
40 வருடங்களுக்கு முன்னால் ஒரு காலை….
என் கன்ஸல்டிங் ரூமில் அமர்ந்து, நோயாளியைப் பார்த்துக் கொண்டிருந்தேன். எட்ட நின்று யாரோ என்னைப் பார்த்துக்கொண்டிருப்பதைப் போன்ற உணர்வு – ஸ்டெத்தைக் காதிலிருந்து கழற்றி, தலை நிமிர்ந்து, அறை வாயிலைப் பார்த்தேன். புன்னகையுடன், கண்கள் சுருக்கி, கைகள் இரண்டும் முன்னால் பின்னியபடி, தும்பைப் பூ வெள்ளை வேட்டியும், மடித்துவிடப்பட்ட வானத்து நீல சட்டையுமாக நீ என்னைப் பார்த்துக் கொண்டிருந்தாய் – அந்த நொடியில், என்னுள் நிறைந்த மகிழ்ச்சியும், நிறைவும் இன்று வரை என்னுடன் உன் ஆசீர்வாதங்களாய் ……
“ஏதோ வந்தேன், சும்மாப் பாத்துட்டுப் போலாமேன்னு….” கண்ணில் ஏதோ இனம்தெரியாத ஈரம் – உன் வாழ்வின் அர்ப்பணிப்புகளில் ஒன்றான நான் என்னும் உருவம், உனக்கு முன்னே மருத்துவனாகக் கண்டதில் உன் மனதின் மகிழ்ச்சி, பெருமிதம், இறைவனுக்கு நன்றி ஏதோ ஒன்று – கண்ணில் திரையிட்டதை நான் அறிவேன்.
உடனே எழுந்து வந்த என்னைத் தலை முதல் கால்வரை முழுமையாகப் பார்த்து, மாறாத புன்னகையுடன், மென்மையாக அணைத்து, உச்சி மோந்த அந்த நொடியில் நான் கரைந்து காணாமல் போனேன். இன்னும் சில நொடிகளே …. ‘சரி, போய் வேலையப் பாரு. காத்துண்டிருக்கா பார்’ என்றபடி திரும்பினாய். மீண்டும் என் இருக்கையில் நான்….
வாயிலைக் கடக்குமுன், நின்று திரும்பி என்னைப் பார்த்துக்கொண்டு நிற்கிறாய் – தலை நிமிர்த்தி நான் என்ன என்பது போல் பார்க்கிறேன் – இப்போது உன் கண்ணின் நீர், கன்னத்தில். ஒன்றுமில்லை என்பதைப் போல் விரித்த உன் வலது கையை ஆட்டிவிட்டுச் ‘சட்’ டென வெளியின் வெளிச்சத்தில் மறைந்து விட்டாய்.
துவண்டு விழும் போதெல்லாம், உன் கண்ணீர் நிரம்பிய இந்தப் பாசமே என்னைத் தூக்கி நிறுத்துகிறது – அந்த முகமே எப்போதும் மனதில் மயிலிறகாய் வருடிவிடுகிறது.
உனக்கன்றி வேறு யாருக்கங்கே இடம்? அங்கிருந்தே மகிழ்வுடன் ஆசீர்வதிப்பாய் எங்களை அண்ணா – அப்படித்தான் நாங்கள் அப்பாவை அறிவோம்!
அப்பவின் நினைவில் ……
See less
