
அமெரிக்க நண்பர்கள்
நான், முருகேசன், சிவசங்கரன் ஆகிய மூன்று பேரும் அவரவர் குடும்பத்துடன் சுமார் பத்து நாட்கள் சுவாமியுடன் சந்நிதித் தெரு வீட்டீல் தங்கியிருந்த சமயம் அது.
சுவாமியின் உத்தரவுப்படி எங்கள் குடும்பத்தினர் சந்நிதித் தெரு வீட்டிலேயே சமையல் செய்து, சுவாமியுடன் நாங்கள் அனைவரும் பகிர்ந்து உண்ட சமயம் அது.
சுவாமி வியாசர் முதல் தற்கால ஞானிகளின் உபதேசங்கள் வரை விரிவாக எங்களிடம் பேசிக்கொண்டிருந்த சமயம் அது.
பாட்டும் கும்மாளமுமாக நாங்கள் சுவாமியுடன் குதூகலித்திருந்த சமயம் அது.
காலை மணி எட்டு இருக்கும். வெளிநாட்டுத் தந்தி ஒன்றைத் தந்தி சேவகர் சுவாமிக்குக் கொடுத்து விட்டுச் சென்றார்.
சுவாமி தந்தியை என்னிடம் கொடுத்துப் படிக்கச் சொன்னார். அமெரிக்காவிலிருந்து ஒரு பக்தை சுவாமியைப் பார்ப்பதற்கு புறப்பட்டு வருவதாகத் தந்தி சொன்னது.
தந்தி வந்த மூன்றாம் நாள் அந்த அமெரிக்க பக்தை, தன் இரண்டு குழந்தைகளுடன், ஒரு நண்பரையும் அழைத்துக் கொண்டு விமான நிலையத்திலிருந்து நேராக ஒரு வாடகைக் கார் எடுத்துக் கொண்டு சுவாமியிடம் வந்தார்.

சுவாமி அவர்களை உள்ளே வரவழைத்து, பக்தையையும் குழந்தைகளையும் பெண்கள் அமரும் பக்கம் அமரச் செய்து நண்பரைத் தனக்கு எதிரில் அமரவைத்தார்.
அந்த நண்பர் ஒரு விஞ்ஞானி. நாசாவில் வேலை பார்ப்பதாகச் சொன்னார். அவருக்கு இந்தியாவைப் பற்றியோ, இந்தியாவில் வாழும் ஞானிகள் பற்றியோ ஒன்றும் தெரியாது எனப் பக்தை சுவாமியிடம் சொன்னார்.
விஞ்ஞானியோ சுவாமியை ஒருவித அருவருப்புடன் பார்ப்பதுபோல் தெரிந்தது.
சுவாமியின் உடைகள் ஒரே அழுக்குமயம். அந்த அழுக்கு உடைகளையும் சுவாமி வினோதமாக அணிந்திருந்தார். சுவாமி அமர்ந்திருந்த சுற்றுப்புறம் குப்பையாகவும், தூசி நிறைந்ததாகவும் இருந்தது.
அந்தச் சூழ்நிலையே அந்த விஞ்ஞானிக்குப் பிடிக்கவில்லையென அவரது முகபாவம் தெளிவாகக் காட்டியது.
சுவாமி பக்தையுடன் பேசிக்கொண்டிருந்தார். அவர் ரமண மகரிஷி பக்தை என்பதை அவர்களது பேச்சின் மூலம் தெரிந்துகொள்ள முடிந்தது.
ஒவ்வொரு வருடமும் அவர் தன் குழந்தைகளை அழைத்துக்கொண்டு திருவண்ணாமலை மற்றும் இந்தியாவில் உள்ள முக்கிய க்ஷேத்திரங்களையும், ஞானிகளையும் தரிசித்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
விஞ்ஞானி நண்பர் அந்தப் பக்தையிடம் ‘அப்படி என்ன இந்தியாவில் உள்ளது?’ எனக் கேட்டதற்கு, ‘வந்து பார்த்தால்தான் உணர முடியும்’ என்று சொல்ல, விஞ்ஞானியும் உடன் வந்ததாக அந்தப் பக்தை கூறினார்.
சுவாமி பக்தையுடன் பேசிக் கொண்டிருந்தாலும், அவர் கவனம் முழுவதும் விஞ்ஞானி மீதே இருந்தது.
சுவாமி அடுத்தடுத்துப் புகை பிடித்துக்கொண்டே இருந்தார். எனினும், புகையின் வாடை அங்கு அறவே இல்லை.
பக்தையுடன் பேசிக்கொண்டிருந்த சுவாமி, திடீரெனப் பேச்சை நிறுத்திவிட்டு, தன் இருக்கையிலிருந்து எழுந்தார். கூடத்தின் உள்ளேயே குறுக்கும் நெடுக்குமாக நடந்தார். பின் அங்கிருந்த தூணின் மீது சாய்ந்து விஞ்ஞானியையே பார்த்துக்கொண்டு இருந்தார்.
வெறுப்புடன் அங்கு அமர்ந்திருந்த விஞ்ஞானியின் முகத்தில், சற்று நேரத்தில் ஒருவித மாறுதல் தெரிந்தது. அவர் முகத்தில் இருந்த வெறுப்புணர்வு மறைந்தது.
சுவாமி தன் பனை ஓலை விசிறியைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு, விஞ்ஞானியையே உற்று நோக்கினார்.
வெறுப்பினால் சிறுத்திருந்த விஞ்ஞானியின் முகம் பிரமிப்பை வெளிப்படுத்தியது. அவர் கண்களில் பக்தி பற்றிக்கொண்டது. சுவாமியை ஆவலுடன் பார்க்க ஆரம்பித்தார்.
சுவாமி அவருடைய விஞ்ஞான ஆராய்ச்சிகளைப் பற்றிக் கேட்க, விஞ்ஞானி பதிலுரைத்தார்.
பேசிக்கொண்டிருக்கும் போதே அங்கே விந்தையான மாறுதல்கள் ஏற்பட ஆரம்பித்தன. அந்த இடமே பவித்திரமாக சுடர் விட்டுப் பிரகாசிப்பதை அனைவரும் உணர்ந்தோம்.
இனம் காணமுடியாத ஒன்று, அனைவரையும் ஆகர்ஷிப்பதை அறிய முடிந்தது.
அங்கே இன்பம், துன்பம், எதிர்பார்ப்பு, இடம், பொருள், காலம், காரணம் என அனைத்தையும் கடந்த ஒரு பேரனுபவம் நடந்தது.
அந்த விஞ்ஞானியின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது, அவர் மெதுவாக எழுந்து சுவாமியின் எதிரே மண்டியிட்டு அமர்ந்தார்.
“சுவாமி, நான் உங்கள் கரங்களை முத்தமிடலாமா?” அமெரிக்க நண்பர் வினவினார்.
சுவாமி வெட்கத்துடன் புன்னகைத்தார்.
“இந்த அழுக்கடைந்த பிச்சைக்காரனின், உடல் நாற்றத்தை உன்னால் தாங்க முடியாது.”
“இதுவா அழுக்கடைந்த கரம், இது புனிதமான கரம். இது என் ஏசுவின் திருக்கரம். இதை முத்தமிட நான் பாக்கியம் செய்திருக்க வேண்டும்.”
சுவாமியின் கரத்தைப் பற்றி அந்த அமெரிக்க விஞ்ஞானி பக்தியோடு முத்தமிட, அனைவரும் வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தோம்.
அந்த பக்தைக்கு மிகவும் சந்தோஷம். சுமார் ஒரு மணி நேர சம்பாஷணைக்குப் பிறகு, சுவாமி அவர்களைப் புறப்படச் சொன்னார்.
அமெரிக்கப் பெண்மணி மறுபடியும் எப்பொழுது சுவாமியைக் காண வரலாம் எனக் கேட்டார்.
“இந்த பிச்சைக்காரன் உங்களை நன்கு பார்த்துவிட்டான். நீங்கள் மறுபடியும் இந்தப் பிச்சைக்காரனைப் பார்க்க வரத் தேவையில்லை. உங்கள் திட்டப்படி பயணத்தைத் தொடரலாம்.”
சுவாமியின் பதிலால் பக்தை அதிர்ச்சியானார்.
“சாமி, நாங்கள் இன்னும் ஒரு வாரம் திருவண்ணாமலையில் தான் இருப்போம். நீங்கள் சொல்லும் நேரத்துக்கு வந்து உங்களைப் பார்த்துச் செல்கிறோம்” பக்தை கெஞ்சினார்.
“இந்த நண்பர்கள் இந்த பிச்சைக்காரனைப் பார்ப்பதற்காக வெகுதூரத்திலிருந்து வந்திருக்கிறார்கள். எனது தந்தை இந்த பிச்சைக்காரனை இந்த நண்பர்களுடன்தான் வரும் சில நாட்களைக் கழிக்க வேண்டும் எனச் சொல்லிவிட்டார். எனவே, நீங்கள் உங்கள் பயணத் திட்டப்படி தொடருங்கள்.”
அமெரிக்கப் பெண்மணிக்கு ஏமாற்றமாகிவிட்டது. விஞ்ஞானியும் வேண்டுகோள் விடுத்தார். சுவாமி மறுத்துவிட்டார்.
ஏமாற்றத்துடன் அவர்கள் புறப்பட்டார்கள். சுவாமி அவர்களை வாசல் வரை சென்று வழியனுப்பிவிட்டு வந்தார்.
“சுவாமி, நாங்கள் இங்கே அருகில் இருக்கின்ற ஊர்களிலிருந்து வந்துள்ளோம். ஆனால், அந்த நண்பர்கள் தங்களைக் காண்பதற்காக அமெரிக்காவிலிருந்து வந்துள்ளார்கள். அவர்களை மீண்டும் தங்களைத் தரிசிக்க அனுமதிக்க வில்லையே சுவாமி.” முருகேசன் வருத்தத்துடன் சுவாமியிடம் கூறினார்.
“முருகேஷ்ஜி, அந்த அமெரிக்க நண்பர்கள் இந்த பிச்சைக்காரனைப் போல உள்ள பல நபர்களைப் பார்க்க வந்துள்ளார்கள்.
ஆனால், நீங்கள் யாவரும் அப்படியல்ல. ஊரிலிருந்து நேராக இந்த பிச்சைக்காரனைப் பார்க்க வருகிறீர்கள். இந்த பிச்சைக்காரன் விடைகொடுத்ததும் நேராக உங்கள் ஊர்களுக்குத் திரும்பி விடுகிறீர்கள். இங்கும் அங்கும் நீங்கள் அலைவதில்லை.
எனவே, எனது தந்தை உங்களுடனேயே இந்த பிச்சைக்காரன் நேரத்தைச் செலவழிக்க வேண்டும் எனச் சொல்லிவிட்டார்.”
சுவாமியின் சொற்களைக் கேட்டு விக்கித்து நின்றோம். See less
