ஜெ.பாஸ்கரன்/கண்ணன் மன நிலையை…

1963 ஆம் வருடம் என்று நினைவு….
அண்ணாமலை யூனிவர்சிடியின் ‘ஹாஸ்டல் டே’ கொண்டாட்டம்.
பள்ளிச் சிறுவனாக, டார்க் மெரூன் அரை டிராயர் (ட்ரெளசர்தான்), ‘பீச்’ வண்ண அரைக்கை சட்டை (இப்படி வெளிர் வண்ண நல்ல சட்டையில், காப்பி, சாம்பார், சட்னி கரை படுவது வழக்கம் – இன்றும் அப்படித்தான் – கொட்டியது காளி மார்க் கோலா) போட்டுக்கொண்டு மாமாவின் சுவாலஜி டிபார்ட்மெண்டில் டிஃபன் சாப்பிட்டுவிட்டு மதியம் 3 மணி முதல் வேடிக்கை பார்த்துவிட்டு, ஆறு மணியளவில் திறந்தவெளி அரங்குக்கு வந்தேன். திறந்தவெளி அரங்கம் நிரம்பி வழிந்தது. தூரத்தில் இருந்த மேடையில், சுற்றிலும் வாத்தியக் கலைஞர்கள் சூழ நடுவில் அமர்ந்திருந்த அவர் தலையில் தொப்பியில்லை. அருகில் சுருட்டை முடியில் இரட்டைப் பின்னலுடன் அமர்ந்திருந்த இளம் பெண் குனிந்த தலை நிமிராமல், இருந்தார்.
சென்னையிலிருந்து வந்திருந்த இசைக்குழுவினரின் மெல்லிசை நிகழ்ச்சி. ரேடியோவிலும், சினிமாத் திரையிலும் கேட்டிருந்த பாடல்களை நேரில் பாடியவர்களே பாடுவதைக் கேட்பது முதல் முறை. (நெசமாத்தான் வாசிக்கிறீயளா, இல்லெ வெச கிச ஏதாவது வெச்சு ஊதுறீகளா? எனக் கேட்கும் மனோரமா ஆச்சியின் மனநிலையில் நான் இருந்திருக்க வேண்டும்!) ஆஹா பரவசம்….
“காலங்களில் அவள் வசந்தம்..” பாடலைத் தொடங்கியவுடன் அரங்கே அதிர்ந்தது – தொப்பி போடத் துவங்குமுன்னான PB ஶ்ரீனிவாஸ் மிக அனாயசமாகப் பாட, கடைசியில் காலங்களில் ‘இவள்’ வசந்தம் எனப் பாடியதும் அரங்கில் கரகோஷம். அருகிலிருந்த பெண்ணின் தலை வெட்கத்தில் மேலும் குனிந்தது! அடுத்த பாடல், ‘ஓவ்..ஓவ்..ஓவ் மாம்பழத்து வண்டு…’ எனத் தொடங்கியவரின் குரலுக்கு எழுந்த கரகோஷம் விண்ணைத் தொட்டது. எஸ்.ஜானகி அவர்களின் மெஸ்மெரிசக் குரலில் வரிசையாகப் பாடல்கள்… மறக்க முடியாத முதல் நேரடி மெல்லிசை விருந்து.
அன்று கேட்ட ஜானகியின் குரல், கால மாற்றத்தில் மெருகேறியது – ஆயிரக் கணக்கான பாடல்கள் – அத்தனை ரஸங்களிலும் குரலின் குழைவுகள் என அறுபது ஆண்டுகளுக்கும் மேல் பாடிய குரல் இன்று ஓய்ந்து விட்டது. ஆரம்ப காலப் பாடல்களில், குரலில் ஒரு சன்னமான குழைவுடன், ஓரிழையை இசைத்தாற் போன்ற மென்மையும் இருக்கும். அதிக அளவில் கர்நாடக ராகங்களை அடிப்படையாகக் கொண்ட பாடல்களைப் பாடியவர். அன்னக்கிளி படத்தில் இளையராஜா மீண்டும் ஜானகியை முன்னிறுத்தினார் என்றால் மிகையில்லை. அவர் பாடாத இசையமைப்பாளர் இல்லை, பல மொழிகளிலும் பாடல்கள், விருதுகள் என முழுமையான ஓர் இசை வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார். மனிதர்கள் இருக்கும் வரை அவர் பாடல்களும் உயிர்ப்புடனிருந்து கொண்டுதானிருக்கும்!
1962 ல் வெளி வந்த ‘தெய்வத்தின் தெய்வம்’ படத்தில் ஜி.ராமநாதன் இசையில் மகாகவி பாரதியின் பாடலுக்கு ஜானகி ஓர் இசை வேள்வியே நடத்தியிருப்பார். ‘கண்ணன் மன நிலையைத் தங்கமே தங்கம்..’ – கண்ணன் என்று தொடங்கி ஒரு இடைவெளி…தொடர்ந்து ஒரு புல்லங்குழல் ஆபேரியில் இழைய, மீண்டும் ஜானகி கண்ணன் மன நிலையில் எனத் தொடங்குவார். வித்தியாசமாக ஆபேரி, பாகேஸ்ரி (இந்துஸ்தானி வகையில்), பெஹாக் எனப் புல்லங்குழல், வீணை, மிருதங்கம், ஷெனாயென ராமநாதன் அமர்க்களப்படுத்தியிருப்பார். ஃப்ளூட்டுடன், வீணை தொடர்ந்து வர, ‘ஆற்றங்கரையதனில்..’ என்று ஜானகி குழைய, ஷெனயில் பெஹாக் பிட் மயக்க, பாட்டு முடியும்போது வீணையும் மிருதங்கமும் தனியாக ஆவர்தனங்கள் முழங்க – அதகளம்தான்! எல்லாவற்றையும் மீறி நம்மைக் கட்டிப் போடும் குரல் ஜானகியினுடையது! அவர் குரலுடன் போட்டி போட முயலும் இசைக் கருவிகள்!
அதே போல ‘கொஞ்சும் சலங்கை’ பாடல், ‘சிங்கார வேலனே தேவா’ (இசை எஸ் எம்சுப்பையா நாய்டு)- ஜானகியின் குரலுடன் போட்டி போடும் காருக்குறிச்சியின் நாதஸ்வரம் – இன்று வரை அதுபோல ஒரு பாடல் இன்னும் வரவில்லை!
விஸ்வநாதன் இராமமூர்த்தி இசையில் மிகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்களைப் பாடியவர் ஜானகி. ஶ்ரீதர் படங்களில் PBS – ஜானகி இணைந்து பாடிய பாடல்கள் மறக்க முடியாதவை. சுமைதாங்கி (கதை ரா.கி.ரங்கராஜன்) படத்தின் அத்தனை பாடல்களும் சூப்பர் ஹிட். எந்தன் பருவத்தின் கேள்விக்கு (சென்சாரில் எந்தன் பார்வையின் என்று மாற்றிப் படுத்தினார்கள்!), ஓ..ஓ..ஓ.. மாம்பழத்து வண்டு, ராதைக்கு ஏற்றக் கண்ணனோ, சீதைக்கு ஏற்ற ராமனோ போன்ற பாடல்கள் ஜானகியின் குரலில் சாகா வரம் பெற்றவை. எனக்குப் பிடித்த பாடல் தேஷில் சோகம் இழைந்தோடப் பாடிய பாடல் “என் அன்னை செய்த பாவம், நான் மண்ணில் வந்தது…” அந்தக் குரலில் அந்தப் பாடல் மனதை மட்டுமல்ல, ஊனையும் உருக்குவது!
மற்றொரு படம் “போலீஸ்காரன் மகள்” ‘இந்த மன்றத்தில் ஓடிவரும்’, ‘பொன்னென்பேன்’(மூன்று ஆக்டேவிலும் அனாயசமாகச் சஞ்சாரம் செய்யும் தேன் குரல்), சீர்காழியின் வெண்கலக் குரலுக்கு எதிரில் எழும்பி நிற்கும் ‘கண்ணிலே நீரெதற்கு’ – மறக்க முடியாதவை!
ஆலயமணியில் ‘தூக்கமும் கண்களை, தழுவட்டுமே’ பாடலின் தாலாட்டு, பாசம் படத்தில் ‘ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி’ பாடலின் துள்ளல், குங்குமம் படத்தில் தர்பாரி கானடாவில் ‘சின்னஞ் சிறிய வண்ணப் பறவை என்னத்தைச் சொல்லுதம்மா’ (டி எம் எஸ் – ஜானகி போட்டி போட்டுக்கொண்டு பாடிய அற்புதமான பாடல்) பாடலின் வீச்சு, அவர்கள் படத்தில் ‘காற்றுக்கென்ன வேலி’ (விஸ்வநாதன் ஜானகியின் மாஸ்டர் பீஸ்) பாடலின் மகிழ்ச்சியின் தெறிப்பு ..சொல்லிக்கொண்டே போகலாம்!
ஜெயகாந்தன் எழுதி, எம்பி ஶ்ரீனிவாசன் இசையமைத்த, காலத்தால் அழியாத பாடல் – பாதை தெரியது பார் படத்தில் ஜானகியின் குரலின் காதல் குழைவும், PB ஶ்ரீனிவாஸின் பிருதுவான குரலும் இணைந்து ஒரு வேள்வியே நடத்தியிருப்பார்கள். ஜெயகாந்தனுக்குப் பிடித்த தென்னை மரப் பாடல் – “தென்னங்கீற்று, சோலையிலே..”
இளையராஜா இசையமைப்பில் எத்தனை இனிமையான பாடல்கள் – அன்னக்கிளியின் அத்தனைப் பாடல்களும், ‘ஒரு நாள், உன்னோடு ஒரு நாள்’ (உறவாடும் நெஞ்சம்), காற்றில் எந்தன் கீதம் (ஜானி), செந்தூரப் பூவே (16 வயதினிலே), அந்தி மழை பொழிகிறது (ராஜ பார்வை), கண் மணியே காதல் என்பது (ஆறிலிருந்து அறுபது வரை), அந்தப்புரத்தில் ஒரு மகராணி (தீபம்), பூ மாலையே தோள் தேடவா (செந்தூரப்பூவே), இஞ்சி இடுப்பழகி (தேவர் மகன்), சின்னக் கண்ணன் அழைக்கிறான் (கவிக்குயில்), ஒரு வானவில் போலே (காற்றினிலே வரும் கீதம்) …. சொல்லிக்கொண்டே போகலாம்.
சினிமா இசையின் ஒரு சகாப்தம் முடிந்தது எனலாம்.. யாருடனும் ஒப்பிட முடியாத, ஒப்பிடக் கூடாத ஒரு இனிமையான குரல் எஸ் ஜானகி அவர்களுடைய குரல் – அது இறைவன் கொடுத்த வரம்.
.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன