
பூவோ தலையோ!
யாருக்கு எதுவானால் என்ன!
நான் சுண்டிவிட்ட
நாணயம் இன்னும்
கீழே வந்து சேரவில்லை!
நீ சுண்டிவிட்டதும்
இன்னும் தரையைத் தொடவில்லை!
யார் சுண்டிவிட்டதும்
கீழே விழவில்லை!
சுண்டிவிட்ட நாணயங்கள்
கீழே வந்து சேருமுன்னே
வெற்றி எனக்கெனக் கொண்டாட்டம்!
வெற்றியின் சங்கு முழங்குமுன்னே
மூண்டுவிட்டது யுத்தம்!
நாணயங்கள்
தலையிழந்தன
பூவுமிழந்தன!
அந்தரத்தில் நின்ற
நாணயங்கள் யுத்தத்தை
இயக்கிக்கொண்டிருந்தது!
யுத்தம்
எதையெதையோ சுண்டிவிட்டு
விண்ணில் ஏவிய கரும்புகை
பரவிக்கொண்டிருக்கிறது
உன் வீட்டிலும் என் வீட்டிலும்!
என்று நாணயங்க்ள
கீழே விழும்!
யாருக்கு பூ! யாருக்கு தலை!
29-06-2026
