வகுப்பறைக்குள் வங்கி ஊழியர் / எஸ் வி வேணுகோபாலன்

டிசம்பர் 9ம் தேதி கல்லூரி மாணவர்கள் சிலரோடு வாசிப்பு குறித்த உரையாடல் நிகழ்த்தக் கிடைத்த அரிய வாய்ப்பு பற்றிய என் வாட்ஸ் அப் பதிவையும், அன்பு மாணவர் சில்வர்ஸ்டைல் ஜெர்ரி ஆரத் தழுவிக்கொண்டது உள்ளிட்ட புகைப்படங்களும் ரசித்துப் பார்த்து அன்பின் வெளிப்பாடு உணர்த்தும் ஏராளமான மறுமொழி வந்து கொண்டிருக்கிறது.

இந்த நேரத்தில் என்னால், மறைந்த தோழர் ஜெகந்நாதனை நினைக்காமல் இருக்க முடியாது. இந்தியன் வங்கி ஆர் ஆர் நகர் கிளை ஜெகந்நாதன். மும்பை சென்று பின்னர் சென்னைக்கு வந்து, பார்க் டவுன் கிளையில் பல ஆண்டுகள் பணியாற்றி, அதிகாரியாகப் பதவி உயர்வு பெற்று தருமபுரிக்குச் சென்றவர். நெஞ்சு வலி ஏற்பட்டு உள்ளூர் மருத்துவர் ஓய்வெடுக்கச் சொல்லி மருந்து கொடுத்தபின், அதைக் கேளாமல் பேருந்தில் ஏறி சென்னையில் வீட்டைச் சென்றடைந்து அந்த அதிகாலை நேரத்தில் கதவைத் தட்டியவர் உள்ளே நுழைந்ததும் மீண்டும் நெஞ்சு வலியால் துடித்திருக்கிறார். அடுத்த நாள் அவர் மறைந்த செய்தி வந்துவிட்டது, அக்டோபர் 29!

அதிர்ந்து பேசாத, ஆனால், ஓயாமல் ஆக்கப்பூர்வமான பணிகள் தன்னடக்கமாகச் செய்து கொண்டே இருந்தவர், புன்னகை பூத்த முகத்தினரான ஜெகந்நாதன். அவர் பார்க் டவுன் கிளையில் பணியாற்றிய காலத்தில், அவரை ஊக்கப்படுத்திப் பெருமைக்குரிய பணிகள் செய்யத் தூண்டியவர் தோழர் திருநாவுக்கரசு.

தொண்ணூறுகளில் அப்படியான ஓர் ஆண்டில் முதல் நாள் மாலை இந்தியன் வங்கி ஊழியர் அசோசியேஷன் சங்க அலுவலகத்தில் பேசிக்கொண்டிருக்கையில், நாளை ஜனவரி 30, நீங்கள் ஏன் காந்தியைப் பற்றிப் பேசக்கூடாது என்று என்னைக் கேட்டார். நானா, மகாத்மாவைப் பற்றியா, எங்கே என்று கேட்டேன். நான்கு மணிக்கு எங்க கிளைக்கு வந்துருங்க, அப்புறம் பேசிக்கலாம் என்று சொல்லிவிட்டார். பின்னர், அரசு தான் சொன்னார், ஒரு பள்ளிக்கூடத்தில் என்னைப் பேச அழைக்கிறார் என்று.
எனக்கு ஆண்டு நினைவில்லை, இப்போது யோசித்தால், தேச பிதா மறைவின் ஐம்பதாம் ஆண்டு நிறைவு நாளாக இருக்கக்கூடும் என்று நினைக்கிறேன், ஜனவரி 30, 1998 ஆக அமைந்திருக்க வாய்ப்பு உண்டு. சூளை செங்கல்வராய நாயக்கர் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் ஒரு சில நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்து தந்ததில் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் சிலர் அறிமுகம் வாய்த்திருந்தது தோழர் ஜெகனுக்கு. என்னை அந்தத் தலைமை ஆசிரியர் அறைக்குள் அழைத்துச் சென்று நிறுத்தினார், அவர் பெயர் ராஜேந்திரன் என்று நினைவு. அன்றைய உரையாடல் மறக்கவே முடியாது எனக்கு.

“சார் தான் இன்னிக்கு பேசறாரா, வணக்கம் சார், உக்காருங்க சார்…இல்ல, உக்காருங்க முதல்ல.. ..இந்தியன் வங்கி ஆபீசர் தானே?”

“வணக்கம் சார்…என் பேரு எஸ் வி வேணுகோபாலன்…அதிகாரி இல்ல, நான் வங்கியில் எழுத்தராகத் தான் இருக்கேன்…உங்களை இன்று சந்திப்பது ரொம்ப மகிழ்ச்சி, எங்க பாட்டனார்… காஞ்சிபுரம் போற வழியில வாலாஜாபாத் கேள்விப்பட்டிருப்பீங்க, அங்க இந்து மத பாடசாலையில் தலைமை ஆசிரியரா இருந்தவரு…எனக்கும் சின்ன வயசுல இருந்தே ஆசிரியர்கள் மீது பெரிய மரியாதை உண்டு…”

“நல்லதுங்க அய்யா…அப்ப, காந்தி பத்தி பேசறீங்க…ஜெகன் சார் நீங்க சாரை அறிமுகம் செய்து முதல்ல கொஞ்ச நேரம்…”

“இல்லீங்க சார்..அது நல்லா இருக்காது…உங்க பள்ளி. நீங்க தான் அறிமுகம் செய்யணும். எப்போ ஆரம்பிக்கிறோம்?” என்று கேட்டார் ஜெகன்.

“உங்களுக்காகத் தான் இன்னும் பெல் கூட அடிக்காம வச்சிருக்கு, விட்டாப் பசங்க பறந்துருவாங்க…அதுல ஒரு சின்ன பிரச்சனை, மேலே வழக்கமா கூட்டம் நடத்தற ஹால்ல இன்னிக்கு வேற ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செஞ்சிருக்கு, அது தனியே ஓடிட்டிருக்கும். நாம, இங்கே வாசல் மைதானத்துல அசெம்பிளி பிரேயர் பண்ற எடத்துல மீட்டிங் போட்டுரலாம்….எட்டாம் வகுப்பு வரை பாவம் சின்ன பசங்க, விட்டுரலாம், பிளஸ் 2 பசங்க எல்லாம் மேலே அந்த மீட்டிங் போவாங்க… ஒன்பது, பத்து, பதினொண்ணு வரைக்கும் மடக்கிறலாம், வாசல் கேட் பூட்டிருவாரு வாச்மேன், ஒண்ணும் பிராப்ளெம் இருக்காது…என்ன இன்னிக்கு மைக் கிடையாது, அது மேலே ஹால்ல தேவைப்படும். சாருக்கு அது ஒண்ணும் பிரச்சனை இல்ல தானே…என்ன ஒரு 210 தான் வரும் பசங்க…அப்படித்தானே” என்று அருகே வேறு ஒரு ஆசிரியரைக் கேட்டார். அவர் கேட்பதற்குமுன்பே ஆமாம் என்று சொல்லிவிட்டார்.

“சார்…யாரையும் மடக்கி எல்லாம் உட்கார வைக்காதீங்க…வாசல் கதவெல்லாம் திறந்து வைங்க…பிடிக்கல, போர்னு நெனச்சா, பசங்க சுதந்திரமா எழுந்து போய்க்கிட்டே இருக்கட்டும்” என்றேன்.

“அய்யய்யோ, நம்ம ஸ்கூல் பத்தி என்ன நெனச்சீங்க, டிசிப்ளின் சார்….இந்தாங்க டீ குடிங்க…அஞ்சு நிமிசத்துல ஆரம்பிச்சிரலாம்” என்றார் தலைமை ஆசிரியர்.

நாங்கள் எல்லோரும் பள்ளிக்கூட முகப்பில் இருந்த அந்தப் பரந்து விரிந்த மைதானத்தின் நடுவே இருந்த நாற்காலிகளில் போய் அமர்ந்தோம். எங்கள் எதிரே நெருக்கமாக ஒருவரை ஒருவர் இடித்துப் பிடித்துக் கொண்டு மாணவர்கள் அமர்ந்து இருந்தனர். இடது பக்கம் மாணவியர், வலது பக்கம் மாணவர்கள். எங்கள் அருகே கொஞ்சம் ஆசிரியர், ஆசிரியைகளும்.

தலைமை ஆசிரியர் எழுந்து நின்றார்: “பசங்களா, இன்னிக்கு என்ன தேதி?”

“ஜனவரி 30 காந்திஜி நினைவு நாள்” என்று நூற்றுக்கு மேற்பட்ட குரல்கள் கோரஸ் குரலில்.

“வெரிகுட்….இன்னிக்கு நம்ம கிட்ட, மகாத்மா காந்தி பத்திப் பேச, வேணுகோபால் அய்யா வந்திருக்காங்க”

“வணக்கம் அய்யா” மீண்டும் கோரஸ்.

எல்லோரும் எழுந்து நிற்க, நான் பயந்து போய், எழுந்து நின்று, எல்லோரும் உக்காருங்க என்றேன்.

“அய்யா வந்து, இந்தியன் வங்கியில் ஆபீஸரா இருக்காங்க”

“மெய்யாலுமா சார்?” என்று என்னைக் கேட்ட அந்த ஒன்பதாம் வகுப்பு குறும்பு மாணவி முகமும் அந்த இரட்டைப் பின்னலும் ஒருபோதும் மறக்காது.

“இல்லம்மா…நான் அதிகாரி இல்ல…எழுத்தர், கிளார்க் தான்”

“அய்யா…அப்படியே கண்டின்யூ பண்ணுங்க….” என்றார் தலைமை ஆசிரியர்.

“எவ்ளோ நேரம் பேசலாம் நான்?” என்று கேட்டேன்.

“பத்து நிமிஷம் சார்” “கால் மணி நேரம் சார்” அங்கொன்றும் இங்கொன்றும் கொஞ்சம் துடுக்கான பசங்கள் பதில், பக்கத்துப் பையன்கள் அவர்களைக் கண்டித்து அடக்கிக் கொண்டிருந்தனர்.

“சார்…அங்க கேக்காதீங்க, ஒரு அரை மணி எடுத்துக்குங்க” என்றார் ராஜேந்திரன் சார்.

“இன்னிக்கு காந்திஜி நினைவு நாள் சரி…அவர் எப்படி இறந்தார்?” என்று தொடங்கினேன்.

“பாம் வெடிச்சதுங்க சார்” “ஏ கே 47, டுமீல்” “மனித வெடிகுண்டு சார்” இஷ்டத்திற்கு பதில்கள்.

“அப்படியெல்லாம் இல்ல…ஒரு ஆளு பக்கத்துல வந்து துப்பாக்கியால் சுட்டதுனாலத் தான் மகாத்மா இறந்துபோனார், சுட்டவர் யார் தெரியுமா?”

“கோட்ஸே”

“சரியான விடை…அவர் எந்த நாட்டுக்காரர்?”

ஆஸ்திரேலியா உள்பட பதில்கள். முழு பெயரைச் சொல்லி அங்கிருந்து தொடங்கியது பின்னோக்கி நம் தேச பிதா சரித்திரம்.

நிறைய கேள்விகள், அவர்களது ஆர்வமிக்க பதில்கள். மாணவர்கள் பெயர்கள் எனக்கு அதற்குள் கொஞ்சம் கொஞ்சமாக வசப்பட்டது, சரியான பதில்களுக்கு அவர்கள் பெயரைக் கேட்டு மற்றவர்கள் கைதட்டல் செய்ய வைக்கவும், பதில்கள் சொல்லப் பெரிய போட்டியே நடந்தது. அப்படியே இந்திய தேசம் அந்நியரிடம் அடிமைப்பட்ட கதை, விடுதலை போராட்டத்தின் முக்கிய காலச்சுவடுகள், தியாகங்கள், உன்னதத் தலைவர்கள் என்று நிறைய செய்திகளை விவாதித்துக் கண்டுணர்ந்து முன்னே முன்னே கடந்து போய்க்கொண்டிருந்தது வகுப்பு.

நடுவே நடுவே கேட்டேன், “எவ்ளோ நேரம் எடுத்துக்கலாம் இன்னும்?”

“பேசுங்க சார்…நிறுத்தாதீங்க சார்!”

ஐம்பதாவது நிமிடம் நிறைவு செய்துவிட்டேன். ஒன்றிரண்டு பிள்ளைகள் ஓடி வந்து நோட்டுப் புத்தகங்களில் கையெழுத்து போடுமாறு கேட்டனர். அதெல்லாம் நியாயமில்லை என்றேன். விடாமல் சுற்றிச் சுற்றி அவர்கள் பேசிக்கொண்டே இருந்தனர். மேலும் சிலர் சூழ்ந்து கொண்டனர்.

“நீங்க பள்ளிக்கூட வாத்தியார் தானே…பேங்க் சார்னு ஏன் சொல்றீங்க” என்று கேட்டது ஒரு குரல்.

தலைமை ஆசிரியருக்கு நன்றி சொல்லிவிட்டுப் புறப்படுகையில், ‘சார்…இன்னும் ஒரு டீ சாப்பிடலாம், காப்பி சொல்லட்டுமா?” என்ற தலைமை ஆசிரியரை மறித்து, “இல்ல நாங்க பாத்துக்குறோம்” என்று அழைத்துக் கொண்டு புறப்பட்டார் ஜெகந்நாதன். அவர் எப்போதும் உணர்வுகளை நேருக்கு நேர் சட்டென்று கடத்தி விடமாட்டார். ஆனால், முகத்தில் அவரிடம் ஒரு தெம்பும், சந்தோஷமும் தெரிந்தது.

நான்கு அடிகள் கூட வைத்திருக்க மாட்டோம், வேகமாக ஓர் ஆசிரியை எங்களை நோக்கிக் குரல் கொடுத்தபடி வந்தார்:

“சார்..ஒரு நிமிஷம்…”

“சொல்லுங்க மேடம்”

“சார், உங்க ஸ்பீச் முழுக்க கேட்டேன்…நான் ஹிஸ்டரி டீச்சர்”

“வணக்கம் மா, மன்னிக்கணும், தேதிகள் ஏதாவது தப்பா சொல்லிட்டேனா…குறிப்புகள் எதுவும் இல்லாம, மெமரில இருந்து அப்படியே பேசினது, ஒன்றும் திட்டமிடாத உரை” என்று கைகூப்பினேன்.

“சார் அதெல்லாம் இல்ல…இங்க இந்த வாண்டு சொல்றத கொஞ்சம் கேளுங்களேன்” என்று அருகே இருந்த ஒரு மாணவனின் காதைப் பிடித்துச் செல்லமாகத் திருகுவதுபோல் செய்தார்.

அவன் சிரித்துக் கொண்டே நின்றான். ஒன்றும் சொல்லவில்லை.

“இவன் சொல்றான் சார்…அந்த அய்யா உப்பு சத்தியாகிரகம் பற்றி எப்படி அருமையாச் சொன்னாரு, கேட்டீங்க இல்ல…அந்த வகுப்புல எங்களைக் கொன்னீங்க மிஸ்னு சொல்லி சிரிக்கிறான் சார்…..இப்பவும் சிரிக்கிறது பாரு…”. என்றார்.

நான் சங்கடத்தில் நெளிந்தேன்…

“உண்மையில் பசங்க கிட்ட வரலாற்றுப் பாடத்தை எப்படி எடுத்துச் சொல்லணும்னு ஒரு புது பார்வை கெடச்சது சார்..ரொம்ப நன்றி சார்” என்றார் ஆசிரியை. வேறென்ன வேண்டும்!.
ஜெகந்நாதன் பள்ளிக்கூட மாணவர்களிடம் பேச, ஒரு தொழிற்சங்க ஊழியரான என்னை ஏன் தேர்வு செய்தார் என்று தெரியாது. அதற்குப்பின் பல பள்ளிகள், சில கல்லூரிகளில் போய்ப் பேசி விட்டு வந்திருக்கிறேன். என் பணி நிறைவு பற்றிய செய்தி அறிந்தவுடன், ஈரோடு பேராசிரியர் நா மணி அவர்கள், அடுத்த ஆறாம் நாள் என்னை அவர் பணியாற்றும் கல்லூரியில் 500 மாணவர்களிடையே வாசிப்பு பற்றிப் பேசும் ஒரு பெரிய நிகழ்ச்சி ஏற்பாடு செய்து பேச வைத்தார். அண்மையில், சோழிங்கநல்லூர் அரசுப் பள்ளிக்குச் சென்று பாடம் நடத்த வாய்ப்பு வழங்கினார் அறிவியல் இயக்கத் தோழர் மலர் விழி.

இந்த ஆண்டின் பெருமழை வெள்ளம் சூழ்ந்த து எல்லோரும் 2015 டிசம்பர் 1ம் தேதி பெய்த பெருமழை குறித்தே பேசிக் கொண்டிருந்தோம். எனக்கோ நினைவில் வேறு ஒன்று ஓடிக்கொண்டிருந்தது. அந்தப் பெருமழைக்கு இரண்டு நாட்கள் முன்பு, மதுரையில் நடந்த தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 40 ஆண்டு நிறைவு விழாவும், மறுநாள் நவம்பர் 30 திண்டுக்கல் புத்தகக் கண்காட்சி நிகழ்ச்சியும், இதில் திண்டுக்கல் நிகழ்வில் உரை நிகழ்த்த அழைக்கப்பட்டிருந்தேன்!
முதல் நாளே, மதுரையிலும் கனமழை. திண்டுக்கல் புறப்பட நினைக்கையில், பேராசிரியர் ச மாடசாமி அய்யா அவர்களிடமிருந்து அலைபேசி அழைப்பு வந்தது, “நீங்களும் திண்டுக்கல் கூட்டம் போகணும் இல்ல, எப்படி போகப்போறீங்க, ஏன்னா நான் கார் ஏற்பாடு செஞ்சிருக்கேன், நீங்களும் வாங்களேன், பேசிக்கிட்டே போகலாம்” என்றார்.

ஆஹா…இதைவிட வாய்ப்பு ஒன்று உண்டுமா? ஆனால், அவருக்கு சந்தேகம் இருந்தது, ‘நீங்க அழைச்சுக் கேளுங்க, இந்த மழையில கூட்டம் நடத்துவங்களா’ என கேட்டுக்கொண்டார். அங்கே தோழர் ஆர் எஸ் மணியோ, நீங்க வந்துருங்க பார்த்துக்கலாம் என்றார். அங்கே போய்ச் சேர்ந்தபோது, பெருமழையில் கண்காட்சி முழுக்க வெள்ளத்தில் சிக்கியிருக்க நிகழ்ச்சிகள் எல்லாம் ரத்து செய்யப்பட்டு இருந்தன. ஆனாலும், பேரா. எஸ் எம் பேச வேண்டிய நிகழ்ச்சிக்காக, ஆசிரியர் பயிற்சி கல்லூரி மாணவர்கள் வந்து இறங்கிக் கொண்டிருந்தனர். எப்படியோ சமாளித்து அந்த நிகழ்ச்சி நடந்து முடிந்தது. பேராசிரியர் திரும்ப மதுரைக்குப் புறப்பட்டுப் போனார். எனக்கு திண்டுக்கல்லில் இருந்து தான் சென்னைக்கு டிக்கெட் பதிவு செய்யப்பட்டு இருந்தது. எப்படியும் மாலை நிகழ்ச்சிகள் கிடையாது.

ஆனால், தோழர் மணி என்னை விடுவதாயில்லை. திடீர் ஏற்பாடு செய்து அங்கே மகரிஷி வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளியில் 400 மாணவ, மாணவியரிடம் பேச வைத்தார், இரண்டு மணி நேரம். அற்புதமான மாலை நேரம் அது! ரயிலடிக்கு வந்தபின்பும் மாணவர்கள் அலைபேசியில் அழைத்துப் பேசிக் கொண்டிருந்தனர். அந்த அன்பு வெள்ளத்தில் இருந்து சென்னை வந்து சேர்ந்தபின்பு இங்கே வீட்டிச் சுற்றிலும் மழை நீர் வெள்ளம் சூழத் தொடங்கியது!
வேர்கள் அறக்கட்டளை சார்பில் தோழர் நளினி, காஞ்சிபுரத்தில் வலியில்லா வகுப்பறை பட்டறைகள் நடத்துகையில் அவர் ஒருங்கிணைப்பில், மாணவரோடு கலந்துரையாடி விட்டு வருவது தெவிட்டாத அனுபவம். 2013 அக்டோபர் மாத நிகழ்வு ஒன்றின் நிறைவில் ஒரு குறும்புக்கார மாணவன், “என் கிட்ட நோட்டு எல்லாம் இல்ல, இதில உங்க கையெழுத்து போடுங்க சார்” என்று நீட்டினான், தனது உள்ளங்கையை – அதில் பதித்தேன், என் பேனாவை அல்ல, ஓர் அன்பு முத்தத்தை, என் கையெழுத்தாக!

இப்போது கல்லூரிக்குச் சென்று திரும்பிய அனுபவமும் அப்படியான சிலிர்ப்பை ஏற்படுத்தியது! கடந்த சில ஆண்டுகளாக, வாய்ப்பு இருக்கும் போதெல்லாம் என்னை அழைக்கும் லயோலா கல்லூரி பேராசிரியர் இரா காளீஸ்வரன் அவர்கள் அழைப்பில் சென்று வந்த அனுபவம் இது.

எத்தனை எத்தனை பள்ளிகள், கல்லூரிகள், மாணவர்கள்!

இருந்த போதிலும், என்னை மாணவர்கள் முன்பு கொண்டு நிறுத்திய அன்புத் தோழன் ஜெகந்நாதனை நினைக்காமல், வகுப்பறைக்குள் என்னால் ஒரு போதும் செல்ல முடிந்ததில்லை. ‘வாத்தியார் வேலைக்குத்தான் பா, நீ போய் இருக்கணும்’ என்று ஓயாது என்னைச் சொல்லிக் கொண்டிருந்த என் அன்புத் தகப்பனாரையும்!

13 Comments on “வகுப்பறைக்குள் வங்கி ஊழியர் / எஸ் வி வேணுகோபாலன்”

  1. அருமையான பதிவு.நம் இருவருக்கும் நிறைய ஞாபகசக்தி பிரச்சினை அது தான்

    1. எளிமையான சொற்களோடு
      உரைநடை உங்களுக்கு அழகாய் வருகிறது…சுயசரிதம்
      எழுதக்கூடிய அளவிற்கு நிகழ்வுகள்குவிந்துகிடக்கின்றன. இசையை ரசிக்கத்தெரிந்தமனம்.ரசனையோடு நகரும் நாட்கள்.அருமை.

  2. உலகை கவனித்து உள் வாங்கி வெளிப் படுத்தும் உங்கள் திறனே, மாணவரின் காதை திருகி கூட்டி வந்த ஆசிரியரையும் உங்கள் மாணவராக்கியது சில மணித்துளிகளுக்காவது. நல்ல வேளை ஆசிரியராகமலேயே ஆசிரியராக உள்ளீர்கள்.

  3. துள்ளி குத்துகாலிக்கும் குழந்தைகளும் துள்ளி தெறிக்கும் மழைத்துளியும் அழகோ அழகு!
    சந்திப்பு இன்னமும் சந்தித்தால்
    தமிழின் வளமும் தன்னம்பிக்கையின்
    பலமும் பெறுவார்கள் இளம் சமுதாயம்!

  4. இது நாள் வரை, நீங்கள் சிறந்த எழுத்தாளர் என்று நினைத்திருந்தோம். சிறந்த பேச்சாளருமா. கலக்குங்க. கலக்குங்க….

  5. உங்கள் நினைவாற்றலும் சொல்வளமும், நடையும் அபாரம். அதற்கு நிகராக உங்களின் பேச்சாற்றலும், கதைசொல்லும் திறனும் எவரையும் ஈர்க்கும் சக்திகொண்டது. தொட்டணைத்தூரும் மணற்கேணி நீங்கள் தொடரட்டும் உங்கள் பணி. வாழ்த்துகள்.
    எ. சண்முகம்.

  6. சரித்திர பாட ஆசிரியர், குறும்பு மாணவர் பரிகாசம் நேரில் பார்த்தது போல் வாய்விட்டு சிரித்து விட்டேன். நேரம் போவதே தெரியாது என்பது, நேரடியாக உங்கள் பேச்சை கேட்டவர்களுக்குத்தான் தெரியும்.

Comments are closed.