
நூலகத்துக்குப் போகும் மாலைகளில் அந்தப் பள்ளிக்கூட விளையாட்டு மைதானத்தின் மதில் சுவரை சைக்கிளை ஓட்டியபடியே எட்டிப் பார்ப்பது பழக்கமாகி விட்டது. அந்தப் பள்ளிக்கும் அந்த மைதானத்துக்கும் இடையில் நூறு வீடுகளும் பத்துத் தெருக்களும் இருந்தன. மாணவர்கள் விளையாட வேண்டும் அல்லது திறந்த வெளியில் ஏதாவது செய்தாக வேண்டும் என்பதான நேரங்களில் அவர்களை ஆசிரியர்கள் ஊர்வலமாக அழைத்துப் போவார்கள். நான் அந்தப் பள்ளியில் படிக்கவில்லை. ஆனால் பல வருடங்கள் அந்தப் பள்ளியையும் மைதானத்தையும் சைக்கிளில் கடந்து சென்றுகொண்டிருப்பதில் அது நான் படித்து விளையாடிய பள்ளி போலாகிவிட்டது. என்னுடைய பள்ளி இருபத்தைந்து வருடம் முந்தையதும், ஐநூறு மைல் தொலைவும் கொண்டது. அங்கும் பரந்த மைதானம் இருந்தது. எளிய ஓடிப் பிடிப்பது தவிர வேறு விளையாட்டு நான் ஆடினதாக ஞாபகம் இல்லை. அந்த நாட்களில் விளையாட்டுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கிடையாது. இங்கு இந்த நகரில் நூலகத்துக்கு அல்லது வெறெந்த இடத்துக்குப் போகும் போதும் இந்த விளையாட்டு மைதானத்தைக் கடந்துதான் போக வேண்டியிருக்கிறது. மைதானத்துக்கு உயரமான மதில் சுவர். யாராவது விளையாடிக் கொண்டிருந்தால் அவர்கள் தலைகளை மட்டும் தெருவிலிருந்து பார்க்க முடியும். இன்று மாலை மைதானத்தில் ஒரு கிரிக்கெட் மாட்ச் நடந்துகொண்டிருக்கிறது.
சாலையைக் குறுக்கே கடந்து மைதானத்தை ஒட்டிச் சென்ற குறுகிய தெருவில் சைக்கிளைத் திருப்பினேன். நான் உத்தியோகமின்றி இருந்த பல தருணங்களில் அதுவும் ஒன்று. மணி தெரியவில்லை. என் கைக்கடியாரத்தின் உடைந்த கண்ணாடியை நான் மாற்றியிருக்கவில்லை. மணி நான்கு
இருக்கலாம். இன்னும் இரண்டு மணி நேரத்தில் நூலகத்தை மூடிவிடுவார்கள். அலமாரிகள் நடுவில் புகுந்து திரிந்து நான் கேள்விப்பட்டிருக்காத, இருக்குமென்றே நினைத்திராத ஒரு புத்தகத்துடன் வீடு திரும்ப இரண்டு மணி நேரம் தேவை. நாம் முன்னமறியாத ஆசிரியரின் நூலைப் படிப்பதில் ஒரு தனி இன்பம் இருக்கிறது. அது சிறு நூலகம்தான். நானும் அடிக்கடி அங்கு போய் வந்துகொண்டிருக்கிறேன். ஆனாலும் நான் அறிந்திராத ஆசிரியர்கள் பலர் இருக்கத்தான் செய்தார்கள். இப்போது இந்த கிரிக்கெட் ஆட்டத்தைப் பார்க்க நான் நின்றுவிட்டால் நானறியாத அந்த நூற்றுக்கணக்கான எழுத்தாளர்கள் பல மாதங்கள் உழைத்துக் கண்விழித்து எழுதியிருக்கும் நூல்களுக்கு நான் ஒதுக்கும் நேரம் குறைந்துவிடும். ஆனால் இங்கே இந்த மைதானத்தில் விளையாடிக் கொண்டிருப்பவர்களும் நானறியாதவர்களே,
ஆடியவர்கள் வாலிபர்கள் -சிறுவர்களல்ல. மைதானம் ஒரு பள்ளியின் பகுதி என்பதால் பல நேரங்களில் சிறுவர்கள் விளையாடுவார்கள். மைதானம் பெரிதாக கிரிக்கெட் ஆடும் அளவு இருந்தபடியால் ஞாயிற்றுக்கிழமைகளில் பெரியவர்கள் ஆடுவார்கள். இன்று மைதான நடுவில் ‘பிச்’சுக்கு முழுப்பாய் விரித்திருந்தார்கள். சிறுவர்கள் ஆட்டத்துக்கு ஏற்பாடுகள் அவ்வளவு
தடபுடலாக இருக்காது.
மைதானத்துக்குச் சாலையோரந்தான் சுவர். பிற பக்கங்களில் முள் கம்பி வேலி. செடிகளும் நட்டிருந்தார்கள். ஆனால் மாணவர்கள் சில இடங்களில் வேலியை அகலப்படுத்தியிருந்தார்கள். அவ்விடங்களில் சிறுவர்கள் மட்டுமின்றி ஆடு மாடுகள் கூடப் புக முடியும். குறுக்கு வழியில் போவது மாணவர்களுக்குக் கைவந்தது. நான்கூட என் பள்ளி நாட்களில் பிரதான வாயில் வழியாகச் சென்றதைக் காட்டிலும் சுவர் ஏறிக் குதித்துச் சென்றதுதான் அதிகம். ஏறிக் குதிக்கும் இடங்களில் சுவரில் முதலில் நிறம் மாறும். பிறகு மங்கும். அப்புறம் காரை உதிரும். அதற்குப் பிறகு ஒவ்வொரு செங்கல்லாக மறையத் தொடங்கும். ஏறிக் குதிப்பது தாண்டுவதாகி இறுதியில் வெறுமனே நடப்பதாகிவிடும். வருடத்திற்கு ஒருமுறை சுவர் பழுது பார்க்கப்படும். சில நாட்களில் காவலும் வைப்பார்கள். ஆனால் சீக்கிரமே காவல்காரன் வேறு அலுவலுக்கு அழைக்கப்படுவான். விரைவில் சுவரில் விரிசல் காணும்.
வேலிச் செடிகள் அதிகம் மறைக்காத இடமாகப் பார்த்து சைக்கிளை நிறுத்தினேன். அந்த இடத்திலிருந்து ஆடுபவர் அனைவரையும் ஒரே பார்வையில் பார்த்துவிட முடியும். முகம் தெரியாது. ஆனால் கிரிக்கெட் ஆட்டம் பார்க்க முகம் தெரியவேண்டிய அவசியம் இல்லை. ஒரு நூலிலும் ஆசிரியர் முகம் தெளிவாகத் தெரிவதில்லை. அதுவும் அவரை முதன் முறையாகப் படிக்கும்போது.
நூலகத்துக்குப் போகும் வழியில் ஒரு கிரிக்கெட் மாட்சை வேடிக்கை பார்க்க நிற்கும்போது ஆடும் அணிகள் பற்றியோ ஆட்டம் எந்த கட்டத்தை எட்டியிருக்கிறதென்றோ தெரியாது. ஆனால் ஆடுபவர்கள் பற்றி நிறையவே அறியமுடியும். ஒல்லியானவன், பருமனானவன், மிதமாக உண்பவன், கண்ட வேளையில் வயிற்றை நிரப்பிக்கொள்பவன், ஒருவேளைச் சாப்பாட்டிற்கே வழியில்லாதவன், வீட்டில் குளிர்சாதனப் பெட்டி உடையவன், உணவு விடுதிகளிலேயே சாப்பிட வேண்டிய நிர்ப்பந்தம் கொண்டவன் … இன்னும் பல விவரங்கள் அவர்கள் நிற்கும் விதத்திலும், நடை, ஓட்டம், தாவுதல், பந்து வீசுதல், விக்கெட் முன்பு மட்டையைப் பிடித்து நிற்பதிலெல்லாம் தெரியவரும். இவர்கள் தலைமுடியை நீளமாக வளர்த்துக் கொண்டிருந்தார்கள். குமாஸ்தா உத்தியோகத்துக்குப் போனால் முடியை வெட்டிவிடச் சொல்வார்கள். இவர்களில் சிலர் சிறிது உயர்ந்த இடங்களிலும் வேலைக்கு அமரக்கூடும். அன்று அவர்கள் அணியப்போகும் உடை, டை, எடுத்துச் செல்லப் போகும் கைப்பெட்டி, கர்சீப், சினிமாவுக்கு எந்த வகுப்பு டிக்கெட் வாங்குவார்கள். என்றெல்லாம் கற்பனை செய்து பார்ப்பது ரசமாயிருக்கும்.
மைதானத்தின் மறுபுறத்தில் தெருவும் அதை ஒட்டிய வீடுகளும் தெரிந்தன. மைதானமே ஒரு டஜன் வீடுகளுக்கு நடுவில் இருந்தது. சில புதியவை, சில அழுது வடிபவை. ஆனால் எல்லாமே பெரிய வீடுகள். பளிச்சென்ற வீடுகளில் தவிர இதர வீடுகளில் தென்னை மரங்கள்கூட சோர்ந்து காணப்பட்டன. நகரங்களின் இயற்கை அதுதான். ஆனால் நேஷனல் ஜியா கராஃபிகல் மாகஸீனில் பளபளப்பான தாள்களில் கரடிகளும் காட்டெருமைகளும் முறைத்துப் பார்க்கும். விளையாடுபவர்களில் பலர் அப்பக்கங்களில் இடம்பெற முடியாது. அவர்கள் காலையிலிருந்து ஆடிக்கொண்டிருக்க வேண்டும். தலைமயிர் கலைந்திருந்தது. ஏராளமாகக் கசிந்த வியர்வை உடையை உடலோடு ஒட்டியிருக்கும்படி செய்திருந்தது. கிரிக்கெட் ஆடுபவர்களின் பின்புறத்தைக் காணத் தவிர்க்க முடியாது. என்னதான் உயர்ந்தரக ஃபிளானல் டிரவுசர் அணிந்திருந்தாலும் கிரிக்கெட் ஆடும்போது பின்புறம் ஒரேயடியாக அழுக்கடைந்துவிடுகிறது.
என்ன ஸ்கோர், முதலில் ஆடியவர்கள் எவ்வளவு அடித்தார்கள் ஒன்றும் தெரியவில்லை. ஒரு கணம் காலையில் ஆடிய கோஷ்டியின் ஓட்டங்கள் எவ்வளவு என்று தெரிந்துகொள்ள ஆத்திரம் ஏற்பட்டது. ஆனால் கடைசிவரை நானிருந்து ஆட்டத்தைப் பார்க்கப்போவதில்லை, ஸ்கோர் தெரியவேண்டிய அவசியம் என்ன? ஸ்கோர் விவரம் தெரியாமல் வேடிக்கை பார்ப்பதிலும் இன்பம் உண்டு. ஸ்கோர் போன்றவற்றை நாமே கற்பனை செய்துகொண்டு சிறிது நேரம் வேடிக்கை பார்த்துவிட்டுப் பிறகு யாதொரு பந்தமும் நினைவுச் சுமையும் இல்லாமல் எழுந்து போவதில் ஓர் அசாதாரண சுதந்திர உணர்வு கிடைக்கிறது. நினைவுகளைக் காட்டிலும் நினைவுகளை அழித்தல் குதூகலம் தரக்கூடியது. விளையாடியவர்கள் இளைஞர்கள். அவர்களை நினைவுகள் விடாது நச்சரித்துக் கொண்டிருக்கும். அதுவும் ஆட்டத்தில் சிறிது தேர்ச்சி ஏற்பட்டவுடன் வேறு தலைசிறந்த ஆட்டக்காரர்கள் பற்றிய நினைவுகள் அவர்களை அழுத்தும். அவர்கள் நிற்பது சாய்வது ஓடுவதிலிருந்து பந்து வீச எவ்வளவு தப்படிகள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதுவரை தலைசிறந்த ஆட்டக்காரர்களின் நகல்களாகிவிடுவார்கள். என் காலத்திலும் கிரிக்கெட் வீரர்கள் இருந்தார்கள். அமர்நாத், ஹஸாரே, மன்கட், சற்றுக் கற்பனை மிகுந்தவர்களுக்கு பிராட்மன், மில்லர், பெட்ஸர் … எல்லா வீரர்களுமே செய்திப் பத்திரிகை போட்டோக்கள் மூலந்தான் எங்களுக்கு அறிமுகம் ஆனவர்கள். நேரில் பார்த்தவர்கள் மிக மிகக் குறைவு.
ஆனால் இந்தப் பையன்கள்தான் – தங்கள் நாயகர்கள் ஆடுவதை நேரிலேயே பார்த்திருக்கக்கூடும். உண்மையில் இவர்கள் பையன்கள்
ஆட்ட மைதானத்தில் அவர்கள் புழங்கிய விதத்திலிருந்து அப்படித்தான் தோன்றியது. பந்து வீசுபவன் இரண்டடி ஓடி ஒருமுறை குதித்து மீண்டும் வேகமாக ஓடிப் பந்தை வீசினான். அவன் மனதில் பூசித்துக் கொண்டிருக்கும் நாயகனை ஊகிக்க முடிந்தது. பந்தை அடிப்பவன் நிமிர்ந்து, உடனே உடலை வளைத்து, மட்டையைத் திருப்பி வீசினான். ஒன்றும் ஆகவில்லை
விக்கெட் கீப்பர் பந்தைத் தடுக்க அது மீண்டும் பந்து வீசுபவனிடம் சென்றது. ஒன்றும் நிகழாததில் நிம்மதி. நான் வேலியருகே கிடந்த செங்கல் குவியல்மீது வலது காலை ஊன்றிக்கொண்டு சைக்கிள்மீது சௌகர்யமாக உட்கார்ந்துகொண்டேன்.
ஆனால் ஏதாவது நிகழ்ந்தாக வேண்டியிருத்து. ‘போலர்’ இம்முறையும் துள்ளியும் ஓடியும் வந்து பந்தை வீச அதை ‘பாட்ஸ்மான்’ அவசரமாக அடிக்கச் சென்றதில் தவறவிட்டு ‘போல்ட்’ ஆனான். அவன் மைதானத்தைக் கடந்து தன் இதர சகாக்களை அடைவதற்குள் இன்னொரு ஆட்டக்காரன் விக்கெட் முன்வந்து நின்று, அவன் போலரிடமிருந்து பெற்ற முதல் பந்திலேயே ‘போல்ட்’ ஆனான். அத்துடன் அந்த ‘ஓவர்’ முடிந்தது.
இப்போது எங்கும் பரபரப்பு. அந்த ‘போல’ரை அவன் சகாக்கள் சூழ்ந்துகொண்டு ஆரவாரம் செய்தார்கள். ஆட்டம் சர்வதேச விளையாட்டுப் போலத் தீவிரமடைந்தது. நான் உணர்ச்சிவசப்படுவதை அறிந்தேன். ஒரு எதிர்பார்ப்புடன் அதே நேரத்தில் அசிரத்தையுடன் அடுத்த போலர் பந்து வீசுவதைப் பார்த்து நின்றேன். இவன் துள்ளல் குதித்தல் இல்லாமல் பந்து வீசினான். ஆட்டக்காரன் ஒழுங்காக ஆடிச் சில ஓட்டங்கள்கூட எடுக்க முடிந்தது. அந்த ‘ஓவர்’ முடிந்தவுடன் முதல் போலரும் தலைவனுமாக அலுப்பு தோன்றுமளவுக்குப் பிற ஆட்டக்காரர்களை மைதானத்தில் நிறுத்தி வைப்பதில் அலட்டிக் கொண்டார்கள். ஒருவனையும் முன்பு நின்ற இடத்தில் இருக்கவிடவில்லை. இறுதியாக ‘போலர்’ பந்து வீசத் தயாரானவுடன் அனைவரும் ஒரு முனைப்பானார்கள். முதல் பந்து வீச்சில் ஒருவன் ஆட்டமிழந்தால் அந்த ‘போல’ருக்கு ‘ஹாட்ரிக்’ கிடைக்கும். அதாவது மூன்று அடுத்தடுத்த பந்துகளில் மூன்று பேரை ஆட்டமிழக்கச் செய்த சாதனை.
திடீரென்று என் உடல் நடுங்க ஆரம்பித்தது. அந்த போலருக்கு ‘ஹாட்ரிக்’ கிடைக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேனா? பரபரப்பும் உற்சாகமும் விருப்பம் உள்ள திசையில் செல்லும். அவனுக்கு ‘ஹாட்ரிக்’ கிடைத்துவிட்டால்? அச்சாதனையின் குதூகலிப்பில் அவனுக்கு இரவெல் லாம் தூக்கம் வராது. சரியாக உண்ண முடியாது. திடீரென்று பசி எடுப்பது போலத் தோன்றி நட்ட நடு நிசியில் ஊறுகாயை விழுங்குவான். நான்கைந்து நாட்களுக்கு யாரைச் சந்தித்தாலும் அதீத சுய நினைப்போடு நடந்துகொள்வான். அந்தக் கிளர்ச்சி நெடுநாளுக்கு அவனுக்கு மகிழ்வளிக்கும் தொந்தரவாக இருக்கும். அவன் மட்டும் பந்து வீசும்போது துள்ளாமல் இருக்கக்கூடாதா?
எனக்கு வியப்பாக இருந்தது. அவனுடைய துள்ளலால் நான் அவன் தோல்வியை விரும்பினேன்! முகங்கூடத் தெரியாத அச்சிறுவன் ஏனோ என்னிடம் ஒரு இலேசான துவேஷத்தை உண்டு பண்ணிவிட்டான்!
ஆனால் எதிர்காலத்தில் அவன் மகத்தான ஆட் க்காரனாக மாறக் கூடும். என் துவேஷ நினைப்புக்காக எனக்கு வருத்தம் ஏற்பட்டது. அவன் பந்து வீசும்போது குதிப்பதாலும் அவனுடைய உடை பின்புறம் அழுக்கடைந்து இருப்பதாலும் அவனும் அவன் சகாக்களும் விறைப்பாக அருவருப்புத் தோன்ற குனிந்து நிமிர்வதாலும் அவனுடைய வெற்றியை நான் மறுதலிப்பது என்ன நியாயம்? இப்போது அவன் எப்படியாவது ஹாட்ரிக் எடுக்கவேண்டும் என்று பிரார்த்தித்துக் கொண்டேன். அவன் வழக்கம் போலத் துள்ளியோடிப் பந்தை வீசினான். அது வலுவற்றதாக இருந்திருக்க வேண்டும் ஆட்டக்காரன் மிக எளிதாக அதைத் தடுத்துவிட்டான். பந்து மட்டையில் சிறு ஒலி எழுப்பியது. அதே நேரத்தில் மைதானத்தில் ஆடுபவர்கள் அனைவரும் இறுக்கம் தளர்ந்து இயல்பாக நின்றார்கள். போலரும் தளர்ச்சியுடன் நின்றான். எனக்கு அவன் முகத்தைப் பார்க்க வேண்டும். ஆறுதலாகப் புன்னகை புரியவேண்டும் என்றெல்லாம் தோன்றியது. ஆனால் நாங்கள் இருவரும் வெகு தொலைவில் இருந்தோம். இடையில் வேலியும் முட்புதரும் இருந்தன. நான் அவன் தொடர்ந்து விளையாடுவதைப் பார்க்கவில்லை. செங்கல் குவியலிலிருந்து காலை விடுவித்துக்கொண்டு நூலகத்தின் திசையில் சைக்கிளை மெதுவாகச் செலுத்தினேன்.
1974
