பானுமதி கண்ணன்/மன அழகு

ஆளுக்கு ஒரு குடத்தைத் தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டு, இரண்டு மைல் தள்ளியிருக்கும் பொதுக்கிணறு க்குத்  தண்ணீர் பிடிக்கப் போகிறபோதெல்லாம், முதல்நாள் இலவச டிவியில் பார்த்த படத்தைப் பற்றிப் பேசிச் சிரித்துக்கொண்டு போவது அந்த மூன்று பெண்களுக்கும் வழக்கம்.

“ஐயோ…நேத்து பார்த்த படத்துல ஒருத்தன் வர்றான் பாரு.கருப்பா.குண்டா.ஓட்டைப்பல்லோடு.! எப்படித்தான் இவனுகயெல்லாம்  நடிகன்  ஆனாங்களோ தெரியல! இவனைவிட எம்புருசனே அழகு!” என்றாள்  பார்வதி. மற்ற பெண்களும் சிரித்தார்கள்.

அவர்களுடன் அவ்வப்போது கூட  வரும் பார்வதியின் எட்டு வயது மகள் ஆனந்திக்கு மூக்கு விடைத்தது. யாரையும் உருவ கேலி பண்ணக் கூடாது. அது தப்பு  என்று ஸ்கூலில் பகவதி டீச்சர் சொல்லிக் கொடுத்திருக்காங்க. இவர்களானால்.

“யம்மோவ்? ஒனக்கு ஓரு விஷயம் தெரியுமா? பக்கத்தூருல தண்ணி எடுக்க இப்பவெல்லாம் ஆரும் நம்மளைப்  போலக் கால் கடுக்க நடக்கிறது இல்லயாம்! அங்க தெருவுக்குத்தெரு போர்வெல் வந்தாச்சு! யாரு போட்டாங்க சொல்லு பார்ப்போம்?” என்றாள்.

“ஆரு?” என்றார்கள் மூவரும் கோரஸாய்.

“இப்போ நீங்கக் கேலி பண்ணிச் சிரிச்சீங்களே…அந்த நடிகரு தான்! அதுவும் அவர் உழைச்சுச் சம்பாதித்த தன் சொந்தக்காசிலே! ” என்று அவர்கள் மூக்கை  உடைத்தாள். 

122 words

2 Comments on “பானுமதி கண்ணன்/மன அழகு”

Comments are closed.