ஜெ.பாஸ்கரன்/மீனுவின் மீன் வறுவல்!

“இன்னா மீனு, இவ்ளோ சுருக்கால வந்துட்ட?”  கேட்டபடி அருகில் வந்து உட்கார்ந்தாள் கயல்.

“ஆமாம் கயலு. பத்து நாளுக்குப் பொறவு இன்னிக்குத்தான் ஊர்லேர்ந்து வராரு. நாக்கும் ஒடம்பும் செத்துப் போயிட்டிருக்கும் – வூட்டுக்கு சீக்கிரமாப் போயி சமையல் செய்யணும்”.

சதுப்பு நிலம், ஏரிகளை அழித்து வானளாவிய கட்டடங்கள். ஏரிகளில் மீன் பிடிப்பதை விட்டு, பத்து கிலோமீட்டர் தள்ளியுள்ள கடற்கரையில் மீன் வாங்கி, விற்பவர்கள் மீனுவும், கயலும். பள்ளியிலிருந்தே சத்துணவுத் தோழிகள். பரஸ்பர அன்புடன் வாழ்க்கையில் நீந்துபவர்கள்!

“ஓ, அப்ப இன்னிக்கு வீட்ல விருந்துதான்னு சொல்லு!” சீண்டினாள் கயல்.

“செதில் சீவி சுத்தமான மீனை எடுத்து, கொஞ்சம் இஞ்சி தூக்கலா, சோளமாவு சேர்த்த மசாலா துவையல்ல முக்கி, ஒரு மணி நேரம் ஊற வெச்சி, மிதமா சுடற கடாய் எண்ணையில போட்டுப் பொறிச்சா தங்கக் கலர்ல மீன் வறுவல் தயார். கொஞ்சம் புளி கூட்டி மீன் கொழம்பும் வெச்சா, மவராசன் வயிறு ரொம்ப சாப்டும்.”

விழிகள் விரியப் பார்த்தாள் கயல். ‘நம்மாளும் இருக்குதே, எப்பொவும் குத்தம் சொல்லிக்கிட்டு’ கயல் சொல்லவில்லை.

“அப்ப இன்னைக்கு உனக்கும் விருந்து சாப்பாடுதான்”

  “இல்லே கயலு. அவருக்கு மட்டுதான் இந்த சமையலு. இன்னிக்கு நான் கறி, மீனு துண்ணமாட்டேன்! அவரு உடம்புக்கு நல்லபடியா இருக்கணும்னு வியாழக் கிழமை விரதம்”

புன்னைத்த மீனுவின் கண்களில் ஈரம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன