
எங்களுக்கு நினைவு தெரிஞ்ச நாளாகவே அப்பா கதர் வேஷ்டி கதர் ஜிப்பா போட்டுண்டு தான் பார்த்திருக்கோம். அலுவலகத்திற்கும் வேட்டி ஜிப்பாவில் தான் போவார். சிறந்த தேசபக்தர். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் எல்லாம் கலந்து கொண்டிருக்கிறார். ஒரு நாலு செட் கதர் வேட்டி ஜிப்பா வச்சிருப்பார்.வார இறுதியில் அதைச் சோப்பு பவுடர்ல முக்கி ஊறவைத்து துவைக்கிற கல்லில் பளீர் என்று அடித்துத் துவைத்து, சாதம் வடித்த கஞ்சியை லேசாகப் போட்டு டினோபால் நீலம் போட்டு வெயிலில் உலர்த்தி எடுத்து வைப்பார்.பிறகு இஸ்திரி போட்டுப் பளிச்சென்று அலுவலகத்திற்கு கட்டிக் கொண்டு போவார். அந்தக் கதர் ஆடையின் வாசமே மனதிற்கு மிகவும் ரம்யமாக இருக்கும் . இதைத் தவிர அப்பாவுக்கு வெற்றிலை போட்டுக் கொள்ளும் பழக்கம் இருந்ததால் ஒவ்வொருமுறை வெற்றிலைப் போட்டுக் கொள்ளும் போதும் பன்னீர் புகையிலை சிறிதளவு எடுத்து , இடது உள்ளங்கையில் வைத்து வலது கட்டை விரலால் நன்றாக நசுக்கி ரசித்துப் போட்டுக் கொள்வார் . அந்த இனிமையான வாசமும் வீடு முழுக்க பரவி எங்கும் அப்பாவின் வாசம் நீக்கமற நிறைந்திருக்கும்.
அந்தக் காலகட்டத்தில் அப்பா மட்டும் அல்ல, நிறைய எழுத்தாளர்கள் கதர் வேட்டி ஜிப்பா போட்டுக் கொண்டு போவதை பார்த்திருக்கிறோம்.
கதர் வேட்டி கிழிந்து விட்டால் அதில் நன்றாக இருக்கும் பாகங்களைப் பெரிய பெரிய சதுர துண்டுகளாகக் கிழித்து அம்மாவிடம் தருவார். அந்தத் துண்டுகளின் நாலா பக்கமும் கையால் ஹெம்மிங் தையல் போட்டு அம்மா தந்தவுடன் வெளியில் போகும்போது எடுத்துக் கொண்டு போகக் கைக்குட்டைகள் பக்காவாகத் தயாராகிவிடும்.
இன்று தந்தையர் தினத்தில் எங்கள் தந்தை எழுத்தாளர் ரசவாதியே நினைவு கூற ஒரு வாய்ப்பு கிடைத்ததற்கு நன்றி
