வைரமனம் முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி

செண்பகம் அந்த அழகிய கடற்கரை அருகில் உள்ள விடுதியில் தூய்மைப் பணி செய்கிறாள்.அருகில் உள்ள குப்பத்திலிருக்கும் இவள் வீட்டிலிருந்து நடந்து போகும் தூரத்தில்தான் அந்த விடுதி.
அன்று காலை எழுந்திருக்கும்போதே பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் மகள் சுமதி, தனக்கு ஏதோ நோட்டுப் புத்தகம் வேண்டுமென்று பணம் கேட்க, இவள் வாங்கித் தருவதாக வாக்களித்தாள்.
கதவைத் தட்டிய வீட்டு முதலாளி துலுக்காணம், குடைக்கூலி மூணு மாசம் பாக்கி என்று எச்சரிக்க, இவள் இரண்டு நாளில் தருவதாக வாக்களித்தாள்.
இப்போதெல்லாம் இவளுக்கு அடிக்கடி தலைசுற்றுகிறது.காசில்லாததால் டாக்டரிடம் போகாமல் ஓட்டி வருகிறாள்.
வேலைக்குப் போகும்போது தோழியருடன் காலையில் பேசிக்கொண்டே கடற்கரையில் நடந்து போவது வழக்கம்.
கடற்கரை மணலில் காலைக் கதிரவன் ஒளியில் பட்டு, அழகாக மின்னியது அது.
மூட்டுவலி காரணமாக, முன்னாடி தோழியரை நடக்கவிட்டு பின்னாடி நடந்த செண்பகத்தின் கண்ணில் அது பட, டக்கென்று எடுத்து வைத்துக் கொண்டாள்.
அந்த வைரத்தோட்டின் விலை -கண்டிப்பாக ஐம்பதாயிரத்துக்குக் குறையாது.
விடுதியில் கண்டிப்பான ஆனால் நேர்மையான சூப்பர் வைசர் பெண்மணி எல்லோரையும் விரட்டிக்கொண்டிருந்தாள்.கழிவிடத்திற்கு எழுந்து வந்து பார்க்காமலேயே காணொளியில் பார்த்து விட்டு, இங்குக் கறை அங்குக் கறை என்று சுட்டிக்காட்டும் கெட்டிக்காரி அவள்.
ஐம்பதாயிரம் ரூபாய் கிடைத்தால் செண்பகத்தின் தேவைகள் எல்லாமே பூர்த்தியாகும்…
” வர்ற வழில கிடந்தது; பாவம் யாரோடதோ தெரியலம்மா…”, என்று கூறி சூப்பர் வைசரிடம் நீட்ட அவள் இவளை மதிப்புடன் பார்த்தாள்.
” செண்பகம் ! பணத்துக்காகக் கஷ்டப்படற நிலைமைலயும் நேர்மையா இருக்கியே…நான் பாஸ் கிட்ட சொல்லி உனக்குச் சம்பள உயர்வுக்கு ஏற்பாடு செய்யறேன்.இதை உரியவங்களிடம் சேர்க்க ஏற்பாடு செய்றேன்”, என்றவள் யாருக்கோ போன் செய்தாள்.
அன்றிரவு தூங்கும்போது நாளைய தேவைகளை எப்படி பூர்த்தி செய்வோம் என்ற பயம் இருந்தாலும் மனம் நிறைந்து போய்க் கிடந்தது.

One Comment on “வைரமனம் முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி”

  1. சிறப்பான சிறுகதை . தன்னலம் கருதாது கடமையாற்றுவோரின் வைர மனம் இங்கே மின்னுகிறது . ஆசிரியர் சிவகாமசுந்தரி நாகமணிக்கு இனிய வாழ்த்துகள் .

Comments are closed.