
மாப்பிள்ளை வீட்டார் வருகைக்காக ராகவன் வீடு விழாக்கோலம் பூண்டிருந்தது. மாப்பிள்ளை அசோக் ஒரு ஐடி நிறுவனத்தில் வேலை செய்கிறான். அவன் தந்தை விஸ்வநாதன் கொஞ்சம் ‘வித்தியாசமான’ பேர்வழி.
நிச்சயதார்த்தப் பேச்சுக்கள் மெல்ல நகர்ந்தபோது, விஸ்வநாதன் தனது வழக்கமான பாணியில் கேள்விக் கணைகளைத் தொடுத்தார்.
”உங்க பெண்ணுக்கு சமைக்க தெரியுமா?”
பெண்ணின் தந்தை ராகவன் பெருமையுடன் சொன்னார், “ரொம்ப நல்லா சமைப்பாள். சௌத் இந்தியன், நார்த் இந்தியன், சைனீஸ்னு எல்லாத்துலயும் பட்டையைக் கிளப்புவா!”
திடீரென குரலைத் தாழ்த்திய விஸ்வநாதன், “எல்லாம் சரிங்க… இப்பத்தான் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு அதிகமா இருக்கே, உங்க பெண்ணுக்கு அடுப்பு இல்லாமல் சமைக்க தெரியுமா?” என்று ஒரு போடு போட்டார்.
வீடே ஒரு நிமிடம் நிசப்தமானது. ராகவன் என்ன சொல்வதென்று தெரியாமல் முழிக்க, உள்ளே இருந்து காபியுடன் வந்த பெண் சுவேதா புன்னகையுடன் பதிலளித்தாள்.
”நிச்சயமா தெரியுமே மாமா! அடுப்பு இல்லாமலேயே ‘தயிர் சாதம்’, ‘அவல் உப்புமா’, ‘வெஜிடபிள் சாலட்’, ‘பானி பூரி’, ‘பேல்பூரி’, ‘பிரட் சாண்ட்விச்’னு ஒரு பெரிய லிஸ்ட்டே பண்ணுவேன். இன்னும் சொல்லப்போனா, அடுப்பு எரியாமலேயே உங்க பையன் வாய்க்கு ருசியா ‘ஐஸ்கிரீம்’ கூட செஞ்சு தருவேன்!”
அசோக் ரகசியமாகச் சிரிக்க, விஸ்வநாதன் அசந்து போனார். சுவேதா விடவில்லை, “அதுமட்டும் இல்ல மாமா, காஸ் தீர்ந்து போனா கவலையே படாதீங்க… நீங்க போடுற ‘மொக்கை ஜோக்’லயே என்னால ஒரு அண்டா அரிசியை வேக வச்சிட முடியும்!”
மொத்த வீடும் சிரிப்பொலியில் அதிர, விஸ்வநாதன் அசட்டுச் சிரிப்புடன், “பரவாயில்லையே, பொண்ணு சமையல்ல மட்டும் இல்ல, சமயோசிதத்துலயும் கில்லாடி தான்!” என்று சரணடைந்தார்.

ஆஹா சூப்பர்