உமா மஹேஸ்வரி பால்ராஜ்/வழக்கத்தை விட வெய்யில் அதிகம்

வழக்கத்தை விட
முன்னதாக வரும் மழை
எங்கோ ஒளிந்து கொண்டிருக்கிறது

நேற்றைய காய்ந்த கோடுகள்
நேற்றைய உலர்ந்த துணிகள்
நேற்றைய தீர்மானங்கள்
நேற்றைய மௌனங்கள்
நேற்றைய கூக்குரல் யாவற்றையும்
நேற்றே முடித்து விட்டது காலம்

புதியதாய் சில அவர்கள் சொல்லும்
அருள் வாக்கு எல்லைச்சாமி
நேற்று ஊர்விட்டு நகர்ந்ததாக
வந்த இன்றைய செய்தியைத்
தாமதமாகப் பார்த்துவிட்டு
கோயில் போய் கும்பிட்டு
நாளைக்கொரு ஒப்புசமாதானம்
என தேற்றிக்கொள்ளும் வானம் எனது

மழையைக் கொண்டு வராதா
என்று காத்திருக்கும் என் பூமிக்கு
சமாதானமாய் தான்
வாசல் திண்ணைகுடம்

நிரம்பி நிறைத்திருக்கும்
அதன் அளவு குறையாது
அசையாது வைத்துவிட்டு
நோன்புக்கு அழைத்தால்
வீடு வந்துவிடுமென சொன்னவர்களுக்காய்
காப்பும்கட்டி வைத்தாயிற்று

எதைத்தின்றால் பித்தம் போகுமென
ஒப்புக்காய் தலையாட்டுபவளை
ஒன்றும் சொல்லத் தோதில்லை

இக்கணம் ஆட்டுக்குட்டி ஒன்று வாசல்செடியை
சாப்பிடவர துரத்தாத
இந்த பத்து நிமிடம்
அதற்குப் பசியாறப் போதும் தானே

குறையொன்றுமில்லை
காத்திருக்கலாம்
வழக்கத்தை விட இன்று
வெய்யில் அதிகம்..

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன