ரா. சீனிவாசன்/”வாழ்க்கை என்பது?”

உண்மையென்பதென்னவென்று நீ கேட்டாய்
மேல் ஆகாயம்
கீழ் பூமியென்றேன்.

அன்பு என்பது என்னவென்றாய்
என்மேல் நீயும்
உன்மேல் நானுமென்றேன்.

அறிவென்பது?
நீ நீயென்றும்
நான் நானென்றும், உணர்வது.

துறவென்பதென்னவென்று? உன் கேள்வி,
பற்றற்று போவதென்றேன்.

பிரிவு? கருணை? கோபம்? சோகம்?
இன்பம் துன்பம்? நட்பு? காதல்?
பொய்மைகள்
பொய்மைகளென்றேன்.

பின், முழுமையென்பதென்னவென்றாய்
உனை அறிவதென்றேன்

சரி,
வாழ்க்கை யென்பதென்ன?
என்றாய்.
என்ன வென்று சொல்ல.

(ஆத்மாநாம் தயாரித்த 23வது
‘ ழ’ இதழிலிருந்து (டிசம்பர் 1982) எடுக்கப்பட்ட கவிதை)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன