
ஒரு பக்தர் ரமண மகரிஷி பகவானிடம்
விடைபெற்றுச் செல்ல வந்தார்.
ஸ்வாமி ! நான் உங்களிடம் விடைபெற்று, தொலைதூரம் செல்ல வந்திருக்கிறேன் அதில் ஒரு சிறிய வருத்தம் எனக்கு உண்டு… ஆசிரமத்தில் உங்களோடு தங்கியிருப்பவர்கள் ஒவ்வொரு நிமிடமும் தெய்வீக ஆனந்தத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
நான் விடைபெற்றுச் சென்றாலும் என்னையும் அதே போல் ஏற்றுக்கொண்டு தெய்வீக ஆனந்தத்தை அருளுங்கள்” என்று கேட்டுக் கொண்டார்.
அதற்கு ஸ்ரீ பகவான் பதில் அளித்தார்.
இங்கே ஆசிரமத்தில் தங்கியிருக்கும் பக்தர்களுக்கு விசேஷமாகக் கருணை அளிக்கப்படுகிறது என்று ஒவ்வொருவரும் நினைக்கிறார்கள். அப்படி விசேஷ முன்னுரிமை அளித்தால் ஒருவர் எப்படி ஞானியாக இருக்க முடியும் ?
தன்னிடம் சரணாகதி அடைந்தவர்களைப் பாதுகாப்பதற்கு கடவுள் கடமைப்பட்டிருக்கிறார். சரணாகதி அடைந்தவர் பிரார்த்தனை கூடச் செய்யத் தேவை இல்லை. கடவுள் எப்போதும்
உடன் இருக்கிறார் ! பாதுகாப்பு தருகிறார் !
தாமரைப் பூவுக்குப் பக்கத்திலேயே தவளை இருக்கிறது. இருந்தும் என்ன பயன்?. எவ்வளவு தொலைதூரத்திலிருந்து வந்தாலும் தேனீக்கள்தான் அந்தத் தாமரையின் தேனை உறிஞ்சி அருந்துகின்றன. ” என்று ஸ்ரீ பகவான் கூறினார்.
See
