
விருட்சம் இணையக் கவியரங்கம்
வாசித்த கவிதைகள்
- தேடல்
மனம் ரோசக்காரன்
அறிவு பயந்தாங்கொள்ளி
மனம்
சுறு சுறுப்புக்காரன்
அறிவு சோம்பேறி
மனம் குதிரை வீரன்
அறிவு சப்பாணி
மன அளவுக் கோவில் கோடுகள் இல்லை
அறிவு அளவு கோலில்
அதுவே பிரதானம்
மனம் குருட்டுக் கிரிமினல்
அறிவு செவிட்டு அட்வகேட்
மனம் மாற்றும் மாறும்
அறிவு தேறும் தேற்றும்
மனம் காயப்பட
அறிவு ஆழப்படும்
மனம் விண்
அறிவு மண்
மனம் லேசாக
அறிவு கனக்கும்
பக்க மொரு சிறகு அவை
சிறுபுள் நீ.
- இயற்கை
ஆகாயக்குடையை
சல்லடை ஆக்கி
புகை கக்கி புகை கக்கி
பூவுலகை சூடாக்கி
பிளாஸ்டிக் புழங்கி
மண்ணை ரணமாக்கி
நச்சு நீராய்க் கடலைக் கெடுத்து
காடுகள் கொன்று
மணல் கொள்ளை போய்
ஆறு ஏரி குளங்கள்
கால்வாய்கள்
பிளாட்டுக்களாய் உருமாறி
மண்ணை மலடாக்கி
பெரும் பேறு பெற்றவர்கள்
கூசாமல் கூறுகிறார்
இயற்கை முன்னால்
நீயும் நானும்
எம்மாத்திரம் போங்களென்று.
- பெயர்ப்பலகை
வள்ளுவர் நகர்
பெயர் வைத்தால்
காலி மனைகள்
கூடி விலை போகாதாம்
வித்தை அறிந்த
சேட்டுக்கு
வள்ளுவர் விழாவில்
முன்வரிசையில்
நாற்காலி.
- ருசி
யானையைப்
பிச்சை கேட்க
பழக்கிய மனிதன்
குரங்கிலிருந்து
வந்தான் என்பதற்கு
வேறு குழு
வேண்டுமா என்ன.
- இலக்கணம்
அவனுக்கா
அதுபற்றித்தானே
கேட்கிறாய் நீ
அந்தப் பக்கம் போனதே இல்லை
அவன் தெரிந்து கொள்
இவனுக்கும் தான்
அதுபற்றி என்ன தெரியும்
சுத்தமாய்ச்சூன்யம்
தத்து பித்து என்று உளறுவான்
அது மட்டுமே
எனக்குத் தெரியும்
எல்லாமும் தான்
அடிக்கடிச் சொல்வேனே
புதிதா என்ன?
சொல்லேன் என்கிறாய் நீ
நல்ல கதை நானும்
சொல்லி விடுவேன்
கேட்டும் விடுவாய் நீ
நான் யாரென்று
இன்னுமா விளங்கவில்லை
என்னத் தமிழனடா நீ.
