
இரவு மணி பத்துக்கு மேல் ஆகிவிட்டபடியால் தெருவில் நடமாட்டம் அதிகம் இல்லை. நிலவு பால்போல் காய்ந்துகொண்டிருந்தது. உடற்பிணியும் மனப்பிணியும் உள்ளவர்களைத் தவிர மற்ற எல்லாரும் உறங்கியாகிவிட்டது. ஆனந்தகுமாரும் தமது சுருட்டைப் புகைத்து முடித்துப் படுக்கையில் படுத்தார். ஆனால் பெருந் துக்கத்தைப் போன்று ஆனந்தமும் தூக்கத்தைப் பறித்துவிடுகிறது. ஆனந்தருக்கு அன்று இரவு உறக்கம் வரவில்லை. காரணம், பல ஆண்டுகள் அவர் பெரும்பாடுபட்டு எழுதிய நாடகம் அன்று அமோகமாகவும் மிக வெற்றியுடனும் அரங்கேற்றப்பட்டிருந்ததுதான்.
டவுன் ஹால் கடிகாரம் பதினொன்று அடித்தது. படுக்கையிலிருந்து ஆனந்தர் எழுந்திருந்தார். விளக்கைப் போட்டுக்கொண்டு அவர் மேஜை முன் உட்கார்ந்துகொண்டார். அவரால் எழுதவும் முடியவில்லை. மனதில் எண்ணங்கள் கணக்கின்றிப் பறந்தன; ஆனால் எழுதுவதற்குப் பேனா முனையில் ஒன்றுகூடத் தங்கவில்லை.
திரும்பவும் நாடக நினைவு அவர் மனத்தைச் சூழ்ந்து கொண்டது. அதை அவர் குறுகிய காலத்தில் எழுதி முடிக்க வில்லை. அதனை அவருக்குப் பிடித்த முறையில் அமைக்க ஏழு ஆண்டுகள் எடுத்துக்கொண்டார். அவ்வளவு நீண்ட காலம் அதே நினைவில் இருந்தபடியால் நாடகத்தின் ஒவ்வொரு வரியையும் ஒவ்வொரு பாத்திரத்தையும் அவர் நன்கு அறிவார். அதனால்தானோ என்னவோ அன்று நாடகம் பார்க்கும்போதுகூட மேடைமீது அவரால் நடிகர்களைக் காண முடியவில்லை. அவரது கற்பனைச் சித்திரங்கள் உயிர் பெற்றிருப்பதைத்தான் காண முடிந்தது.
தலைமை வகித்த பேராசிரியர் சங்கரலிங்கம் கூறியது அவர் நினைவுக்கு வந்தது. ஸ்ரீ சங்கரலிங்கம் கூறினார்: “இதை ஓர் ஓவியமென்று கூறலாம். அப்படிச் சொல்வதற்கு ஒரு முக்கியக் காரணமும் இருக்கிறது, பிரதிமையின் அழகைக் காணும்போது ஓவியனின் திறமையைத்தான் அதில் காண்கிறோம். வியக்கிறோம், மெச்சுகிறோம். அதே போல இன்றைய நாடகத்தில் நடிகர்கள் எவ்வளவோ திறமையுடன் நடித்தபோதிலும் ஆசிரியன் கற்பனை வன்மைதான் நம் முன் நிற்கின்றது. கதாநாயகி சரோஜாவை எடுத்துக்கொள்ளுங்கள். எவ்வளவு அற்புதமான சிருஷ்டி!”
ஆனந்தகுமாருக்குத் திடீரென்று தம்முடன் வேறு யாரோ இருப்பது போன்ற உணர்ச்சி தோன்றிற்று. சிறிது படபடப்புடன் அறை முழுவதும் கண்ணோட்டினார். அவர் சந்தேகம் அர்த்தமற்றதாகப் போகவில்லை. வாசற்படியில் மென்மையான ஒரு வெண்மை வெளிச்சம் நின்றுகொண்டிருந்தது. ஒரு கணம் கழித்து அது மெதுவாக அவரை நெருங்கிற்று. கண்களைக் கசக்கிக்கொண்டு ஆனந்தர் அகல விழித்தார்.
அது வெளிச்சமல்ல; ஒரு பெண் உருவம்.
முகத்திலும் உடலிலும் அழகின் பூரணப் பொலிவு; இன்ன அளவென்று நிர்ணயிக்க முடியாத ஓர் இனிமை; ஆசை, அகங்காரம், சினம் ஆகிய எதனாலும் களங்கப்படாமல் நல்லொழுக்கத்தையே பிரதிபலிக்கும் வதனம். ஆனால் அந்த அழகுச்சிலையின் கண்களில் எல்லையற்ற சோகம் தேங்கியிருந்தது.
“யார் நீ?” கரகரத்த குரலில் ஆனந்தர் வினாவினார். அந்தப் பெண்ணை எப்போதோ சந்தித்திருக்கிறார்; அவளுடன் பழகியிருக்கிறார். ஆனால் அவள் யார் என்பது அவர் நினைவுக்குச் சட்டென்று வரவில்லை.
அந்த அழகிய உருவத்தின் கண்களில் கண்ணீர் மல்கி நிறைந்தது. இரு துளிகள் உருண்டு விழுந்தன,
“என்னை ஏன் இந்தச் சித்திரவதைக்கு உள்ளாக்கியிருக்கிறீர்கள்?” அந்தக் குரலில் சோகத்தின் கீதம் ஒலித்தது.
“யார் நீ” ஆனந்தர் மறுபடியும் வினாவினார். அந்தப் பெண் யாரென்று அறிய அவர் மூளை எங்கெங்கோ தாவியோடியது.
“உங்களாலேயே என்னைக் கண்டுகொள்ள முடியவில்லையா? நான் உங்கள் சரோஜா அல்லவா?”
ஆனந்தகுமார் நிமிர்ந்து உட்கார்ந்தார். சரோஜா – அதுவும் உங்கள் சரோஜா-அந்த பெயர் அவருக்கு மிகவும் பழக்கப்பட்ட பெயர்தான். ஆனால் இந்தப் பெண்? அவர் கூறினார்: “நீ ஏதோ இடம் மாறி வந்திருக்கிறாய் என்று நினைக்கிறேன். எனக்கு உன்னைத் தெரியாது.”
“தெரியாதா? ஏழு ஆண்டுகள் உங்களுடன் இருந்து வரும் என்னைத் தெரியாதா? நான் உங்கள் நாடகத்தின் கதாநாயகி சரோஜா அல்லவா?” ஆனந்தகுமார் இடி விழுந்தது போல் அதிர்ச்சியடைந்தார். அவர்
வாய் குழறிற்று: “போ, போ! நீ போய்விடு!”
“எப்படி நான் போக முடியும்? என்னைத்தான் என்றும் இருக்கும்படியாகச் செய்துவிட்டீர்களே! ஐயா, என்னை ஏன் இப்படித்துன்புறுத்துகிறீர்கள்? என்னால் பொறுக்க முடியவில்லையே!”
ஆனநதரின் முகத்தில் தாங்கொணாத துன்பத்தின் சாயல் படர்ந்தது. தம் இரு கைகளையும் ஒன்றோடொன்றைப் பிசைந்துகொண்டார். “நான் நானா – துன்புறுத்துகிறேன்? உன்னை என்றும் மனத்தில் வைத்து ……”
“ஆமாம். உங்கள் நேரத்தையும் மனத்தையும் என்னைச் சிருஷ்டிப்பதில் செலவிட்டீர்கள். உணவும் உறக்கமுமின்றி . என்னை உருவாக்கப் பாடுபட்டீர்கள். உலக நியதிக்கு மேற்பட்ட அழகை எனக்குக் கொடுக்க விரும்பினீர்கள். அத்துடன் இலட்சிய குணங்கள் அனைத்தையும் எனக்கு ஊட்ட ஆசைப்பட்டீர்கள். அதில் வெற்றியும் கண்டீர்கள் …”
அந்த அழகியால் மேற்கொண்டு பேச முடியவில்லை. புடைவை நுனியால் வாயை மூடிக்கொண்டு விம்மினாள். ஆனந்தர் தலைகுனிந்து தம் வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டார்: “ஆம், உன்னிலும் சிறந்த பெண் மனித கர்ப்பத்திலோ கற்பனையிலோ தோன்றியதில்லை.”
சரோஜா சட்டென்று நிமிர்ந்தாள். அவள் காதில் ஆனந்தரின் வார்த்தைகள் விழுந்துவிட்டன. “ஆமாம். அளவுக்கு அப்பாற்பட்ட அழகும் குணங்களும் எனக்கு அளித்த நீங்கள் இருதயம் மட்டும் சாதாரண மனிதத் தன்மை பொருந்தியதாக அமைத்தீர்கள். இலட்சிய புருஷன் ஒருவனை எனக்குக் காதலனாகப் படைத்தீர்கள்.”
ஆனந்தர் கெஞ்சுவது போல் சரோஜாவை ஏறிட்டுப் பார்த்தார். “நாடகம் என்றால் கதாநாயகன் வேண்டாமா?”
“அது எனக்குத் தெரியாது. என்னை அவன் மீது காதல்கொள்ளச் செய்தீர்கள். முடிவில்…” அவள் கண்களிலிருந்தது கண்ணீர் பெருக்கெடுத்தது. வாய் விட்டு அழப் பார்த்தாள்; ஆனால் முடியவில்லை.
அறையில் நிசப்தம் நிலவியது. ஆனந்தரின் திடம் சிறிது சிறிதாகத் திரும்பி வந்துகொண்டிருந்தது. ஆரம்பத்தில் அவரிடம் இருந்த பயங்கலந்த வெட்க உணர்ச்சி மெதுவாக ஒருவித அகம்பாவத்திற்கும் அதிகார தோரணைக்கும் இடமளிக்க ஆரம்பித்தது. அணையும் தறுவாயில் இருந்த சுருட்டை ஒரு முறை ஊதிப் புகையை உள்ளுக்கு இழுத்தார். சிறிது மௌனத்திற்குப் பிறகு அவர் பேச ஆரம்பித்தார்:
“நாடகம் என்றால் அதற்கு முடிவு இருக்கவேண்டும் துன்பியல் நாடகமானபடியால் சோகத்தில் முடிக்க வேண்டியிருந்தது. அதுதான் பொதுமக்களுக்கும் பிடித்தமானது. இன்றைய ஆரவாரத்தை நீ கேட்டாய் அல்லவா?”
“ஆமாம், நாடகம் பார்த்தவர்களின் களிப்பைக் கண்டேன். அவர்கள் ஆர்ப்பரித்து ஆமோதித்ததையும் கேட்டேன். அதனால்தான் இப்பொழுது உங்களிடம் வந்திருக்கிறேன். ஸ்வாமி, என்னைக் காப்பாற்றுங்கள். இந்தத் துன்ப நிலையிலிருந்து விடுதலையளியுங்கள்!”
“விடுதலையா? நான் உனக்கு அளிப்பதா? எப்படி?”
“நாடகத்தை நிறுத்திவிடுங்கள்!”
ஆனந்தர் இரண்டாம் முறையாகத் திடுக்கிட்டார். “நாடகத்தை நிறுத்துவதா? மக்களே அதை ஏற்றுக் கொண்டார்கள், நான் எப்படி
அதை நிறுத்த முடியும்? மேலும் அது எனக்குக் கொண்டு வரப்போகும் புகழையும் சிறப்பையும் கைநழுவ விட முடியாது.”
சரோஜா மண்டியிட்டுக் கை கூப்பினாள். “ஐயா, அப்படிச் சொல்லி விடாதீர்கள். தங்கள் உத்தரவின் மேல் தானே நான் சுகுமாரனைக் காதலித்தேன்? கைகூடாக் காதலின் கொடுமை தாங்கள் அறியாததா? தாங்கள் நாடகம் எழுதும்போது பல இம்சைகள் பட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் இன்றோ? என்னைப் படைத்த தெய்வமே, உன்னை மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன். நாடகத்தின் முடிவையாவது மாற்றிவிடு!”
“சரிதான். என்னையே எதிர்க்கத் தொடங்கிவிட்டாயா?”
“இல்லை, என்னையும் கொன்றுவிடுங்கள். அல்லது சுகுமாரனைக் கொல்லாது விடுங்கள். எவ்வகையிலாவது என்னை என் காதலனிடம் சேர்ப்பித்துவிடுங்கள்!”
“முடியாது. அவ்வாறெல்லாம் முடிந்தால் நாடகம் சீராக இராது. மேலும் இயற்கைக்கு மாறுபட்டதாக இருக்கும்.”
“இயற்கை! என் சிருஷ்டியே இயற்கைக்கு மாறுபட்ட டதுதானே? நாடகம் வெற்றியுடன் அரங்கேற்றப்பட்டு விட்டது. இனி அதைப் பல தடவை திரையிடச் சொல்லுவார்கள். நான் இத்தனை நாட்கள் தங்கள் கற்பனை உலகத்தில் மட்டும் உழன்று அல்லாடிக் கொண்டிருந்தேன். ஆனால், ஐயோ, இனி ஒவ்வொரு நாள் இரவும் மேடைமீது உயிரும் தசையும் இரத்தமும் கூடியவளாய் உருவாவேன். என் சோக ஜீவிதத்தை மீண்டும் மீண்டும் நடத்த வற்புறுத்தப்படுவேன். துன்பக் கடலில் ஆழ்த்தப்படுவேன். ஏக்கமும் ஏமாற்றமும் கொடுமையும் கைகூடாக் காதலும் என்னை மாற்றி மாற்றிச் சாட நான் வதைக்கப்படுவேன். ஐயா, உங்களை மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். கருணை புரியுங்கள்!” அவள் கெஞ்சினாள்.
“முடியாது, ஒருகாலும் முடியாது!”
மண்டியிட்டவள் எழுந்து நின்றாள். முகத்தில் இருந்த சோகம் மறைந்தது. பெரும் ஏமாற்றத்தினால் உண்டாகும் சினமும் வன்மமும் மதிவதனத்தைப் பயங்கரமாக மாற்றின.
“ஆனந்தகுமார், நீ ஒரு விலங்கு! மனிதனென்று நினைத்து மன்றாடி நின்றேன். மிருக குணம் படைத்த அரக்கனே, எனக்குத் தெரியும் உன் நாடகத்தின் நோக்கம் எனக்குத் தெரியும் நீ அதனைக் கைவிட மறுக்கும காரணம். ஆனால், பாவி, உன்னைப் பெருந் தீ ஒன்று எரித்து வருகிறது. பொறாமைத் தீ!”
“என்ன சொன்னாய்? பொறாமை! யாருக்குப் பொறாமை?” ஆத்திரத் தில் ஆனந்தகுமாரின் உடல் பதறியது. அவர் உதடுகள் துடித்தன.
“உனக்குத்தான் பொறாமை, சுகுமாரனிடம், அவனைப் படைத்த நாளிலிருந்தே அவனை நீ விஷமென வெறுத்தாய். உயரிய வாழ்வும் சீரிய நோக்கமும் கொண்ட அவனை ஆசாபாசங்களில் ஏமாற்றங் கண்ட உன்னால் சகிக்க முடியவில்லை. உலகத்தின் உயரிய லட்சியங்கள் அனைத்தையும் மேற்கொண்டு கடைப்பிடித்த அவனை உன்னால் சகிக்க
முடியவில்லை. என் அன்பைப் பரிபூரணமாகப் பெற்றிருந்த அவனை, என்னைப் படைத்தும் எட்டியும் பிடிக்கத் தகுதியற்ற உன்னால் சகிக்க முடியவில்லை. ஆமாம், அவன் மேல் நீ பொறாமை கொண்டாய், என்மீது கொண்ட தகாத காதலினால்!”
“உளராதே! ஐம்பது வயசில் காதல் கொள்ள …”
“காதல்! பேய்க் காதல் உன்னுடையது. ஆனந்த குமார், சுகுமாரனையும் என்னையும் ஏதோ உன் கற்பனையில் உதித்த உருவங்கள் என்று உன்னை நீயே ஏமாற்றிக்கொள்ளப் பார்க்கிறாய்!”
“போதும், நிறுத்து!” ஆனந்தரின் முகத்தில் முத்து முத்தாக வேர்த்தது. நெற்றி நரம்புகள் புடைத்து விளங்கின.
“நீ இந்நாள்வரை நடத்திய வாழ்வு நீசமானது. ஆனால் உயர்ந்தோன் ஆகவேண்டுமென்ற கற்பனையில் சுகுமாரனைப் படைத்தாய். உன்னை அவன் உருவத்தில் பிரதிபலிக்க எண்ணினாய். ஆனால் அவன் உன் எல்லைக்கும் மேற்பட்டுவிட்டான். நீ என்று நினைத்துச் சிருஷ்டி செய்தது ஒரு தெய்வமாக மாறிவிட்டது.”
ஆனந்தரின் உடல் வேதனையால் துடிதுடித்தது. கைகள் ஒன்றையொன்று இறுகப் பிசைந்துகொண்டதனால் பல இடங்களில் இரத்தம் கசிய ஆரம்பித்தது.
“வாழ்க்கையில் உன்னால் அடைய முடியாத ‘இன்பங்களை இந்த நாடகத்தின் மூலம் அநுபவிக்க எண்ணினாய். அன்பே இன்னதென்று அறியாத உன்மீது யாரும் அன்புகொள்ள முடியவில்லை. உலகத்தில் மிக ஈனமான பெண்கூட உன்னை உள்ளன்போடு காதலிக்க இயலவில்லை. அந்தத் தாபம் தணிவதற்காக உன் பைசாச மூளைக்குத் தோன்றியவாறு அழகிலும் குணத்திலும் மற்ற எல்லா வகைகளிலும் சீரியவளாக என்னைப் படைத்தாய். உன் பிரதிமை என்று நீ கற்பனை செய்து கொண்டவனிடம் காதல்கொள்ளச் செய்தாய்.”
“போதும், நிறுத்து நிறுத்து! என்னைக் கொன்றுவிடாதே!” ஆனந்தர் அலறினார்.
“சண்டாளனே, அதோ பார் உன் கற்பனையில் நீ இதுவரை காணாததை!” சரோஜா வாசற்படிப் பக்கம் கையைச் சுட்டினாள்.
அங்கே இன்னோர் உருவம் காற்றில் மிதந்தபடி காணப்பட்டது. அதைப் பார்த்துச் சரோஜா குழையும் குரலில் கூறினாள்: “என் அன்பே! என் ஆருயிரே!”
அவ்வுருவம் காற்றில் மிதந்தபடியே ஆனந்தருக்கும் சரோஜாவுக்கும் இடையே வந்து தங்கியது. அது ஒரு பிணம்; ஓர் அழகிய யுவனின் உயிரற்ற சடலம். அதன் மார்பில் கத்தி ஒன்று பிடிவரை புதைக்கப்பட்டிருந்தது. அந்த கத்தியைச் சுற்றிலும் இரத்தம் உலர்ந்து பயங்கரக் கறையாகியிருந்தது,
ஆனந்தரின் முகம் வெளிறிற்று. கண்கள் சிவந்து வெளியே விழுந்து விடுவது போலப் பிதுங்கி வந்தன.
சரோஜா ஆனந்தரைப் பார்த்து ஆவேசம் பிடித்தவள் போலக் கதறினாள்: “பாரடா; மனிதப் பைசாசமே, பார்!* பிறகு சிறிதும் தயங்காமல் கத்தியை அந்தப் பிணத்தின் மார்பிலிருந்து இழுத்தாள். காயத்திலிருந்து ரத்தம் ஆனந்தர் முகத்தில் பீறியடித்தது.
“உன் இரத்தமடா இது, உன் இரத்தம்! உன்னை நீயே சாக அடித்துக் கொண்டாய். பார், கூத்தாடு, கூத்தாடு!”
பயங்கரம் தாங்க முடியாமல் கண்களை இறுக மூடிக்கொண்டார் ஆனந்தர். அவரைத் தாங்கி நிற்கும் உலகத்தை யாரோ மிகவும் வேகமாகச் சுழற்றிச் சுழற்றி அந்தரத்தில் வீசியெறிந்த உணர்ச்சி ஏற்பட்டது. தம் தலையை இரு கைகளாலும் கெட்டியாகப் பிடித்துக்கொண்டார். ஒரு கணத்திற்குப் பிறகு நினைவிழந்து கீழே விழுந்தார்.
மறுநாள் மாலைப் பத்திரிகைகளில் கீழ்க் காணும் செய்தி காணப்பட்டது:
“நேற்றிரவு நாடகாசிரியர் ஆனந்தகுமார் திடீரென்று மாரடைப்பினால் காலமான செய்தியை மிக வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். இறப்பதற்குச் சில மணி நேரம் முன்புதான் அவர் எழுதிய நாடகம் ஒன்று மிகவும் வெற்றிகரமாக அரங்கேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.”

One Comment on “அசோகமித்திரன் /நாடகத்தின் முடிவு”