
(பாவகை: அறுசீர் விருத்தம்)
அன்புள்ள அப்பா வணக்கம்!
ஆயுள்தான் நூறு முடிந்து
இன்றுங்கள் பிறந்த தினமாம்!
ஏழ்மையினைப் புறத்தே இருத்தி
நன்றாக உழைத்த குடும்ப
நல்லோர்கள் பெற்ற குழந்தை
என்றுங்கள் குணத்தைக் கிராமம்
இன்றுகூடப் புகழ்வ தறிவோம்.
உடன்பிறந்த தம்பி, இருக்கும்
ஒன்றுவிட்ட பிறப்ப னைத்தும்
உடன்வந்த உங்கள் இதய
உயிர்மேலாம் அன்பின் சுகத்தில்
திடமாக வாழ்ந்த கணக்கில்
தெளிவாக நூறு மதிப்பெண்
சுடராகப் பெற்ற எளியோய்!
சொந்தங்கள் மதிக்கும் மனத்தோய்!
சுட்டிடும் வார்த்தை என்றும்
சொல்லாத பண்பும், அன்புச்
சிட்டெனப் பறந்தே ஓடிச்
செய்கின்ற உதவும் கையும்,
கட்சிசார் பில்லா நெஞ்சும்
கடமையதில் உறுதி கொண்டு
நட்பினை மதித்துப் போற்றும்
நாகரிகம் கற்ற மனிதர்!
பெற்றவர் வாக்கை மீறார்!
பேராசை இன்றி நாளும்
கற்றவர் மெச்சிப் பேச
கண்ணியமாய் உழைத்து வந்தார்
மற்றவர் வணங்கும் வண்ணம்
மனந்தன்னில் நேர்மை கொண்டார்!
உற்றதன் மனைவி மக்கள்
உள்ளத்தில் தெய்வ மானார் !
தெய்வ பக்தி யோடு
தேச பக்தி மிக்கார்!
பெய்யும் மழையைப் போல
பெரிய மனத்தைக் கொண்டார் !
மெய்யைச் சொல்லும் போதும்
மிகையாய்ச் சொல்ல மாட்டார்
ஐயா உங்கள் ஆசி
அடியோம் பெற்ற பேறு.
(18.07.2026)
[இன்று (18.07.2026 ) எங்கள் அப்பாவின் நூற்றி ஒன்றாவது பிறந்ததினம்.]
