விருட்சம் நினைவுகள் 8/அழகியசிங்கர்

இரண்டாவது இதழ் கொண்டு வர வேண்டாமென்று நினைத்தேன்.  இத்தனைக்கும் காலாண்டுக்கு ஒருமுறைதான் இந்தப் பத்திரிகை.  ஏன் கொண்டு வரவேண்டாம்?  கோபி கிருஷ்ணன்தான் காரணம்.  

அவரிடம் ஏதோ குழப்பம்.  விருட்சம் மூலம் எல்லோரிடமும் சண்டை போடுவோமோ என்ற பயம்.  அதேபோல் விருட்சத்தில் ஒருத்தரை ஒருத்தர் கவிதைகள் மூலம் தாக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. கோபியால் அதைத் தாங்க முடியவில்லை.  üநாம் இருவரும் நண்பர்களாக இருப்போம்.  ஆனால் பத்திரிகை விஷயமாக நான் இணை ஆசிரியராக இருந்து செயல்பட விரும்பவில்லை,' என்று ஒரு கடிதத்தை டைப் அடித்து அனுப்பியிருந்தார்.  

எனக்கு ஆச்சரியமாக இருந்தது.  வெறும் வாயால் சொன்னால்  போதாதா? ஏன் டைப் அடித்து அனுப்ப வேண்டும்.  அப்போது என்னுடன் நெருக்கமாக நண்பராக இருந்த ஸ்ரீனிவாஸனிடம் இந்தக் கடிதத்தைக் காட்டினேன்.  üüஇப்படித்தான் இந்த கோபி கிருஷ்ணன்..."அவருக்கு யாரிடம் என்ன பேசுவது என்று தெரியாது," என்றார் ஸ்ரீனிவாஸன்.

இரண்டாவது இதழுக்கு வந்த படைப்புகளைப் பார்த்தேன்.  ஒரே குழப்பமாக இருந்தது.  பத்திரிகைக்கு வந்த கவிதைகள்தான் என்னைக் குழப்பின.  உதாரணமாகத் தேவதச்சனின் ஒரு நிமிஷம் என்ற கவிதை.  அக் கவிதையை இங்கே தர விரும்புகிறேன்.


    உயிர் பிரிவதற்கு
    எப்போதும் 
    ஒரு நிமிஷம்தான் இருக்கிறது 

    மகிழ்ச்சி துண்டிக்கப்பட்டு
    துயரத்தில் சாய்வதற்கும்
    எப்போதும் ஒரு நிமிஷம்தான்
    இருக்கிறது.

    இருட்டு, பயம், திகைப்பு, இவற்றின்
    இருண்ட சரிவில் உருள்வதற்கும்
    எப்போதும் ஒரு நிமிஷம்தான்
    இருக்கிறது.

    இவ்வொரு 
    நிமிஷத்தில்
    அண்டச் சராசரம் ஆடி
    ஒரு  நிமிஷம்
    வளர்ந்து விடுகிறது


சில வரிகளே கொண்ட சின்ன கவிதைதான் இது.  ஆனால் என்னை யோசிக்க வைத்தது.  நாம் ஏதோ சந்தோஷத்திற்குப் பத்திரிகை நடத்துகிறோம். ஏன் இதுமாதிரி கவிதைகளைப் பிரசுரம் செய்து நம் மனசோடு, படிக்கிறவர்கள் மனசையும் கெடுக்க வேண்டும்.  இப்படி ஒரு கவிதை என்னைச் சலனப்படுத்தும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை.  

அதேபோல் நடராஜ் என்பவர் ஒரு கவிதை எழுதியிருந்தார். கவிதையின் பெயர் தங்கச் சிலந்தி.  செங்குளவியால் செத்து விழுந்தது தங்கச் சிலந்தி என்று எழுதியிருப்பார்.  என்னடா இது சாவை ஞாபகப்படுத்துகிற மாதிரி கவிதைகள் என்று நினைத்தேன்.  மெய்நெறிப்பித்தன் என்பவரின் கவிதை இந்த நூற்றாண்டில் இந்தியாவில்... பாசத்தைத் தலை முழுகியாயிற்று என்று ஆரம்பிக்கும்.

பிரம்ம ராஜன் ஒரு கவிதை எழுதியிருப்பார். மண்டையின் விசிறிகள் என்ற தலைப்பில் ஒரு கவிதை. என்னடா இது மண்டையில் விசிறியா என்றெல்லாம் யோசிப்பேன். ஆனால் எழுதியவர் பிரம்ம ராஜன் என்பதால் பிரசுரம் செய்தேன்.

அதே போல் கவிதைக் குறிப்புகள் என்ற தலைப்பில் ரா ஸ்ரீனிவாஸன் ஒரு கட்டுரை எழுதியிருப்பார்.  படிக்கிறவர்களுக்கும் தலையும் புரியாது காலும் புரியாது.  ஒரு சிறுபத்திரிகை என்றால் என்ன?  அதன் பிரச்சினைகள் என்னன்ன என்றெல்லாம் யோசித்து அப்போது குழம்பிப் போயிருக்கிறேன்.

                      (இன்னும் வரும்)