
தன் கையில் இருந்த சொற்பப் பணம் கொண்டு தாய் மைதிலிக்கும், கால் ஊனமுற்ற ஐந்து வயதுத் தம்பி நரசிம்மனுக்கும் சாப்பிட ஏதாவது வாங்கி வரும் எண்ணத்தில் சாலையைக் கடந்தாள் பத்து வயது அமுதா.
தம்பியின் அழுகைக் குரல் கேட்க, திரும்பியவள் வெகுண்டாள். வேகமாகச் சாலையைக் கடந்தவள் பின்னாலிருந்து விட்ட உதையில் நிலைகுலைந்த அந்தக் காமுகனை நோக்கிக் காறி துப்பினாள்.
ஏன்யா, உன்னோட இச்சையைத் தீர்த்துக்க போயும் போயும் இந்த மனநலம் பாதிச்ச பொம்பளைதான் கிடைச்சாளா? என்றவாறே தாயின் ஆங்காங்கே கிழிந்த புடவையைச் சரியாகப் போர்த்திவிட முயன்று தோற்றாள்.
எத்தனை டாஸ்மாக் கடைகள் மூடினா என்ன…எவ்வளவு போதை ஒழிப்புப் படைகள் திரண்டா என்ன…. உங்கள மாதிரி ஜென்மங்கள் எல்லாம் திருந்தவே மாட்டீங்க.
குடிச்சே அழிஞ்ச எங்கப்பனால நாங்க இன்னைக்கு நாதியில்லாம பிளாட்பாரத்துல இந்த மாதிரி வாழ்வுக்கும், சாவுக்கும் இடையில் போராடிக்கிட்டிருக்கோம்.
மனசாட்சின்னு ஒண்ணு இருந்துச்சுன்னா…போ…போயி உன் குடும்பத்தைக் கவனி. அவங்களுக்காச்சும் எங்க நிலைமை வராம இருக்கட்டும்.
அடித்த சரக்கின் போதை முழுதும் இறங்கியிருக்க, சாட்டையடியாய் விழுந்த அந்தச் சின்னப் பெண்ணின் கர்ஜனையில் குனிந்த தலை நிமிராமல் கைக்கூப்பியவாறே நகர்ந்தான் அந்தக் காமுகன்.
