
(1)
படைப்பவன் கடவுள், காப்பவன் கடவுள்
அழிப்பவன் எப்படி? அன்பே சிவம்,
என்பதால் கேட்கிறேன், தெரியுமா பதில்?
“சிவனே போற்றி போற்றி”.
(2)
பிறத்தல் போட்டி, வாழ்தல் போட்டி
இருத்தல் போட்டி, இறத்தல் போட்டி
இப்படி இருக்கையில் எப்படி சொல்ல
“சிவனே போற்றி போற்றி”.
(3)
சிவனை பார்த்தால் ஒரு கேள்வி
“கடவுள் இல்லை” என்று சொன்னாரே
அவர் இன்று சொர்க்கத்திலா? நரகத்திலா?
“சிவனே போற்றி போற்றி”.
(4)
போற்றியவனுக்கு சொர்க்கம், போற்றாதவனுக்கு நரகம்,
இடைப்பட்டவனுக்கு என்ன என்பது சொல்?
முடிவு செய்கிறேன் சொல்வதா? வேண்டாமா?
“சிவனே போற்றி போற்றி”.
(5)
நல்லவனை நல்லவனாய் இருக்க விடு,
கெட்டவனை நல்லவனாய் மாற விடு,
வல்லவனை நல்லவனாய் வாழ விடு,
“சிவனே போற்றி போற்றி”.
(6)
கோவிலுக்குச் சென்றால் சிவனை பார்க்கலாம்,
மருத்துவனைக்கு சென்றால் மனிதனை பார்க்கலாம்.
ஏழை முகத்தில் எதனைப் பார்க்கலாம்?
“சிவனே போற்றி போற்றி”.
