
“இதப்பாரு ரமா.. நீ நல்ல திறமைசாலியா இருக்கலாம்.. தலை சிறந்த நிர்வாகியா இருக்கலாம்.. ஆனா கார்பரேட்னு வந்துட்டா கொஞ்சம் சாணக்யத்தனமும் வேணும்.. போர்ட் மீட்டிங்கறது லேசுபட்ட விஷயம் இல்லை.. உனக்கு அனுபவம் பத்தாது”
ராஜ்மோகன் மகளை கவலையுடன் பார்த்தார்..
“எல்லா விஷயத்துலயும் நீ கொஞ்சம் ஸ்ட்ரிக்டா இருக்கறது கம்பெனில சில பேருக்குப் பிடிக்கலை.. அவங்களுடைய முக்கியத்துவம் பாதிக்கப்படறதா நினைக்கறாங்க.. அதனால இந்த போர்ட் மீட்டிங்குல உன்னை மேனேஜிங் டைரக்டர் போஸ்டுலேர்ந்தே தூக்க முழு மூச்சா களத்துல இறங்கியிருக்காங்க”
ரமா அப்பா சொல்வதை மௌனமாகக் கேட்டுக்கொண்டிருந்தாள்..
“வாக்கெடுப்புன்னு வந்ததுன்னா எனக்கு நாணயமா இருக்கறவங்க கண்டிப்பா உனக்குத்தான் ஆதரவளிப்பாங்க.. ஆனா இப்பப் பிரச்சனையே அந்த ஆறுபேரைப் பத்தித்தான்.. அவங்க இப்ப எதிர்கட்சியோடதான் இருக்காங்க.. அவங்க உனக்கு எதிரா வாக்களிச்சா உன் பதவி கவிழ்ந்துரும்”
ரமா தொடர்ந்து மௌனமாக இருந்தாள்.
ராஜ்மோகனின் கவலை இன்னும் அதிகரித்தது. ஒருவேளை தான் சொல்வதைக்கேட்டு மகள் பயந்துவிட்டாளோ?
உடனே அவளைத் தேற்ற முயன்று..
“இதப்பாரும்மா.. உன்னை கலவரப்படுத்த நான் இதைச் சொல்லலை.. ஆனா மீட்டிங்னு வந்துட்டா..”
அவர் முடிப்பதற்குள் ரமா தொடர்ந்தாள்..
“கவலைப்படாதீங்கப்பா.. நான் ஏற்கனவே இதெல்லாம் யோசிச்சாச்சு.. என் பதவிக்கு எந்த பாதிப்பும் வராது.. அந்த ஆறுபேரும் கண்டிப்பா எனக்கு ஆதரவாத்தான் இருப்பாங்க”
ராஜ்மோகனுக்கு ஆச்சர்யம்..
“எப்படிம்மா அவ்வளவு நிச்சயமா சொல்றே?”
ரமா அப்பாவின் அருகில் அமரந்து..
“நீங்கதானேப்பா சொன்னீங்க.. கார்ப்பரேட்னு வந்துட்டா கொஞ்சம் சாணக்யதனம் வேணும்னு.. இப்ப அந்த ஆறுபேரும் என் கட்டுப்பாட்டுல”
“எப்படி?”
“அந்த ஆறுபேரைப்பத்தி அவங்க மனைவிமார்களுக்குத் தெரியக்கூடாத சில ரகசியங்கள் ஆதாரத்தோட இப்ப என் கைல சிக்கியிருக்கு.. இது அவங்களுக்குத் தெரியும்.. அப்புறம் எப்படி எனக்கு எதிரா இருப்பாங்க?”
மர்மமாகச் சிரித்த மகளை ஆச்சர்யத்தோடு பார்த்தார் ராஜ்மோகன்.
