்ந்து சென்று அப்பாவைக் கட்டிக்கொண்டாள்.
“வாம்மா நிவி, காலம்பற போன்ல பேசும்போது கூட வரேன்னு சொல்லவே இல்லையே ” அம்மாவும் காலைச் சற்று விந்தியபடி நடந்து வந்தாள்.
“உன்கிட்ட பேசின அப்புறம்தான் முடிவு ஆச்சு. இன்னும் உன் கால் வலி சரி ஆகலையா?” நிவேதிதா அம்மாவையும் அணைத்துக்கொண்டாள்.
கையில் வைத்திருந்த பழங்களை அம்மாவின் கையில் கொடுத்துவிட்டு பின் தானே எடுத்துக்கொண்டு போய் டைனிங் டேபிள் மீது வைத்தாள். பாட்டிலிலிருந்து ஒரு தம்ளரில் நீர் சரித்துக் குடித்தாள். பின் வந்து ஊஞ்சலில் அமர்ந்து கொண்டாள்.
“இங்கேயே ரெண்டு பேரும் உக்காருங்களேன்”.
அப்பாவும் அம்மாவும் அவளது இரு பக்கத்திலும் உட்கார்ந்து கொண்டார்கள்.
ஊஞ்சலுக்கும் யானைக்கும் மட்டுந்தான் அந்தச் சக்தி இருக்கிறது. எவரையும் ஒரு நொடி குழந்தையாக மாற்றி விடும் சக்தி. வீட்டில் பழகிய ஊஞ்சல் என்றால் அது கிட்டத்தட்ட கால இயந்திரத்துக்கு ஒப்பானது என்று நிவேதிதா நினைத்துக் கொண்டாள். காலை உந்தி லேசாக ஊஞ்சலை ஆட்டினாள். இரண்டு ஆட்டலில் வயதையே அல்லவா குறைத்து விடுகிறது.
“அங்கே மாப்பிள்ளை, குழந்தைகள், மாமனார் மாமியார் எல்லாரும் சௌகரியம்தானேமா?” என்றார் அப்பா.
” எல்லாரும் நல்லா இருக்காங்க அப்பா”.
“கொஞ்சம் கறுத்து இளைச்சு போய்ட்டே நிவி !”
நிவேதிதா சிரித்தாள்.
” அம்மா, என்னமோ ஆப்பிரிக்காவில் அஞ்சு வருஷம் நான் அலைஞ்சுட்டு வந்த மாதிரி சொல்றே. போன மாசம்தான பார்த்தே. நானே வெயிட்டை குறைக்க டயட் இருக்கலாமான்னு யோசிச்சிட்டு இருக்கேன்”.
“டயட்டும் வேண்டாம், ஒரு புண்ணாக்கும் வேண்டாம். ஒழுங்கா சாப்பிட்டு நல்லா இரு” என்றாள் அம்மா.
அப்பா மெல்ல அவள் முதுகை தடவினார். அப்பாவின் கையும் அம்மாவின் கையும் மாயக் கோல்கள் என்று தோன்றியது. கைப்பட்ட மாத்திரத்தில் உள்ளுக்குள் ஏதோ உடைந்தது. உடைந்தது கண்களின் வழியே வெளியே வராமல் இருக்க சிறிது பிரயத்தனப்பட்டாள்.
“பேசிட்டு இரு நிவி. நான் போய்க் காபி கலந்து எடுத்துட்டு வரேன்” என்றபடி எழப் போனாள் அம்மா.
“அடைக்கு அரைச்சு வச்சியே, அது ரெண்டு வார்த்து கொடுத்துட்டு பிறகு காபி குடிக்கலாமே” என்றார் அப்பா .
“உங்களுக்கு ஒரு சந்தோஷமான விஷயம் சொல்லட்டுமா? நான் இன்னிக்கி ராத்திரி இங்கேதான் தங்கப் போகிறேன் ” என்றாள் நிவி.
வீடு திடீரென்று பிரகாசமாக ஆகி விட்டது போல் இருந்தது.
” நிஜமாவா சொல்ற, அங்க பசங்கள விட்டுட்டு எப்படி?”
” இருபது வயசும் பதினேழு வயசும் கைக்குழந்தைகளா என்ன? எல்லாம் இருந்துக்க வேண்டியதுதான்” என்றாள் நிவேதிதா.
“அதுகள் இருக்கும் . ஆனா அம்மா இருக்கணுமே” என்று சிரித்தாள் அம்மா.
” ஏன் குழந்தைகளோட அம்மாவுக்கு மட்டும் அவளோட அம்மா அப்பா கூட இருக்கனும்னு இருக்காதா என்ன?” என்றபடி நிவேதிதா அம்மாவின் தோளில் சாய்ந்து கொண்டாள்.
“இன்னைக்கு ராத்திரி அவரோட ஆபீஸ்ல ஒரு ஃபங்ஷன். ஏதோ ஸ்டார் ஹோட்டலில் டின்னர். ஃபேமிலியோட வரலாம். எனக்கு அதுல இன்ட்ரஸ்ட் இல்ல. அவர்தான் நீ போய் அம்மா அப்பாவோட இருந்துட்டு வாயேன். நான் குழந்தைகளைக் கூட்டிட்டு போறேன்னு சொன்னார். விட்டா போதும்ன்னு கிளம்பி ஓடி வந்துட்டேன்”.
“அப்பச் சரி, நிதானமா பேசிட்டு இருக்கலாம். நீ போய் அடை வார்க்க ரெடி பண்ணு. நான் அதில் சேர்க்க கொஞ்சம் முருங்கை இலையைப் பறிச்சுட்டு வரேன்” என்று எழுந்தார் அப்பா .
“அப்பா அதுக்காக நீங்கக் கீழே போக வேண்டாம். பரவாயில்லை”.
” இல்லமா, இங்க பாரு. பால்கனியிலிருந்து பறிக்கலாம்” என்றபடி அப்பா நடக்க நிவேதிதா அவரை முந்திக் கொண்டு பால்கனிக்கு போனாள்.
வீட்டிற்குள் புது ஆள் வந்தவுடன் எப்போது நம்மைப் பார்ப்பார்கள் என்று எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கும் குழந்தைபோல் புது இலைகளுடன் முருங்கை கிளைகள் பால்கனி வழியே உள்ளே நுழைந்து அசைந்து கொண்டிருந்தன. நிவேதிதா புன்னகையுடன் அவற்றை அப்படியே கையில் ஏந்தி கன்றுக் குட்டியைத் தடவிக் கொடுப்பது போல் மென்மையாகத் தடவினாள்.
சிறுவயதில் ஒரு முறை முருங்கை மரத்தில் இலைகள் எல்லாம் உதிர்ந்து அது மொட்டையாக நின்றபோது அதிர்ந்து போய் அம்மாவிடம் முருங்கை மரத்துக்கு என்னவோ ஆகிவிட்டது என்று சொல்லி அழுததும் அம்மா அவளைத் தேற்றியதும் பின் கண் முன் அங்கங்கே லேசாகப் பச்சை படரத் தொடங்கி கைக்குழந்தை வளர்வது போல் கடகடவென்று இலைகளும் பூவுமாக மரம் மாறி நின்றதும் நினைவுக்கு வந்தது. சிரித்தபடியே நிவேதிதா இலைகளைப் பறிக்க அம்மா ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு வந்து வாங்கிக்கொண்டு
“நிவி, ஒன்னும் பிரச்சனை இல்லையே சாதாரணமாதானே இருக்கே” என்றாள்.
” ஏன்மா அப்படி கேட்கிற ?”
“இல்லை, உன்ன பாத்தா கண்ணாடிப் பெட்டி மேல ஜாக்கிரதையா உட்கார்ந்துட்டு அது உடைந்துடக் கூடாது என்கிற பதட்டத்தோட பேசற மாதிரியே இருக்கு ” என்றாள் அம்மா.
” உள்ளங்கையில வெச்சு தாங்கற மாப்பிள்ளையைப் பார்த்துக் கல்யாணம் பண்ணி கொடுத்து இருக்கே. எனக்கு என்ன கஷ்டம் சொல்லு. உனக்குப் பிரமை. சீக்கிரம் அடை வார்த்து தா. பசிக்கிறது” . அம்மாவைச் சமையல் அறைக்குத் தள்ளிக் கொண்டு போனாள் நிவேதிதா.
” நீ சாப்பிடு நிவி. அம்மா தக்காளி கேட்டா. நீ வரும்போதுதான் கிளம்பிட்டு இருந்தேன். நான் போய் வாங்கிட்டு வந்துடறேன்” என்று அப்பா கிளம்பினார்.
“இருங்கப்பா. நானும் வரேன்”.
“தக்காளியும் வெங்காயமும் வாங்குவதுதான் உனக்கு எப்பவும் இருக்கே. அப்பா போயிட்டு வரட்டும். நீ உட்காரு”.
“அம்மா, நான் காய் வாங்கவா போறேன். அப்பாவோட காலாற ஒரு நடை ” என்றபடி சாப்பிட்டு முடித்து விட்டு வந்து கால்களைச் செருப்புக்குள் நுழைத்தாள்.
செருப்பு ஸ்டாண்டின் பின்னால் லேசாகப் படர்ந்திருந்த தூசியும் ஒட்டடையும் அப்பாவிற்கும் அம்மாவிற்கும் வயதாகிக் கொண்டு இருப்பதை சொல்லின. நாளைக் காலை ஒரு மணி நேரம் வீட்டை முழுவதுமாக ஒருமுறை சுத்தம் பண்ணி கொடுத்து விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டு அப்பாவுடன் படியிறங்கினாள்.
இரவு சாப்பிடும்போது அப்பா கேட்டார் .
“ஏன்மா, போன வாரம் திடீர்னு உன்னோட புஸ்தகங்கள் எல்லாத்தையும் இரண்டு அட்டைப்பெட்டியில் போட்டு அனுப்பி வச்ச..என்ன பிரச்சினை?”
” ஆமா நானே கேட்கணும்னு நினைச்சேன். அதுக்குள்ள பழைய இரும்பு தோசை திருப்பி, வாணலின்னு நாலு சாமான்கள் வேற. என்னடி ஆச்சு?”
” ஒன்னும் இல்லம்மா. வீடு இன்டீரியர் மாத்த போறோம்னு பசங்க ரெண்டும் ஒரே கூத்து. தினமும் நாலு சாமானை இது பழசா இருக்கு, இது பார்க்க நல்லா இல்லைன்னு வெளியில போடறதும் அமேசானில் இரண்டு புதுசா ஆர்டர் பண்றதுமா ஒரே களேபரம். நிச்சயம் என் புத்தகங்களைப் படிச்சதே எத்தனை தடவை படிப்பேன்னு கேட்டாலும் கேட்கும். அந்தப் பிரச்சினையே வேண்டாம்னுதான் எல்லாத்தையும் பேக் பண்ணி இங்கே அனுப்பிட்டேன்”.
சரி, அந்தப் பாத்திரம் எல்லாம்?”
” அதான், இதெல்லாம் பழைய சாமான். அதுகளுக்கு பிடிக்காது. ஆனால் இது நூறு வருஷ பாத்திரம். இதைத் தொட்டு புழங்கற போதெல்லாம் எனக்கு உன்னையும் பாட்டியும் பார்க்கிற ஃபீலிங் இருக்கும். அதெல்லாம் சொன்னா குழந்தைகளுக்குப் புரியாது. ரெண்டு பேரும் வீட்டை விட்டுக் கிளம்பின அப்புறமா எல்லாத்தையும் எடுத்துட்டு போறேன்” என்றாள் நிவேதிதா.
அம்மா பேச்சை மாற்ற எண்ணி “இன்னைக்கு பவுர்ணமி , கொஞ்ச நேரம் மொட்டை மாடிக்கு போலாமா” என்றாள் .
“நிச்சயமா, எத்தனை வருஷம் ஆச்சு..” நிவி உற்சாகமானாள்.
ஆனா நீ எப்படி மாடிப்படி ஏறுவ?”
“அது பரவாயில்லடி. அந்த சந்தோஷத்துக்காக ஒருநாள் ஏறினால் என்ன. இல்லாட்டி மட்டும் வலிக்காமலா இருக்கு” என்றாள் அம்மா.
” சரி, நான் நாற்காலி எடுத்துட்டு மேல போறேன். நீங்க கீழே உட்கார வேண்டாம். ரெண்டு பேரும் மெல்ல வந்து சேருங்க” என்றபடி மூன்று மடக்கு நாற்காலிகளை எடுத்துக் கொண்டு மாடிக்குப் போனாள் நிவேதிதா. நாற்காலிகளை விரித்துப் போட்டுவிட்டு தரையில் கீழே சுவரில் சாய்ந்தபடி உட்கார்ந்து கொண்டாள். தலையை உயர்த்தி வானத்தைப் பார்த்தாள். அவள் வந்ததை கொண்டாடுவது போல் வானம் நட்சத்திரங்களை வாரி இறைத்து இருந்தது.
” அம்மா, என்னால முடியல. மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு. எல்லாத்தையும் விட்டுட்டு எங்கேயாவது கண்காணாத ஓடிடலாம் போல இருக்கு.”
குரல் உடைந்து போய் அழத் தொடங்கினாள்.
அம்மாவும் அப்பாவும் பதறிப் போனார்கள்.
” என்னம்மா ஆச்சு? நான்தான் நினைச்சேன். நீ வந்ததில் இருந்தே சரியா இல்லைன்னு. என்ன ஆச்சு சொல்லு?”
” இல்லம்மா. நிம்மதியே இல்லாம இருக்கு. அவனுக்கு பிளஸ் டூ மார்க் வந்தாச்சு. நல்ல மார்க்குதான். இன்னும் மெடிக்கல் எக்ஸாம் ரிசல்ட் வரலை. மெடிக்கல் சீட் கிடைக்கலைன்னா வீட்டை விட்டுப் போயிடுவேன் இல்லை, ஏதாவது பண்ணிப்பேன்னு சொல்லிட்டே இருக்கான். சர்வ நேரமும் அவன் மேலேயே கண் வச்சிட்டு இருக்க வேண்டியிருக்கு. ஒருவேளை கிடைக்கலைன்னா அவனை எப்படித் தேத்துவேன், காப்பாத்துவேன்னு கவலையா இருக்கு. ஒரு நாளில் எத்தனை தடவை சகஸ்ரநாமம் சொல்றேன் தெரியுமா? பெருமாளுக்கு காதுல ரத்தமே வந்திருக்கும். ரொம்ப டென்ஷனா இருக்குப்பா”. விம்மினாள்.
“நிச்சயம் கிடைச்சுடும். அப்படியே இல்லை என்றாலும் அதை ஏத்துக்க மனசு தெளிவை கடவுள் கொடுப்பார். நீ கவலைப்படாத. குழந்தைகள்னா அப்படித்தான் இருக்கும்” என்றாள் அம்மா.
” அவன்தான் சரி அப்படின்னா இவள் படுத்தற பாடு சுத்தமா தாங்க முடியலை. தினமும் ஒரு சண்டை. எதையாவது பார்த்து புதுசா பண்ண வேண்டியது. அன்னைக்கு சாயந்திரம் பார்லர் போய் தலைமுடியை கட் பண்ணிட்டு கலரிங் பண்ணிட்டு வந்தா. என் மாமனார் சும்மா இல்லாம “என்னம்மா இது தலைவிரி கோலம்?” அப்படின்னு கேக்க அவளுக்கு கோவம். தலைமுடியில் ஏதோ சாயம் பட்டிருக்கே, போய் தலை குளி, சாய தொட்டியில் விழுந்த நரி மாதிரி இருக்குன்னு வேற சொல்ல, அவ்வளவுதான்… என்னை ரூமுக்குள்ள இழுத்துட்டு போயி மூணு மணி நேரம் கத்தி தள்ளறா. நான் வீட்டைவிட்டு எங்கேயாவது போறேன், எனக்குன்னு ஒரு பர்சனல் ஸ்பேஸ் இல்லை. என்னோட வாழ்க்கையில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை அப்படி இப்படின்னு பேசுற பேச்சும் நடுவுல சொல்ற வார்த்தைகளும் பகீர்னு இருக்கு. நாம வளர்த்த குழந்தைகளான்னு எனக்கே திகைப்பா இருக்கு. ரொம்ப கஷ்டமா இருக்குமா” அழுதவாறு அம்மா மடியில் படுத்துக்கொண்டாள்.
அம்மா மெல்ல அவள் தலையைக் கோதினாள் .
“இதெல்லாம் ஒரு வயசு நிவி. கொஞ்ச நாள் ஆனால் எல்லாம் சரியாயிடும். பொறுமையாய் இரு”.
‘ நானும்தான் அந்த வயசு தாண்டி வந்தேன். உங்களை எல்லாம் இப்படியா படுத்தினேன்…எல்லாம் இந்த சோசியல் மீடியாவால வர்ற வேதனை. நாளைக்கு கல்யாணம் பண்ணி கொடுத்தா போற இடத்தில் எப்படி அட்ஜஸ்ட் பண்ணிக் கொண்டு இருப்பாள்ன்னு நினைச்சாலே வயித்துல புளியைக் கரைக்கிறது” என்ற நிவேதிதா திடீரென்று கட்டுப்படுத்த முடியாமல் பெரிதாக அழத்தொடங்கினாள்.
அப்பா அம்மாவை தடுத்தார். “கொஞ்சநேரம் விடு. அழுது தீர்த்துக்கட்டும். அதுக்குதான் வந்திருக்கா. கவலைப்படாதே, எல்லாம் சரியாயிடும்” என்றபடி அவள் கையை பிடித்துக் கொண்டார் அப்பா.
பளீரென்ற விளக்கு வெளிச்சம் கண்களைக் கூச வைக்க நிவேதிதா சட்டென்று கண்களைத் துடைத்துக் கொண்டாள்.
“அம்மா ஏன் விளக்கு போடற? நிலா இருக்கு. இங்கே உட்கார்ந்து இருக்கேன் பாரு வா” என்றாள் .
சரியா படி ஏறுகிற சமயம் பக்கத்து வீட்டுக்காரர் ஒரு டாக்டர் போன் நம்பர் கேட்டு வந்துட்டார். திருப்பியும் கதவை திறந்து உள்ளே போய் அவருக்கு எடுத்துக் கொடுத்துட்டு மேலே வர பத்து நிமிஷம் ஆயிடுச்சு ” என்றபடி அப்பாவும் அம்மாவும் உட்கார்ந்து கொண்டார்கள். நிவேதிதா துப்பட்டாவால் முகத்தை துடைத்துக்கொண்டு அவர்களைப் பார்த்து புன்னகைத்தாள்.
அப்போது அவள் அலைபேசி ஒலிக்க “அம்மா, அவர்தான் ரெண்டு நிமிஷம் பேசிட்டு வந்துடறேன்” என்றபடி எடுத்துக்கொண்டு ஒரு ஓரமாக சென்றாள்.
” நிவி, ஆர் யூ ஆல்ரைட்? அப்பா, அம்மா சௌக்கியமா?”
“நல்லா இருக்காங்க. நீங்க எல்லோரும் அங்கே போயாச்சா? பசங்க ஓகேவா?”
” எஸ். எதோ புரோகிராம் போயிட்டு இருக்கு. தே ஆர் எஞ்சாயிங். கவலைப்படாம நிம்மதியா இரு. நீ இவங்க ரெண்டு பேர் கூடவும் எவ்வளவு டென்ஷன் படறேன்னு தெரியும். உனக்கு இந்த ப்ரேக் வேணும். அம்மா அப்பா கிட்ட எல்லாம் புலம்பியாச்சா?”
” அவங்ககிட்ட சொல்லி ரெண்டு பேரையும் வேதனைப்படுத்த மாட்டேன். நான் புலம்பதான் நீங்க இருக்கீங்களே.. ஆனா என் கஷ்டத்தை எல்லாம் மானசீகமாக பேசியாச்சு” என்றாள் .
” ஐ லவ் யூ நிவி”.
தென்னங்கீற்றுகள் கழுத்தின் பின்புறம் உரசி ஒரு குறுகுறுப்பை ஏற்படுத்த நிவேதிதா புன்னகைத்தபடியே ” நானும்” என்றாள்.
அப்பா மெல்லிய குரலில் காற்று வெளியிடை கண்ணம்மா என்று பாடத் தொடங்கினார். சற்று நேரத்தில் அம்மாவும் அவரோடு சேர்ந்து கொண்டாள். நிவேதிதா அந்த நேரத்தையும் உணர்வையும் தனக்குள் முடிந்தவரை நிரப்பி அதில் மிதந்தாள்.
