
தொத்தா வீட்டிலிருந்து சந்தையைக் குறுக்கே கடந்து வீடு திரும்பி. கொண்டிருந்த அன்னக்கொடி, தன்னை கண்டதும் ஒரு ஆடு குதிப்பதையும், தாவுவதையும் கண்டாள்.
முதலில் அலட்சியமாகக் கவனித்தாலும் பார்த்தவுடனே அது சட்டென அடையாளத்துக்கு வந்தது.
“என்ன பண்ற இங்க நீ சடையா?” என்று அதனுடன் பேசிக்கொண்டே அருகில் சென்று அதன் கட்டை அவிழ்த்துச் சுற்றும் முற்றும் பார்த்தாள்.
இவளைக் கண்டு ஒளிந்து கொண்டிருந்தாள் போலும், பூங்கோதை தயக்கத்துடன் மறைவிலிருந்து வெளியே வந்து அருகில் வந்தாள்
“ஏட்டி பூங்கோத. இரண்டு வருஷத்துக்கு முன்னாடி என்னாண்ட அழுது தொழுது, ‘கண்ணுக்குக் கண்ணா வளப்பேன்.. கறியாக்க மாட்டேன்’ னு சொல்லி வாங்கிட்டு போன சடையனையா இப்படி குர்பானிக்கு விக்கக் கொண்டு வந்து இருக்க? பணம் வாங்கிட்டா கொடுத்தேன்? பாசத்துக்கு தானே கொடுத்தேன்” என்று கடிந்து கொண்டாள்.
ஆடு அன்னக்கொடியின் கால்கள்மேல் உரசிக்கொண்டு நின்றது. தன்னை விற்க அழைத்து வந்திருக்கிறார்கள் என்று அதற்குப் புரிந்து இருக்க வேண்டும்.
பூங்கோதையின் கண்கள் கலங்கி இருந்தன. தலைகுனிந்து கண்ணீர் உகுத்தாள்.
“எதுக்கு இப்படியொரு காரியம் பண்ணுதியோ? சரி. இந்தா பிடி” என்று சுருக்கு பையிலிருந்து ஒரு 500 ரூபாய் எடுத்து, பூங்கோதை மறுக்க மறுக்க அவள் கையில் கொடுத்து விட்டு, ஆட்டுடன் வீடு நோக்கி நடந்தாள் அன்னக்கொடி.

மனதை நெகிழ்ச்சியடையச்செய்த கதை. ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க ஸ்ரீராம். அன்னக்கொடியின் செயலில் அன்பு கருணை எல்லாம்..
கீதா