தீக்கலியை விரட்டும் பாவலன்/ மீ.விசுவநாதன்

அண்டம் யாவும் அவளுரு – அதில்
அணுவைப் போல என்னுரு
கண்ட துண்டம் சிறுதுளி – நான்
காணா மிச்சம் பெருவெளி

அப்ப டியோன்தான் பாரதி – அவன்
அயற்சி இல்லாப் பொன்னொளி
தப்ப டிபோடு வோர்க்கெலாம் – அவன்
தர்ம டிதந்த மாகவி

பாடப் பாடப் பரவசம் – அவன்
பாட்டின் ஆழம் பெருங்கசம்
வாடிப் போன மனத்துளும் – ஒளி
வானம் காட்டும் கவிமனம்

பண்பை உயர்த்தும் பாவகை – அதைப்
படிக்கப் படிக்க இன்சுவை
நண்பா என்றே அணைக்கிற – அவன்
நமது நாட்டு மண்சுவை.

ஏலம் போல மணக்கிற – நம்
இதயக் குகைக்குக் காவலன்
காலம் நினைத்து மகிழ்கிற – தீக்
கலியை விரட்டும் பாவலன்

One Comment on “தீக்கலியை விரட்டும் பாவலன்/ மீ.விசுவநாதன்”

  1. “அண்டம் யாவும் அவளுரு – அதில்
    அணுவைப் போல என்னுரு
    கண்ட துண்டம் சிறுதுளி – நான்
    காணா மிச்சம் பெருவெளி” –

    என்ற வரிகள் உங்களை எட்டாத உயரத்தில் கொண்டு வைக்கின்றனவே!

Comments are closed.