‘ ஜி.பி.சதுர்புஜன்’/அப்பாவின் நினைவுகள்

அப்பா உன் எளிமை எண்ணி உருகுகின்றேன்_உன்
வாழ்க்கை தந்த பாடங்களை எண்ணுகின்றேன்!
பக்கத்தில் இருந்திடினும் உன் அருமைகளை
பல வருடம் போனபின் தான் நான் அறியலுற்றேன்!

இரண்டு வேட்டி இரண்டு சட்டை உனக்குப் போதுமே!
துண்டு ஒன்று இருந்துவிட்டால் துணைக்குப் போதுமே!
பாண்ட்டு சட்டை ஷீசாக்ஸ் வெறுத்தொதுக்கினாய்!
எளிமையின் இலக்கணமாய் வாழ்ந்து காட்டினாய்!

இருப்பதிலே இன்பங்கண்டு இருக்க முடியுமா?
இல்லாததை எண்ணாமல் இருக்க முடியுமா?
மற்றவரைத் திரும்பிப் பார்த்து வாழ்வோர் மத்தியில்
தனக்குள்ளே வாழ்ந்து காட்டி வழியும் காட்டினாய்!

நடை உடை பாவனை அனைத்தும் எளிமையே!
தஞ்சைக்காரன் இப்படியும் இருக்க முடியுமா?
மைனர் செயினும் தங்கப் பல்லும் தரிப்போர் மத்தியில்
திருப்தி ஒன்றே அணிகலனாய்க் கொண்ட தந்தையே!

பரபரபர உலகத்திலே பவனியும் வந்தாய்!
பதைபதைத்து ஓடுவர்கள் மத்தியில் வாழ்ந்தாய்!
இதையும் அதையும் தேடியலையும் மக்களின் நடுவே
எதையும் சட்டை செய்யாமல் அதிசயம் செய்தால்!

நின்ற போதும் நடந்த போதும் உண்ண அமர்ந்த போதும்
நாற்பது பேர் நடுவினிலே நிற்கின்றபோதும்
வீடெனினும் வெளியெனினும் வெளிநாடென்றாலும்
குணம் மாறாமல் அமைதிக்குன்றாய் நடந்தது மென்னே!

அமர்க்களமான இடத்திலும் நீ அமைதியாய் நின்றாய்!
ஆடம்பரம் சிறிதும் உன்மேல் படாமல் நின்றாய்!
ஒரே ஜோடி செருப்பைத் தைத்து பல்லாண்டுகள் போட்டாய்!
எதற்கும் மயங்காத என்னப்பன் நீயே!

என் அன்னையை நீ கடிந்து நான் பார்த்ததுமில்லை!
தகாத வார்த்தையெதும் பயன்படுத்தியதில்லை!
பிள்ளைகளைத் தட்டிக் கொட்டி சரியாக்கினாய்!
உன் தியாகத்தினால் எங்களையே உருவாக்கினாய்!

அப்பா உன்னை நாங்கள் எல்லாம் அண்ணா என்றோம்!
என்றும் உன்னை எம்நினைவில் தரித்திருந்தோம்!
வரும் காலம் சந்ததிகள் பெறும் புகழ்கள்
அத்தனையும் உன் சந்நிதியில் அர்ப்பணிப்போம்!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன