சங்கர் ஜோதிராஜ்/சுவாமிராமதாஸ்அருளியக்கதைகள்

ஒரு மனிதர் பூதம் ஒன்றை வரவழைத்துத் தான் விரும்புவதை எல்லாம் அதைச் செய்யவைக்க வேண்டும் என்று விரும்பி அதற்குத் தேவையான சாதனைகளில் ஈடுபட்டார். சில மந்திரங்களின் சக்தியினால், அவரால் பூதத்தைத் தன் முன்னால் வரவழைக்க முடிந்தது. பூதமும் அவருடைய கட்டளைகளுக்குப் பணிந்து நடக்கத் தயாராக இருந்தது. ஆனால் அது ஒரு நிபந்தனையை விதித்தது. “எப்பொழுதாவது நீங்கள் எனக்கு வேலை கொடுக்காவிட்டால், நான் உங்களை விழுங்கி விடுவேன். நீங்கள் எனக்கு இருபத்து நான்கு மணி நேரமும் வேலை கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்’ என்று கூறியது. அந்த மனிதர் ஏற்றுக்கொண்டார். உடனடியாகத் தனக்கு ஒரு பெரிய மாளிகை கட்டித்தர வேண்டும் என்று கட் டளை இட்டார். அவர் பெரிதும் ஆச்சரியப்படும்படியாக, சீக்கிரமே மாளிகை கட்டப்பட்டு விட்டது. அடுத்ததாக ஒரு நீண்ட சாலை அமைக்க உத்தரவிட்டார். அதுவும் ச ற்று நேரத்திலேயே முடிந்துவிட்டது. அடுத்த நிமிடம் பூதம் அவர் முன் நின்றது. “இன்னும் வேலை கொடுங்கள்” என்று கேட்டது. அவருக்கு யோசிக்கக்கூட நேரம் இருக்கவில்லை. ஒரு பெரிய நகரத்தை உருவாக்க உத்தரவிட்டார். அதுவும் பத்து நிமிடத்தில் தயாராகிவிட்டது. அந்த மனிதர் குழம்பிப் போனார். பயம் அடைந்தார். புதிதாக என்ன உத்தரவு கொடுப்பது என்று அவருக்குத் தெரியவில்லை. வேலை கொடுக்கா விட்டாலோ, பூதம் அவரைச் சாப்பிட்டுவிடும். அவர் ஒரு மஹானிடம் விரைந்து சென்று அவரிடம் யோசனை கேட்டார். அந்த மஹான் ஒரு மூங்கில் கம்பத்தைப் பூமியில் பதிக்கும்படி யோசனை சொன்னார். அடுத்த உத்தரவுவரை அந்தக் கம்பத்தில் பூதம் ஏறி இறங்க வேண்டும் என்று கூறச் சொன்னார். அவர் அப்படியே செய்தார். பூதம் கட்டளையை நிறைவேற்றித்தானே ஆக வேண்டும். அதாவது பூதத்திற்கு ஓய்வே கிடையாது. கடைசியாக, அது வெறுத்துப் போய் ஓடி விட்டது.
இப்போது உங்கள் விஷயத்திலேயே பாருங்கள். ராம நாமம் தான் கம்பம். அகங்காரம் தான் உங்களை மிரட்டும் பூதம். மீண்டும், மீண்டும் கம்பத்தில் ஏறி இறங்கும்படி அதனிடம் சொல்லுங்கள். அது சீக்கிரமே களைத்துப் போய் ஓடி விடும். அகங்காரத்தை அடக்கத்தான் ராம நாமம் உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அகங்காரம் மறைய வேண்டுமாயின் அதன் சொந்த முயற்சியினாலேயே அது நடக்க வேண்டும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன