
!
“என்ன வள்ளி, கொழந்தைய தூக்கிட்டு எங்கப் போற?” கேட்ட சரோஜாவின் குரலில் சந்தேகம்.
வள்ளிக்கும், சரோஜாவுக்கும் அந்த மகப்பேறு மருத்துவ மனையில் பத்து வருடப் பழக்கம். ஆயாக்கள் ஆனாலும் பிரசவத்திற்கு வரும் பெண்களுக்கு அத்தனைப் பணிவிடைகளையும் கரிசனத்துடனும், முக மலர்ச்சியுடனும் செய்பவர்கள். அவர்களும் பிள்ளையைப் பெற்றவர்கள்தானே!
“ஸ்பெஷல் வார்டு அம்பதாம் நிம்பர் ரூம்ல இருக்குற ஆபீசரம்மாவோட கொழந்தை. பொறந்து ஆறு நாளாவுது. அந்தம்மாவுக்கு இன்னும் தையல் பிரிக்கல…”
“அதெல்லாம் சரி. அதுக்கு நீ கொழந்தைய எங்க தூக்கிக்கினு போற? கொழந்தை டாக்டராண்ட காமிக்கவா?”
“அதுக்கு நா ஏன் தூக்கிக்கினு போறேன்? அவரே ரூம்முல வந்து பார்ப்பாரில்லே..”
“பின்ன?” சரோஜாவுக்கு சந்தேகம் வலுத்தது.
“இல்ல… இந்தப் புள்ளைக்கு அத்தோட அம்மாகிட்ட கெடைக்கிற பால் பத்தலை, ராவிக்கும் அழுதுகினே
இருக்குது. அதனால…”
கோபத்துடன் சரோஜா, “அதனால..” என்று குரலை உயர்த்தினாள்.
“ஜெனரல் வார்டு ஏழாம் நிம்பர் பெட்ல இருக்குதே காமாட்சி, அத்தோட கொழந்த குடிச்சது போக, மீதி நெறையப் பால் கட்டிக்கினு அவஸ்தைப் படுது. வீணாக்காம, இந்தக் கொழந்தைக்கு எடுத்துவிடச் சொல்லி கேட்டுக்கினேன். ரெண்டுபேரும் ஒத்துக்கினாங்க. கொழந்தைப் பசிக்கு பால்தானே முக்கியம், யாருதுன்றதா முக்கியம்?”
மகிழ்ச்சியில் வள்ளியை அணைத்துக்கொண்ட சரோஜா, ஜெனரல் வார்டு காமாட்சியை அந்த அம்மனாகவே பார்த்தாள்.
