வாசனையா? நாற்றமா?/முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி

வள்ளியும் பொன்னியும் மீனவப் பெண்கள். மூன்று மாதம் முன் பொன்னியைப் பணக்கார வீட்டு மாப்பிள்ளை விரும்பித் திருமணம் செய்து கொண்டான். கணவன் வெளியூர் சென்றதால் அம்மா வீடு வந்திருந்தாள்.

சந்தையில் வள்ளியைப் பார்க வந்த பொன்னியின் முகம் வாடியிருந்தது. கண்களில் கருவளையம்.

“இன்னாடி பணக்காரர் மருமவளே! வூட்ல நல்லாப் பார்த்துக்கலியா? ஏன் இப்படி இருக்கே?” என்றாள் வள்ளி.

பொன்னியின் கண்கள் கலங்கின. 

“நல்லாதான்கா பார்த்துக்கறாங்க. ஆனா தூக்கம் வரல.”

“ஏன்டி?” 

“எங்க மாமனார் பெரிய கடை வெச்சிருக்காரு. வீடு முழுக்க அவர் விற்கிற பொருளோட வாடை. அதனால தூக்கமே வரல.”

வள்ளிக்குச் சிரிப்பு வந்தது. மீன், கருவாடு வாடையில் வளர்ந்தவள் அவள்.

“அப்படி என்ன வியாபாரம்?” 

“பெரிய பூக்கடைக்கா” என்றாள் பொன்னி.

84 words