
மேடம், இந்த ஒரு முறை மன்னிச்சு விட்டுடுங்க, இனிமே இந்த மாதிரி நடக்காது.
போயும் போயும் ஒரு வாயில்லா ஜீவன்கிட்ட உன்னோட அல்பப் புத்தியைக் காமிச்சிருக்கயே.
என் சாப்பாட்டுல கை வச்சிருந்தாக் கூடப் பரவாயில்லை. டாமியைப் பட்டினி போட்டுட்டியே!
உன்னை நம்பித்தானே விட்டுட்டுப் போனேன்.
இப்படி என் டாமியைத் துரும்பா இளைக்க வைச்சுட்டியே!
திருமணமாகி நியூசிலாந்தில் வசிக்கும் தன் பெண்ணின் பிரசவத்துக்காக ஆறு மாதங்கள் சென்று வந்திருந்த உஷா வேலைக்காரன் வேல்சாமியிடம் இறைந்து கணக்குத் தீர்த்து அனுப்பிவிட்டாள்.
கொஞ்சம் கவனமாச் சுருட்டியிருக்கணுமோ…இப்படிக் கையும் களவுமாப் பிடிபட்டு உள்ளதும் போச்சே!
நொந்து கொண்டே நடந்தவன் தோட்டப் பாதையில் ஊர்ந்து கொண்டிருந்த பாம்பைக் கவனிக்காமல் மிதிக்க இருக்க…மின்னல் வேகத்தில் குரைத்து அவனைக் காப்பாற்றியது டாமி.
கண்களில் நீர் நிறையக் குனிந்து டாமியை அணைத்துத் தன் நன்றியை வெளிப்படுத்திய வேல்சாமி…
நா உன்னை ஏமாத்திப் போட்ட கொஞ்சம் சாப்பாட்டுக்கே உன் நன்றியக் காமிச்சிட்டியே டாமி! எஜமானியம்மா சொன்ன மாதிரி.. நீ நன்றியுள்ள ஜீவன். என்னை மன்னிச்சிடு என்று கூறி நகர்ந்தான்.
டாமி தன் வாலை ஆட்டியபடியே உள்ளே சென்றது.
