
பறவைகள் கூச்சல் எழுப்பும் முன்பே
வீட்டை விட்டுப் புறப்பட்டிருக்க வேண்டும்
என்னைத் தேடி வந்த அவர்கள்
நன்றாக ஆடை அணிந்திருந்தார்கள்
நெடுந்தூரம் பயணம் செய்த களைப்புடன்
தமக்குள் நானாவித மொழிகள் பேசினார்கள்
உள்ளே வரும்படி அவர்களை அழைத்தேன்
அவர்கள் யாரிடமும் ஆயுதம் இல்லை என்பது
பயத்தின் அளவைப் பாதி குறைத்தது
வீட்டைச் சுற்று முற்றும் பார்த்தார்கள்
சுவரில் தொங்கிய சித்திரங்களை
வியப்பு இல்லாமல் அவர்கள் பார்த்தார்கள்
அவர்கள் எனது பெயரை அறிந்திருந்தார்கள்
நான் தான் என்பதை உறுதி செய்து
மறுபடி வருவோம் என்றார்கள்
அதுவரை நானோ குடும்பமோ எங்கும்
அசையக் கூடாதென எச்சரித்தார்கள்
தாளில் என்னைக் கையெழுத்திடச் சொன்னார்கள்
கேள்விகள் துன்பம் தரக்கூடும் என்றார்கள்
இறுக்கம் நீங்கிய அவர்கள் முகத்தில்
தீக்குச்சி வெளிச்சம் தோன்றி மறைந்தது
என்னைத் தேடிய எட்டுப் பேரும்
தாங்கள் வந்த காரிலே திரும்பினார்கள்
தெருவில் எவரும் எதுவும் கேட்கவில்லை
தேநீரும் கையுமாய் வந்த மனைவி
என்னிடம் போய்விட்டார்களா என்றாள்
ஆம் என்றேன் இருவரும் மௌனமானோம்
