" ஏய் ராமாயி , வீராயி இன்னிக்கு நான் கொண்டு வந்த மீன் எல்லாம் வித்துப் போனதால் நான் உங்களுக்கு நம் தெரு முக்குக் கடையில் வடையும், டீயும் வாங்கித் தரேன் " என்றாள் சந்தோஷமா வேலாயி.
அவர்கள் மூவரும் சென்னை பட்டினப் பாக்கம் அருகே உள்ள காட்டுக் குப்பத்தில் ஒரே தெருவில் வசிப்பவர்கள் .
மூவருக்கும் உள்ள ஒற்றுமை பல வருடங்களுக்கு முன் சேர்ந்து மீன் பிடிக்கப் போன அவர்களின் கணவன்கள் ஊர் திரும்பவே இல்லை.
எவ்வளவோ முறை அரசாங்கத்தில் மனு கொடுத்தும் ஆள் வைத்து தேடிப் பார்த்தும் என்ன ஆனார்கள் என்று தெரியாமல் இவர்களே ஒருவருக்கு மற்றவர் துணை என தன்னை மாற்றிக் கொண்டார்கள்.
எங்கு போனாலும் என்ன செய்தாலும் மூவரும் சேர்ந்து தான் இருப்பார்கள்.
மீன் வியாபாரம் தான் அவர்களின் ஒரே வழி வருமானத்துக்கு.
டீக்கடைக்குப் போய் வடை, டீ கேட்க " கொஞ்சம் தள்ளி நில்லுங்க, மீன் வாடை வருது உங்க மேலே" என்று முகம் சுளித்தவாறு சொன்னார் கடைக்காரர்.
ஓரமாக நின்று வடை சாப்பிட்டு டீயைக் குடித்ததும் வேலாயி தன் சுருக்குப் பையில் இருந்து பணம் எடுத்துக் கொடுக்க அதை வாங்கும் கடைக்காரரைப் பார்த்து வீராயி " இந்தப் பணம் மீன் விற்றதில் தான் வந்தது இது மட்டும் நாறாதா?" என்றாள்.
கடைக்காரர் முகத்தை தொங்கப் போட்ட படி பாவமா பார்த்தார் .
அடியேய் வீராயி, பணம் சாக்கடையில் கிடந்தாலும் நாறாதுன்னு உனக்குத் தெரியாதா? வாங்கடி போலாம் என்றாள் வேலாயி சிரித்தபடி.