
சொர்க்கமே தரைக்கிறங்கி வரும்
அரிய காதற் கணங்களில்
அமரத்துவத்தைச் சுவைத்துள்ளேன்
நிகழ்கணத்தின் ஆற்றலை உணர்ந்துள்ளேன்
தலையசைத்துத் கொண்டே பனித்துளி வந்து முத்தமிடக்
காத்திருக்கும் அந்த அரும்பைப் பார்
அது தான் காதலின் பொழிவிறக்கம்
தனியே நடக்கும் தருணத்திலும் நான்
தனியனாக இல்லை
பாதை நெடுகிலும் மலர்கள்
வான் நிறைக்கும் விண்மீன்கள்
என்னைச் சுற்றி இருக்கின்றன நட்போடு
நாம் வாழும் கணம் ஒவ்வொன்றிலும் காதலின் கீதம்
செதுக்கப் பட்டுள்ளது
அதைப் படி அல்லது சிற்றோடை அப்பாடலை
இசைப்பதையோ, அதிரும் பெரிய மணியின்
ஓசையையோ கேள்
உடலை விட்டு அவ்வப்போது
உலவச் செல் வெளியே
குளிரோ, தகிக்கும் கனலோ
கலகலப்பாய் விளையாடிப் பார்
மெலிந்த கால், கைகளின் வரம்புக்குட் படாமல்,
தொடுவானைத் தொடு
அப்போது, அப்போது தான், எல்லையொன்றின்மை
என்னும் விரிவை நீ தெரிந்து கொள்வாய்
வானும், மண்ணும், நானும், நீயும் – ஊஹூம்
எந்தப் பிரிவும் இருக்கவே முடியாது

“விட்டு விடுதலையாகி நிற்பாய் சிட்டுக் குருவியைப் போலே” என்ற பாரதியின் வரிகளுக்கு விளக்கமாகத் திகழ்கிறது இந்தக் கவிதை!
“உடலை விட்டு அவ்வப்போது
உலவச் செல் வெளியே” – என்ற வரிகளில் உயர்ந்த ஆன்மிகத் தேடலை நான் பார்க்கிறேன்.