
பல தசாப்தங்களாக, கடல் அவர்களுக்கு வாழ்வாதாரமாகவும். உறவுகளைக் காவுவாங்கிய குடும்ப எதிரியாகவும் இருந்தது.
இன்றும் பௌர்ணமியாதலால்.. அலைகள் ஒரு அமைதியற்ற, எச்சரிக்கும் தாளத்துடன் கரையில் மோதின.
சுனாமிக்கு கணவனைப் பறிகொடுத்தவளும், ஆழ்கடல் புயலுக்கு தமையனை வாரிக் கொடுத்தவளும், எல்லை தாண்டினானென அண்டை நாட்டுக்குப் பிள்ளையைப் பலி கொடுத்தவளும் பெறக்கிய சிப்பி கிழிஞ்சல்களுடனும், சிக்கிய சிறு மீன், நண்டுகளுடனும் நிதானமான நடையுடன் வீட்டை நோக்கி நடந்தனர்.
பிளாஸ்டிக் பைகளும், நெளிந்து தேய்ந்த உலோகக் கூடைகளும் அவர்கள் திரட்டிய செல்வங்களுடன், அவர்களின் குடும்பத்தின் பொருளாதாரச் சுமையைத் தாங்கியிருந்தன.
” ராவுக்கு கஞ்சிக்கு தொட்டுக்க இந்த மீன பொறிச்சிடப் போறேன். நீ வெஞ்சனம் வச்சிருக்கியா.. வேணுமா?” குறைவாய் இருந்தாலும் சக மனுஷியிடம் பகிர்ந்து கொள்ள தயாராய் இருந்தாள் அதில் ஒருத்தி.
கண்ணீரிலும், வறுமையிலும் கழிந்த காலத்தைப் போலவே.. கற்களும் சிப்பிகளும் நிறைந்த மணல், அவர்களின் பழகிய வெறும் கால்களுக்குக் கீழ் நகர்ந்தன.
அவர்களுக்குப் பின்னால், பரந்த சாம்பல் நிறக் கடல் குறுகிய கடற்கரையை ஆக்கிரமிக்கப் போவதாய் அச்சுறுத்தியது.
இருப்பினும், அவர்களின் கண்கள் இருண்டுகொண்டிருக்கும் வானத்தைப் புறக்கணித்து, முன்னோக்கியே இருந்தன.
துக்கத்தை தூரவைத்து எதிர்காலத்தை எதிர்த்து ஓடிய மனுசிகளின் நெஞ்சுரம் எதைக் கண்டும் அஞ்சாத உரம் பெற்றிருந்தது.
மழையின் முதல் துளி விழுந்தபோது, அவர்கள் கரையின் மேடான.. பாதுகாப்பான பகுதியை அடைந்திருந்தனர்.
கடல் தோல்வியுடன் கர்ஜித்தது, ஆனால் கடற்கரையின் இந்தச் சகோதரிகள்.. அன்றைய நாளை வென்றிருந்தனர்.
