கவிஞர் புவியரசு கவிதை ஒன்று

தந்தை மகற்காற்றும் உதவி

இதைப் பார் மகனே!
மனதில் பதிய வைத்துக்கொள்!
எதற்கும் படமெடுத்துக் கொள்!
இது மண் சாலை அன்று,
ஒரு காலத்தில் நீரோடிக்
கொண்டிருந்த
உனது நதி.
நீ அமரிக்காவுக்கு
சம்பாதிக்கப் போயிருந்தபோது,
இதை விற்று விட்டார்கள்.
என்னை அவர்கள் கேட்கவே இல்லை.
நான் காய்ச்சலில்
படுந்திருந்தபோது நடந்திருக்க வேண்டும்.
உன் அம்மா சொல்லித்தான்
தெரிந்தது.
ஆற்றங்கரையில் குளிக்கப் போனபோது
அது காணாமற் போனதைக்
கண்டுகொண்டு வந்து சொன்னாள்.
சந்தேகமே படவேண்டியதில்லை
கொஞ்சம் இறங்கி நடந்து பார்
காலில் இறந்தகால ஈரம் தெரியும்.
நன்றாகப் பார்த்துப் படமெடுத்துக் கொள்.
வருங்கால வரலாற்று
ஆவணப் பதிவுக்குப் பயன்படும்.
மகனே, அதோ,
அந்த மலையைக் கூடப்
படம் பிடித்துக்கொள்!
அதுவும் நீ அடுத்தமுறை
வரும்போது இல்லாமற் போகலாம்!
இந்தப் பாழுங் கிணற்றையும்
படம் பிடித்துக் கொள்
பிளாஷ் போட்டு.
அன்பு மகனே, குறிப்பாக
இந்த மரத்தை விட்டுவிடாதே!
இதுதான்
நமது ஊர் விவசாயிகள்
தூக்குப் போட்டுக் கொள்வதற்காக
ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன