கேள்விக்காரன்/அப்பா

எனும் மூன்றெழுத்து
என்னில்
தாய் சூட்டிய
பெயரெழுத்து

அப்பா
வெள்ளை வெளேர்
தும்பைப் பூ
பாபபுலின் காமராஜர்
நீள அங்கி
அரைக்கைச் சட்டையும்
அரையில்
நாலு முழ வேட்டியும்
அணிந்த
சொற் சிக்கனன்

இட்லி உப்புமா
நேசன்
பிள்ளைகள்
குடும்ப நேசனும்

துள்ளி ஏறும்
சாகஸ
சைக்கிள் ஓட்டி

அப்பாவின்
வெளி உள்
சட்டைப் பையில்
அகிலம்
அடைக்கலாம்

விழிப்பு
உழைப்பில்
பறவைகளின
உறவினர் அவர்

அப்பா
அலுவலகம்
செல்லும் போதும்
விடை பெறுவதில்லை
தன் இறுதி
விடையின் போதும்
ஆர்பாட்டம்
ஆர்ப்பரிப்பின்றி
சன்னமாக
தன்னுயிர் நீத்தார்

அப்பாவுக்கு
ஏன் படத் தொழுகை

என்னில் பதிந்த
நானான அசலுக்கு
நான் ஏன் நகல்
படம் மாட்ட வேண்டும்
நாள்தோறும்
பொட்டிட்டு
பூக்கள் சொருக
வேண்டும்
பூமாலை சூட்ட
வேண்டும்?

எனக்கு
சுய ஆராதனை
நம்பிக்கை
இல்லை.

செல்லமாய்
என்னுள்
உறங்குங்கள்
என் செல்ல அப்பா
ஆரிரரோ ஆரிரரோ
அல்லும் பகலும்
உழைத்துழைத்து
உடல் தீபம் ஒளிர்ந்த
என்னுள் இறையாய் உறையும்
என்
செல்ல அப்பா
ஆரிரரோ….ஆரிரரோ.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன