
வழக்கமான பாதை
இல்லையென்றாலும்
நம்பிக்கையுடன்
தலையை ஆட்டி ஆட்டி
பின் தொடர்ந்தது
ஐந்து வருடங்களுக்கு முன்
மகள் ஆசைப்பட்டதால்
வீட்டுக்குள் வந்தது
எப்பொழுதும்
ஏதாவது குரலெழுப்பி
ஒட்டுபவன்
நாளைக்குள் பணம்
கட்டவில்லையென்றால்
வீட்டுக்கு அனுப்பிவிடுவதாக
மகளின் சிறுத்த குரல்
காதில் ஒலிக்க
இன்று
மௌனம் காத்தான்
சந்தையின் சலசலப்பில்
சற்று மிரண்டது
கயிறு கைமாறும் வரை
ஒன்றும் அறியாத ஜீவன்
நாலு கால்களையும்
தரையில் ஊன்றி
வர மறுத்தது
கடைசியில்
லாரியில் ஏற்றியபோது
செய்வதறியாது நின்ற
அவனைப் பார்த்து
“ம்… மே…”
“ம்… மே…”
