குற்றத்தை உணர்த்தி சந்ததியைக் காத்த காஞ்சி மஹான்!

மஹா பெரியவாளின் ஒப்பற்ற கருணை உள்ளத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை எனலாம். மஹான் எந்தச் சமயத்தில், எந்தப் பக்தன் மீது தனது அருட் பார்வையைத் திருப்புவார் என்று சொல்லவே முடியாது. தன்னை மனப்பூர்வமாக வணங்கி, வாழ்க்கை நடத்தும், தனது பக்தர்கள் எந்த விதத்திலும் பாவ மூட்டைகளைச் சுமக்கக் கூடாது என்பதில் அந்த மஹான் கண்ணும் கருத்துமாக இருந்தார் என்பதற்கு நிதர்சன உதாரணங்கள் பல உண்டு. இதோ அதில் ஒன்று.

ஒருநாள் மஹாபெரியவா காஞ்சியில் இருந்த சமயம். பூஜை முடிந்தவுடன் பக்தர்களுக்கு ஆசி வழங்கும் பொன்னான நேரம். அந்தச் சமயத்தில் தான், ஒவ்வொரு பக்தருக்கும், அவரது வாழ்நாளில் அதுவரை நடக்காத ஏதாவதொரு நிகழ்ச்சி நடக்கும். பல வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம்.

திருத்துறைப்பூண்டியிலிருந்து ஒரு பக்தர் மஹானைச் சேவிக்க அன்று வந்திருந்தார். வைதீக கர்மங்களைச் செய்யும் தொழில் அவருக்கு. அவருடன் அவரது மனைவியும் வந்து இருந்தார். இருவருக்கும் மஹானின் மீது அளவற்ற பக்தி. சதா மஹானின் சிந்தனையோடு காரியங்களைச் செய்து வரும் அவர், இன்று பேசும் தெய்வத்தின் முன்னால் ஆசிக்காக நிற்கிறார்.

அவரது க்ஷேமலாபங்களைப் பகவான் விவரமாக விசாரிக்கிறார். பயபக்தியுடன், பக்தரும் சொல்கிறார். மஹானின் குரலில் திடீரெனக் கண்டிப்பு இடம் பெறுகிறது.

“ஏம்பா… வரவர… மடத்துக்கு நீ கடனாளியாகி வருகிறாயே, ஏன்?”

அந்த அந்தணர் திகைப்புடன் ‘மிரள மிரள’ விழிக்கிறார்.

தான் எப்போது மடத்திடம் கடன் வாங்கினோம். எதனால் மஹான் இப்படியொரு குற்றச்சாட்டைத் தன்மீது வீசுகிறார் என்றே அவருக்குப் புரியவில்லை. நடுக்கத்துடன் அதைக் கேட்கவும் செய்கிறார்.

“பெரியவா அனுக்கிரகம். எனக்குப் புரியவில்லை.” அவரை ஒரு தடவை ஏற இறங்கப் பார்த்த மஹான் சொல்கிறார்.

“நீ ரொம்ப நன்றாகச் சிரத்தையுடன் உன் ஊரில் வைதீகக் கர்மங்களைப் பல குடும்பங்களுக்குச் செய்து வருகிறாய். அதே சமயம் எப்போதும் குரு சிந்தனையாகவும், பக்தியுடனும் இருக்கிறாய்… ஆனால் வாத்தியார் சம்பவானை என்று பணம் வாங்குவதுடன் குரு சம்பவானை என்றும் வாங்கி வருகிறாய்… ஆனால் நீ இங்கே வந்து ஏழெட்டு வருஷமாச்சு… இல்லையா?” என்று சொல்லி நிறுத்திவிட்டு அந்த அந்தணருக்குப் பிரசாதத்தைக் கொடுத்தார்.

அவருக்குப் புரிந்தது. குரு சம்பவானையாக வாங்கும் காணிக்கை மடத்திற்கல்லவா சேர வேண்டும். அதை அத்தனை வருடமாக அனுப்பாமல், தான் அல்லவா அனுபவிக்கிறோம். அதை எவ்வளவு நாசூக்காகப் பகவான் அவருக்கு ஞாபகப்படுத்தி விட்டார். பணத்தை உரிய இடத்தில் சேர்க்காவிட்டால் அது பாவம் தானே? அதனால் தான் மடத்திற்கு கடனாளி ஆகிவிடுகிறார் அந்தணர். ஊருக்கு வந்த அந்தணர் மறுநாள் குருகாணிக்கையாக ஒரு தொகையை எடுத்துக் கொண்டு, மறுநாளே காஞ்சிக்கு வந்து மஹானின் முன் நிற்கிறார். அவர்முன் தொகையை வைக்கிறார். அதைப் பார்த்த மஹான் புன்முறுவலுடன் சொல்கிறார்.

“நீ ரொம்ப நல்லவன். ஆசாரம் தவறாதவன். எப்போதும் இறைவனை இதயத்தில் இருத்தி மிகவும் தூய்மையான வாழ்க்கையை நடத்தி வருகிறாய். அப்படிப்பட்ட உனக்கு எந்த விதத்திலும் பாபம் சேர்ந்துவிடக் கூடாதே என்பதால் தான் உரிமையோடு உன்னிடம் பேசினேன். சாதாரணமாக செய்யும் எந்தத் தவறுமே நம் சந்ததிகளைத் தாக்கும். நீ மடத்துக்குச் சேர வேண்டிய பணத்தைச் செலுத்தாவிட்டால் அது பின்னால் உன்னையும், உன் குழந்தைகளையும் பாதிக்குமே என்றுதான் சொன்னேன். நீ இப்போது கொண்டு வந்திருப்பது அதிகப்படியான பணம். இதில் மடத்திற்குச் சேரவேண்டியதை மட்டும் எடுத்துக் கொண்டு ரசீது தருவார்கள். மீதியை நீயே எடுத்துக் கொண்டு போ”. என்றார் மஹான்.

தன்னை வணங்கும் பக்தருக்கு எந்தவிதமான பாபமும் சேர்ந்துவிடக் கூடாதே என்பதில் மஹானுக்குத் தான் எவ்வளவு அக்கறை?

💫 🅚🅝💫

See less

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன