
இயற்கை நிகழ்வா?
செயற்கை விபத்தா?
இமய மலைமீது
பறந்து விளையாடிய
இராணுவ தளபதி
பிபின் ராவத்திற்கு,
குன்னூர் மலையின் குற்றுயரம்
சறுக்கி நொறுக்கி விட்டதே!
அந்தோ!
பாதுகாப்பாக பயணித்த
இராணுவ வானூர்தியே – நம்
படைத்தளபதியை
பலி கொள்ளுமா?
ஏது சூழ்ச்சி? என்றறிய
இருண்ட கருப்புப் பெட்டி
ஏதேனும் தகவல் தருமா?
தீயுடன் மரத்தைத்
தீண்டியதா? – மரத்தைத்
தீண்டியதால் வானூர்தி
தீக்குளித்ததா?
கூனூரே கூற்றின் ஊராய்
வானூர்தியைக்
கொளுத்திப் போட்டதே!
ஊடகங்கள் கொளுத்திப் போடும்
ஊகங்கள் எல்லாம்
பூடகமாய்ப் போகட்டும்!
ஈடில்லா பதவி உயரத்தை
எட்டிப்பிடித்த தளபதியே…
இன்னும் உயர்பதவி தேடி
இணையருடன் கைக் கோர்த்து
விண்ணுலகம் புகுந்தாயோ?
விம்முகிறார் இந்தியர்கள்!
