
“போட்டோவைத் தந்ததிலிருந்து இப்படி இடிந்து போய் உட்கார்ந்திருந்தா எப்படி பாவனி? உனக்காக அலைஞ்சு திரிஞ்சு பிடிச்ச மாப்பிள்ளை இது. பேரு சஞ்சய். பெற்றோருக்கு ஒரே பையன்.காலேஜ் கூட உங்க காலேஜ் தான். உனக்குச் சீனியராய் இருப்பான். எங்க எல்லோருக்கும் ரொம்பப் பிடிச்சிருக்கு. அதுவும் அவன் கண்கள் பாரேன்! மையிட்ட கண்கள் மாதிரி அத்தனை வசீகரக் கண்கள்! ஏண்டி இப்படி பதில் சொல்லாம கண்ணுல தண்ணி விடற? அழகிடி நீ! உனக்கேத்த அழகன் தான் அவன்!”
“அம்மா! அந்தக் கண்கள்! அது தான் மா என்னை டிஸ்டர்ப் பண்ணுது.”
“பண்ணாதா என்ன? அப்பச் சரின்னு சொல்லு!”
“எதிலிருந்து தப்பிக்க நான் கல்யாணத்துக்குச் சரின்னு சொன்னேன்னு சொல்லு!”
“பாவனி! அது எதுக்கு இப்போ?”
“சொல்லும்மா!”
“அந்தப் பஸ் ஆக்சிடெண்டில் நீ பிழைத்து உன்னைக் காதலித்த அசோக் தவறிய நினைவை மறக்க!”
“இந்தச் சஞ்சயும் அந்த பஸ்ஸில் இருந்தவன் தான்மா!”
“இருக்கட்டுமேடி!”
“அன்று கண்ணிழந்த சஞ்சய்க்குத் தன் கண்ணைக் கொடுத்தது அசோக் தாம்மா! ஆக அவன் அசோக்கா? சஞ்சயா?”
பாவனி அழத் தொடங்கினாள்
