கிரிஜா ராகவன்/நடந்து நடந்து கடந்த வாழ்க்கை

நினைத்துப் பார்க்கிறேன்
நான் நடந்த கதையை
நடந்து கடந்த வாழ்க்கை
நன்றாகத்தான் செல்கிறது

முத்தாய்ப் பிறந்த என்னை
ஆறே மாதத்தில் ஆசையுடன்
வயிற்றின் மேல் நிற்க வைத்து
அழகு பார்த்த அம்மா

எழுந்து நின்ற பின்பும்
தடுமாறிய கால்களுக்கு
பாதம் அழுத்தி நடப்பதற்கு
பயிற்சி கொடுத்த பாட்டி

சுவர் பிடித்து நடந்து பின்
விழுந்து எழுந்து அழுது
தானே நிற்க, நடக்க, ஓட
தைரியம் தந்த தந்தை

தெரிந்தாலும் நடக்காமல்
அடம்பிடித்து அழுத்தம் காட்ட
தோளில் தூக்கி அசராமல்
ஊரைக் காட்டிய தாய் மாமன்

ஹிந்தி வகுப்புக்கு சின்ன அத்தை
பாட்டு கிளாசுக்கு பெரிய அத்தை
எலக்ட்ரிக் ட்ரெயினில் சித்தப்பா
எல்லோரும் தூக்க யார் விட்டார்கள் நடக்க?

பள்ளி கல்லூரிப் பாடங்கள்
புத்தி பிடித்து நடக்கச் சொல்ல
வேலை, திருமணம் மகப்பிறப்பு
வாழ்க்கை கற்று நடக்க நகர்த்த,

எதிர்பாரா சோகம் அறைய
கற்றுத் தெளிய காலங்கள் செல்ல
எழுந்து துணிந்து விரைந்து
எதிர்காலம் நோக்கி நிமிர்ந்து நடக்க,

இலக்கும் செயலும் தெளிவாய்ப் புரிந்திட
பலரும் பக்தியும் இனிதாய் வழி காட்ட,
புகழும் செல்வமும் சேர்ந்து வந்திட,
ஏணிப்படிகளில் ஏற்றமாய் ஏறி நடக்க,

அறுபதும் எழுபதும் ஆரத் தழுவிட
நினைத்ததும் அல்லதும் ஆழமாய்க் கிடைத்திட
இனி ஒரே பயணம் இறைவனை நோக்கி
அவன் காட்டும் பாதையில் அமைதியாய் நடக்கிறேன்!!!

………..

One Comment on “கிரிஜா ராகவன்/நடந்து நடந்து கடந்த வாழ்க்கை”

Comments are closed.