
1943 ஆம் வருடம் மார்ச் மாத கலைமகள் இதழில் வெளியான சிறுகதை செல்லம்மா.
நோயில் வீழ்ந்து நடைபிணமான மனைவி செல்லம்மாளுக்கும் அவளைப் பார்த்துக்கொள்வதற்காகவே பட்டணத்தில் வாழ்ந்துவரும் கணவன் பிரமநாயகம் பிள்ளைக்கும் இடையிலான அன்பு, அந்நியோன்யம், கரிசனம் இவற்றின் கலவையான காதல் தான் ‘செல்லம்மாள்’. இந்தக் கதையை ஒரு ஆர்பாட்டமில்லாத, ஆழமான காதல் கதையென விவரிப்பதில் எனக்கு எந்தவிதமான மனத்தடையும் இல்லை!
சென்னையில் வசிக்கும் இடமோ, சுற்றி உள்ளவர்களோ, செல்லம்மாவின் வியாதி என்னவென்றோ, பிரம்மநாயகம் பிள்ளை வேலை செய்யும் ஜவுளிக் கடைபற்றிய குறிப்புகளோ – இப்படி எந்த விபரமும் தேவையில்லை! நோயிலும், வறுமையிலும் சிக்கித் தவிக்கும் ஒரு முதுமைத் தம்பதிகளிடையே இழைந்தோடும் ‘அந்நியோன்யம்’ – காதல் உணர்வே செல்லம்மா கதையின் மையச் சரடு. அது புதுமைப் பித்தனின் கைவண்ணத்தில் ஓர் அழகிய சிற்பம்போல், ஓவியம்போல் மிளிர்கின்றது. அவரே சொல்வதுபோல், “காதல் காதல் என்று கதைக்கின்றீர்களே, இதுதான்யா காதல்” என்று உணர்த்துவது போன்ற சிறுகதை செல்லம்மா.
1943 ல் எழுதப்பட்ட கதை. செல்லம்மாளின் மரணத்தில் ஆரம்பித்து, அவர்கள் வாழ்க்கையைப் பின்னோக்கிப் பார்த்து, மீண்டும் அவளது மரணத்திற்கு முந்தைய சில நாட்களை விவரித்து, மீண்டும் ஆரம்பப் புள்ளியான செல்லம்மாவின் மரணத்திலேயே கதை முடிகின்றது – இன்று பெருமைப்பட வைக்கின்ற உத்தி, அன்றே புதுமைப்பித்தனால் கையாளப்பட்டிருக்கிறது என்பது வியக்க வைப்பது.
தங்கள் சொந்த ஊரை விட்டுச் சென்னையின் ஒரு கோடியில் வாழ்கின்றனர் பிரம்மநாயகம் பிள்ளையும், அவரது மனைவி செல்லம்மாவும். சென்னையில் வசித்தாலும் அவர்களுடைய உரையாடல் திருநெல்வேலி வட்டார வழக்கிலேயே உள்ளது. ஜவுளிக் கடை ஒன்றில் வேலை பார்க்கும் பிள்ளைக்குச் சொற்ப வருமானம். “ஒரு ஜோடி ஜீவன்கள் உடலைக் கீழே போட்டுவிடாமல் இருக்க வேண்டிய அளவு ஊதியம் தருகிறார்” என்ற ஒற்றை வரி அவர்களது வறுமைக் கோட்டை விவரிக்கிறது.
செல்லம்மாவுக்கோ வறுமையுடன், எப்போதும் உடல் வியாதி – அடிக்கடி வந்து போகும் மயக்க நிலை, ஜன்னி கண்டாற்போல் பிதற்றுவது, பின்னர் சுய நினைவு திரும்புவது என ஒரு வியாதி. மயக்கநிலையில் பிதற்றுவதை எல்லாம் செல்லம்மாவின் ஆழ்மனதில் உள்ள ஆதங்கங்களாகக் கொள்ளலாம் – சொந்த ஊருக்குச் செல்ல விருப்பம், ஐந்து வருடங்களுக்கு முன் இறந்துபோன தன் தாயின் நினைவுகள், எங்கும் செல்ல முடியாமல், கைகால்களைக் கட்டிப்போட்டாற்போல வீட்டிலேயே அடைபட்டுக்கிடக்கும் வாழ்க்கையெனப் பிள்ளையிடமே பிதற்றுகிறாள்.
வறுமையையும், இயலாமையையும், செல்லம்மாவின் நோய்பற்றிய விவரணைகளையும், அதற்குப் பிள்ளை கை வைத்தியமாகச் சுடுநீர், சுக்குப் பொடி, தவிடு ஒத்தடம் எனச் செய்யும் சிகிச்சைகளையும் எந்த விதமான ஆரவாரமுமின்றி மிக நுணுக்கமாகக் கதை போகிறபோக்கில் சொல்லிச் செல்கிறார் புதுமைப் பித்தன்.
வீட்டிற்கு வரும் வைத்தியனைக் கூட, “ஒரு பஞ்சத்தில் அடிபட்டவன் போன்ற சித்த வைத்திய சிகாமணி ஒருவனைத் தேடிப்பிடித்து அழைத்துக்கொண்டு வருகிறார்” என விவரிக்கிறார். வீட்டில் பிரதானமாக இருப்பது தண்ணீர், கருப்பட்டி, கொஞ்சம் பால்…. நாக்கு வரண்டு குடிக்கத் தன்ணீர் கேட்கும் செல்லம்மாவிடம், ‘சுடுநீர் தருகிறேன்’ – ஜுரத்திற்கு அதுதான் சிகிச்சை என்பது போல – என்கிறார். செல்லம்மாவோ, சுடுநீர் வேண்டாம் என்கிறாள். தர்க்கம் ஏதும் செய்யாமல் அவள் கேட்டபடி குளிர்ந்த நீரையே தருகிறார். தர்க்கம் கொடுக்கும் சிறு வலியைக் கூடத் தன் மனைவிக்குக் கொடுக்க விரும்பவில்லை அவர்!
செல்லம்மாவின் நினைவு சரியாக இருக்கும் தருணங்களில், அவர்களிடையே நடக்கும் உரையாடல்கள், அவர்களிடையே இருக்கும் பந்தத்தை மிக மென்மையாகத் தெரிவிக்கின்றன. “ஊர்ப்பேச்சு தற்சமயம் பிரச்சனைகளை மறப்பதற்குச் செளகர்யமாகப் போதை தரும் கஞ்சா மருந்தாகவே அந்தத் தம்பதிகளுக்கு உபயோகப்பட்டு வந்தது”.
“இண்ணைக்கித்தான் சித்தெ தலெ தூக்கி நடமாடுதெ. வீணா உடம்பெ அலெட்டிக்கொடாதெ”
“என் மேல பளியப் போட்டு, கடைக்குப் போகாம இருக்க வேண்டாம். போய்ச் சம்பளப் பணத்தை வாங்கி வாருங்க”
அம்மாவை வரவழைக்கத் தந்தி கொடுக்கிறேன் என்று சொல்லும் பிள்ளையிடம், “துட்ட வீணாக்க வேண்டாம் – கடுதாசி போட்டா போதும்! அவ எங்க வரப்போறா?” என்று சொல்லுவதில், செல்லம்மாவின் கரிசனமும், ஆதங்கமும் ஒன்றாக வெளிப்படுகின்றன.
“சென்னை அவருக்கு நிம்மதியற்ற வாழ்வைக் கொடுத்து அக்கினிப் பரீடசை செய்தது. செல்லம்மாள் வீட்டிலே அவருக்கு நிம்மதியற்ற வாழ்வைக் கொடுத்துச் சோதித்தாள்; குணத்தினால் அல்ல, உடம்பினால். அவளுக்கு உடம்பு நைந்து விட்டது. பிள்ளைக்கு வெளியில் சதா தொல்லை.வீட்டிலே உள்ளூர அரிக்கும் ரணம்.”
செல்லம்மா இறந்தபிறகு, பிரம்மநாயகம் பிள்ளையின் அமைதியான நடவடிக்கைகள், இறுதிச் சடங்குகள் அவரை ஒரு ஞானியாகவே நினைக்கத் தோன்றுகின்றது. “ஈயை இறந்தவள் மேல் உட்காரவிடாமல் விசிறியால் மெல்ல வீசிக்கொண்டே இருந்தார்”
இறுதியில் வருத்தம் இல்லாமல், பிலாக்கணம் தொடுக்கும் பெண்ணின் அழுகையில் வெளிப்பட்ட வேஷத்தைச் சொல்லிப் புதுமைப் பித்தன், பிள்ளையின் அழுகையோ ஆரவாரமோ இல்லாத ஆத்மார்த்தமான அன்பினைச் சுட்டுகிறார் என்றே நினைக்கத் தோன்றுகின்றது.
கதை முழுவதும் பிரம்மநாயகம் பிள்ளையின் பலவேறு மனநிலையையே விவரிக்கிறார் புதுமைப்பித்தன். இருந்தாலும், செல்லம்மா என்றே தலைப்பிட்டிருக்கிறார்! ‘பிரம்மநாயகம் பிள்ளை’ என்றோ, ‘செல்லம்மாவின் கணவர்’ என்றோ பெயர் வைத்திருக்கலாமோ எனத் தோன்றினாலும், புதுமைப் பித்தனுக்கு நம் மனதில் படாத வேறு காரணங்கள் இருந்திருக்கலாமென எண்ணும்போது, மறுவாசிப்பைக் கேட்கிறது மனது.
எத்தனை முறை வாசித்தாலும், மனது என்னவோ கனத்துத்தான் போகிறது.

ஆகா சூப்பர்