விருட்சம் நினைவுகள் 9/ அழகியசிங்கர்

சிறு பத்திரிகை எப்படி ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வந்து நின்று விடுகிறதோ அதேபோல் சிறுபத்திரிகையில் எழுதும் எழுத்தாளர்களும் தொலைந்து போய்விடுகிறார்கள்.

விதிவிலக்காக ஒரு சில எழுத்தாளர்கள் மட்டும் அதிலிருந்து தப்பிப்பார்கள். 

கசடதபற இதழில் எழுதி எத்தனையோ எழுத்தாளர்கள் தொடர்ந்து எழுதினார்களா என்ன ஆனார்கள் என்பதெல்லாம் தெரியவில்லை.  பத்திரிகையில் எழுதுவதோடு சரி அதன்பின் அவருடைய படைப்புகள் புத்தகமாக வர வாய்ப்பில்லாமல் போய்விடும்.

ஏன் இப்படி நடக்கிறது?  எழுதுபவர்களுக்கு அவர்களுடைய படைப்புகள் வெளிவந்த பிறகு அவர்களுடைய படைப்பு மனநிலை வேறு திக்கை நோக்கிப் போய்விடுகிறதா?  அதனால் அவர்கள் தொடர்ந்து எழுதாமல் போய்விடுகிறார்களா?

இப்படி எத்தனையோ படைப்பாளிகளை நாம் தவற விட்டிருக்கிறோம்.  இதற்குக் காரணம் என்ன?  

பொதுவாக சிறுபத்திரிகைகள் நடத்துபவர்கள் ஒரு வங்கியிலோ அரசாங்கத்திலேயோ பணி புரிந்து கொண்டிருப்பார்கள்.  அவர்களுடைய உபரி நேரத்தில்தான் கை காசு செலவழித்து பத்திரிகைக் கொண்டு வருவார்கள்.   இப்படிப் பத்திரிகைகளைக் கொண்டு வருபவர்கள் தங்கள் கைவசம் எந்தப் பத்திரிகையையும் வைத்துக்கொள்வதில்லை. அந்தப் பத்திரிகைகள் காலப்போக்கில் காணாமல் போய்விடும்.  இதைத் தவிர்க்க முடியாது.  மேலும் அவர்களுடைய பத்திரிகைகளை இலவசமாகவே எல்லோருக்கும் அனுப்புவார்கள்.  சிறு பத்திரிகைகளைப் பொருட்படுத்தாத எத்தனையோ பேர்களுக்கு அந்தப் பத்திரிகைகள் போய்ச் சேரும்.

கசடதபற 24வது இதழில் (செப்டம்பர் 1972) வெளிவந்த ஜரதுஷ்டன் என்பவரின் கவிதையை இங்கே அளிக்க விரும்புகிறேன்.

பரிணாமம் என்பது கவிதையின் பெயர்.

            நாலு வயதில்
            நர்ஸரிக் கவிதையும்
            பின்னர் சில நாள்
            ஆத்திச் சூடியும்
            கோனார் நோட்ஸில்
            கம்பனும் கபிலனும்
            படித்துக் குழம்பி 
            பாட்டு எழுத
            பேப்பரும் பென்ஸிலும்
            எடுத்த வேளை
            குட்டிச் சுவராய்
            போவாய் நீயென
            பெற்றதுகளிடம்
            பாட்டுக் கேட்டேன்.

யார் இந்த ஜரதுஷ்டரன்.  அவர் இப்போது எங்கே இருக்கிறார்? இருக்கிறாரா இல்லையா?  இது மாதிரியான கேள்விகளுக்கெல்லாம் பதிலில்லை.  இவருடைய கவிதைகள் இதுமாதியான கசடதபற இதழிகளிலேயே நின்று போய் விட்டது.

பொன் விஜயன் என்ற ஒரு நண்பர்.  அவர் ஆரம்பித்த பத்திரிகையின் பெயர் புதிய நம்பிக்கை.  எப்படியோ கொண்டு வந்து விடுவார்.  இப்போது அவரும் இல்லை.  அந்தப் பத்திரிகையும் இல்லை.

வீட்டிலேயே  அச்சுக் கோர்க்கும் இயந்திரங்களை வைத்துக்கொண்டு பத்திரிகைக் கொண்டு வருவார்.  உண்மையில் அச்சுக் கோர்ப்பவர்களுக்கு வாரம் வாரம் கூலி கொடுக்கச் சிரமப்படுவார்.  பொருளாதாரத்தில் அச்சுக் கோர்ப்பவர்கள் பொன் விஜயனைவிடப் பரவாயில்லை ரகத்தில் இருப்பார்கள்.

சரி ஒரு சிறுபத்திரிகை நடத்த ஒருவருக்கு என்ன தகுதி இருக்க வேண்டும்.  யார் சிறுபத்திரிகை நடத்துவது?  இந்தக் கேள்விகளுக்கெல்லாம் ஒரே பதில்.  எந்தத் தகுதியும் இருக்க வேண்டாம் என்பதுதான்.  யாருக்குத் திறமை இருக்கிறதோ அவர்கள் பத்திரிகைகள் நடத்தலாம்.  ஆனால் எல்லாச் சிறுபத்திரிகைகளுக்கும் வாசகர்கள் வேண்டும்.  வாசகர்கள் இல்லாவிட்டால் ஒன்றுமில்லை.                             (இன்னும் வரும்)

One Comment on “விருட்சம் நினைவுகள் 9/ அழகியசிங்கர்”

  1. வாசகன் என்ற முறையில் எனக்கு வேறு மாதிரியான மனக்குறை உண்டு. எல்லா சிறு பத்திரிகைகளும் அனேகமாக ஒரு வெளியீட்டு விழா நடத்தி தான் ஆரம்பிக்கிறார்கள். என்னை மாதிரி அசடுகள் மேடையிலேயே ஓர் ஆண்டு சந்தா செலுத்தி விடுகிறார்கள். ஆனால் ஒரு சில இதழ்களே வெளியாகின்றன. அதன் பிறகு அந்த இதழ் வெளிவருமா இல்லையா என்ற தகவல் யாரும் தெரிவிப்பதில்லை. குறைந்தபட்சம் ஒரு அஞ்சல் அட்டை மூலம் தெரிவிக்கலாமே, அது கூட செய்வதில்லை.

    நான் தில்லியில் இருந்தபோது பிரபலமான ஒரு தமிழ் கவிஞருக்கு சாகித்திய விருது கிடைத்தது. அவருக்கு வாழ்த்துக் கவிதை டெல்லி தமிழ்ச் சங்கத்தில் நான் தான் படித்தேன். அவர் நடத்தி வந்த மாத இதழுக்கு நான் உள்பட பலரிடம் ஆண்டுச் சந்தா பெற்றுக்கொண்டார். ஒரே ஒரு இதழ் தான் அனுப்பினார். பிறகு என்ன ஆயிற்றோ தெரியாது. அதற்குப் பல ஆண்டுகள் பிறகும் அவர் செல்வ வளத்தோடு தான் இருந்தார்……!

Comments are closed.