
அந்தச் சிறுவன்
பலமுறை முயன்றும்
பம்பரம் சுற்றவில்லை!
சுழலாத பம்பரங்களை
பீரோவில் சேமித்து
தன் பால்யகால நிழலோடு விளையாடிக்
கொண்டிருந்தான்!
அந்த வியாபாரிக்கு
மீசையே முளைக்கவில்லை!
ஆனால் அவருக்கு
பானை நிறைய ஆசை
வீரப்பன் மீசை மீது!
அந்த மீசை
காட்டை ஆண்டது போல்
தானும் ஆள ஆசை கொண்டான்!
அவன்
மழுங்கிய தன் அறுவாளை
கூர் செய்ய ஒரு சாணையன்
வருகையை நாடி நின்றான்!
எவரும் வரவில்லை!
அவன்
தன் வீட்டு கதவின்
நெளிவு சுளிவுகளை
சரிசெய்ய பரணிலிருந்து
சுத்தியலை உருவினான்!
அதன் பிடி கரையான் அரித்து
சிதிலமடைந்திருந்த்து!
அவன் எல்லோருக்கும்
இலை போட்டு விருந்தளிக்க
விழைந்தான்!
அடித்த காற்றில்
இலைகள் கிழிந்து
சின்னாபின்னமானதில்
நின்று போனது விருந்து
ஆதவனை கிரகஹணம்
காவு கொள்வதறியாது
கிரணங்கள்
பொசுக்கிவிடுமென
சூளுரைத்தான் அவன்!
ஆனால்
எதிர் கிரண வீச்சில்
தான் பொசுங்கியபோதும்
கருகவில்லையென
பெருமிதத்தில் அறற்றினான்!
அறற்றலில் விலகவில்லை
கிரகஹணம்!
அழுவதற்கோ,
அறற்றுவதற்கோ ஏதுமின்றி
நீரொட்டா இலையுடன்
அமைதியாய் அவர்கள்
குளத்திற்கு வேலியிட்டு
பூப்பறித்துக் கொண்டிருந்தனர்!
பூ அவர்களுடையது
குளம் அவர்களுடையது
அவர்களே வியாபாரி
அவர்களே வாடிக்கையாளர்!
விளையாட்டாய்
அவன் சாலையில் எழுப்பிய
விசில் சத்தம் அன்று எவர்
செவிலும் விழவில்லை!
இன்று
அதே விசில் சத்தம்
எல்லோர் செவிகளையும்
கிழித்தெடுக்கிறது!
அழுகை
ஒப்பாரி
ஆற்றாமை
தாளாமை
அறற்றல் –என
எண்ணற்ற விசில்கள்
திசையெங்கும் ஒலிக்கின்றன!
09-06-2026
