சுபாஷிணி ரமணன் /கொண்டாடும் இடத்தில்

பானுமதி முகத்தை மூடிக் கொண்டு, விசும்பிக்கொண்டிருந்தாள்.

அருகில் வந்த மாமியார் நீலா,  “சொல்லச் சொல்லக் கேக்காம போய்ட்டு வந்து இப்போ அழுதுட்டு நிக்கறே.சரி, போகட்டும் விடு. உனக்குன்னு ஒரு கண்ணன் வராமலா போகப்போறான்” என்று சமாதானப் படுத்தினாள்.

பானுமதிக்குத் திருமணமாகி மூன்று வருடங்கள் ஆகிவிட்டன. இன்னும் குழந்தை பிறக்கவில்லை. அவளுக்கோ குழந்தைகள் என்றால் கொள்ளை ஆசை. அவள் ஏக்கத்தைத் தீர்த்துக் கொள்ள கண்ணன் கிடைத்தான்.

கண்ணனுக்குத் தேவையானதெல்லாம்  வாங்கி வைத்துக் கொண்டு  அவனைச் சீராட்டுவாள். அவனும், “அத்தை, அத்தை” என்று இங்கேயே கிடப்பான்.

அவன் மூன்றாவது  பிறந்தநாளுக்கு  நேற்றே அவன் தாய் வந்து சொல்லிவிட்டுப் போனாள். பானுமதி கிளம்பும்போதே அவளுடைய மாமியார் ஜாடையாக அவளைத் தடுத்தும், பானுமதி கேட்காமல் போய்விட்டு இப்போது அழுது கொண்டு இருக்கிறாள்.

‘குடுகுடு’வென்று ஓடிவந்த கண்ணன், தூக்கச் சொல்லிக் கைகளை நீட்டினான். அள்ளி, அணைத்துக் கொண்டாள் பானுமதி.

பின்னாலேயே வந்த அவன் தாய், “ நீங்க வாங்கிட்டு வந்த சட்டைதான் போடுவேன்னு அடம் பிடிச்சு போட்டுட்டு இங்க ஓடி வந்துட்டான் அக்கா” என்றாள்.

“குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே” என்று கூறிச் சிரித்தாள் நீலா.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன